Friday, April 30, 2021

அம்மா

 நேற்று சாலை சிக்னலில் ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். என் இடுப்பு உயரம் மட்டுமே இருந்த சிறுமி. குட்டி மனிதர்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இந்தக் குழந்தை கவனம் ஈர்த்ததற்கு வேறு காரணமும் உண்டு. அந்த சிறுமியைக் காட்டிலும் சிறிய இன்னொரு குழந்தை ஆனந்தமாக அக்கா இடுப்பில் சவாரி மேற்கொண்டிருந்தது. சிறுமி அதனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். கண்களில் அப்படி ஒரு வாஞ்சை. சிக்னல் காத்திருப்பு இரண்டே நிமிடங்கள். அந்த நேரத்திற்குள் அந்தக் கண்களின் மொழி புரிய ஒன்று நமக்கு காமரா கண்கள் வேண்டும். அல்லது அவ்வளவு பகிரங்கமான நிகழ்வாக அது இருந்திருக்க வேண்டும்.அப்போது தோன்றிய எண்ணங்களின் வடிவமே இந்த போஸ்ட்.

பெண் குழந்தைகள் Special. பெண்கள் அம்மா ஸ்தானம் பெற வயதாவதோ கல்யாணம் ஆவதோ முக்கியம் இல்லை. மனசில் காருண்யம் உள்ள எல்லாரும் அம்மாதான்.பண்டைய நாள்களில் தம்பி பாப்பா பிறந்த கணம் முதல் பெண் குழந்தை பாதி அம்மாவாகி விடும். இப்போ உள்ள நாம் இருவர் நமக்கொருவர் குடும்பங்களுக்கு இந்த செய்திகள் Out of syllabus.அன்பாக இருப்பவள் அம்மா. மற்றவர் குறைகளைப் பெரிது படுத்தாதவள் அம்மா. மன்னிக்கத் தெரிந்தவள் அம்மா. எல்லாம் பண்ணி விட்டு சொல்லிக் காட்டாமல் இயல்பாய் இருப்பவள் அம்மா. சக உயிர்களின் துன்பம் காண சகியாதவள் அம்மா. பொறுமை காப்பவள் அம்மா. இதெல்லாம் இருந்தால் ஆறு வயசு சிறுமி அம்மாதான். இந்த எந்த குணமும் இல்லாத அறுபது வயதுப் பெண் சும்மாதான். மிக முக்கியமான இன்னொன்று. அர்த்தநாரீஸ்வர தத்துவம் கூறுவது போல பெண்ணிடம் ஆண் தன்மைகள் உண்டு. ஆணிடம் பெண் குணம் உண்டு. அம்மாவின் குணங்கள் கொண்ட அற்புதமான Men இருக்கிறார்கள். தாயுமானவ ஸ்வாமி மாதிரி.

பேசலாம்.....

Monday, April 26, 2021

போர்

 வாழ்வு மூன்று கட்டங்களில் நகர்கிறது. இளமைப் பருவம். கல்யாணத்திற்கு முற்பட்ட பருவம். மத்தியில் உள்ள பருவம். முதுமை. வாழ்வை Rewind பண்ணிப் பார்ப்பவர் அனைவருமே ஏனோ சற்று அதிகம் பின்னால் போய் தங்கள் இளமைக்காலங்களையே அசை போடுகின்றனர். அப்போது அதுதான் அவர்கள் குடும்பமா. நடுவில் நடந்த கல்யாணம் குழந்தைகள் கணவன் மனைவி எல்லாரும் Guest role ஆ. ஏன். விடை எனக்கும் தெரியவில்லை. இளமை Carefree ஆனது. பிணைக்கும் கட்டுகள் இல்லை. பொறுப்புகள் இல்லை. கல்யாணம் நம்மைப் பெரியவர்களாக்கி விடுகிறது. தலைவனும் தலைவியும் ஆக்கி விடுகிறது. தலைவனாகத் தகுதி வேண்டும். வீடோ நாடோ எதுவானாலும். ஆனால் கல்யாணங்கள் அரை வேக்காடுகளுக்கிடையேதான் நடக்கிறது.  அனுபவத்தை ஆசானாக கொண்ட வாழ்க்கைக் கல்வி தொடங்குகிறது.

பல நாள்கள் தாண்டி தொடர்கிறேன். வாழ்க்கைப் புத்தகத்தைப் படிக்கும் போது இனிமையான அத்தியாயங்கள் படிக்கவே விரும்புகிறோம். இயற்கைதான். ஆனால் சாத்தியமா என்றால் இல்லை. அதில் சுவையும் இல்லை. நிழல் இருப்பதாலேயே நிஜம் உணரப் படுகிறது.  வெயிலே நிழலின் அருமையை உணரச் செய்கிறது. சிறு ஊடல்கள் சுவைதான். ஆனால் ஊடலும் கூடலும் வள்ளுவர் காலம். இப்போதெல்லாம் வன்முறைதான். சண்டைகள் வன்முறைதான். நேற்று வீட்டில் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது கொஞ்சம் வாக்குவாதம் காராசாரமானது. ஓ சண்டை வேண்டாம். எனக்குத் தலைவலி வந்துவிடும் என்று இடத்தை விட்டுப் போக எத்தனித்த போது அம்மா போகாதே பேசு. இதற்குப் பெயர் சண்டையா என்றனர் குழந்தைகள். அப்போது கேள்வி பிறந்தது. எது சண்டை. 

அசோக மஹாசக்ரவர்த்தி நிகழ்த்தினது ஒரு போர். குருசேத்திர யுத்தமும் போர். ஆங்கிலேயர்களுடன் நாம் நடத்தியது போர். சொத்து தகராறுகள் போர். குழாயடி சண்டையும் போர். குரல் உயர்த்துவதும் போர்தான். உடல் காயப் பட்டால் அதன் பெயர் போர் எனில் மனம் காயப் படுவதும் போர்தான். எந்தப் போரிலும் ஞாயத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டுதான் தேடணும். பின் என்ன. இரு தரப்பிலும் சிறு தவறாவது இல்லாமல் போர் மூளாது. வெளிப்பார்வைக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால் Consciousness ல் ஆவது தப்பு இருந்தால்தான் சண்டை வரும். எனக்கு என்னவோ அசோக சக்ரவர்த்தி நிகழ்த்தின போருக்கும் வீட்டில் குரல் உயர்த்தும் சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் உணர்வளவில் வித்யாசமே இல்லை என்றே தோன்றும்.தப்பு என்றால் தப்புதான். யார் செய்தாலும். குச்சி கொடுத்து அடி வாங்குவது போல தலைவலியை வலியப் போய் வாங்கிக் கொள்ளலாமா.

Thursday, March 18, 2021

பாத்திரம்

 இன்று ஒரு குறும் செய்தி வந்தது. எங்கே இருந்து என்கிறீர்களா. வாட்சப்தான். செய்திப் பரிமாற்றம் வேறு வழிகளில் நடந்து விடக்கூடாது என நாம் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வாட்சப்பை ஆதரித்து வருகிறோமே. சும்மா திட்டக் கூடாது. நல்லனவும் அவ்வப்போது வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்து விடுமாமே அது போல Vigilant ஆக இருந்தால் வாட்சப்பினால் பலன் உண்டு. இன்று என்ன செய்தி பார்ப்போம். ரமண பகவானிடம் ஒரு பக்தர் கேட்டாராம், விவேகானந்தர் தன் குரு மூலம் கடவுளைக் கண்டாரே அது போல உங்களால் எனக்குக் கடவுள் காட்சி தர முடியுமா என. பகவான் புன்முறுவலித்து விட்டு சொன்னாராம் முடியும், நீ விவேகானந்தரானால் அது முடியும் என.. இந்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது.அதுதான் பாத்திரமறிந்து பிச்சை இடல்.

இரண்டு கோப்பை மட்டுமே கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் நான்கு கோப்பை நீர் விட்டால் என்ன நடக்கும். நீர் கீழே வழியும் வீணாகும். நாம் பல சமயம் சின்ன பாத்திரமாக இருந்து கொண்டு இன்னும் இன்னும் என ஆசை கொள்கிறோம். தகுதிக்கு மீறி நம்மில் இடப்படும் எல்லாம் வீணே. சரியாக வாழ்வைப் படிப்பவர்க்கு எந்தப் பாத்திரத்தில் எதை எந்த அளவு இட வேண்டும் என்பதும் தெரியும்.இந்த இரண்டு நாளாக சமையல் அறையில் எந்தப் பாத்திரத்தைப் பார்த்தாலும் மனிதர்கள் போலவும் மனிதர்களைப் பார்த்தால் பாத்திரங்கள் போலவும் தெரிகிறது. அது சற்று உதவவும் செய்கிறது. யாரிடம் எந்த அளவு பேசலாம் என்று புரிகிறது. கொள்ளளவு கம்மியாக உள்ளதில் பாத்திரத்தின் பங்கில்லை. அது வடிவமைத்தவனின் Choice என்று  புரிகிறது. கடவுள் சிலரை எல்லாவற்றையும் ஏற்கும் பெரிய பாத்திரம் போலப் படைத்துள்ளான். அவர்களிடம் எதுவும் கூறலாம். உறவாடலாம். இடப்படுபவை கீழே சிந்தும் பயம், இல்லை. ஆனால் குட்டி வாளி என்று தெரிந்தும் அதில்  அதிகத் தண்ணீரைக் கொட்டப் பார்த்து அடடா எல்லாம் கீழே வீணில் போகிறதே என்ற புலம்பல் தவிர்க்க வேண்டும். 

பெரிய பாத்திரம், தான் அப்படி இருப்பது தன்னால்தான்  என்ற எண்ணம் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமோ அந்த அளவு Foolish எந்த கர்வமும். இடப்படுபவற்றை அமைதியாகத் தாங்குவது ஒரு கொடுப்பினை. சரியாக இருந்தால் சரியானது தேடி வரும். வரவில்லை என்றால் அந்தப் பொருள்கள் வேறு பாத்திரத்திற்குப் போக வேண்டியவை. நாம் அனைவரும் பாத்திரங்கள். பண்ணினவன் பார்த்துக் கொண்டுள்ளான்.

ரஞ்ஜனி த்யாகு

Mother Leads

Tuesday, March 16, 2021

அன்பும் சிவமும்

 அன்னையே சரணம்

எழுத பேனாவும் பேப்பரும் தந்த சுகம் கணினி அதாவது கம்ப்யூட்டர் தரவில்லை. அப்படியானால் என் வயதென்ன. சுகமும் துக்கமும் மாறி வரும் வாழ்வில் சற்றே நிரந்தரம் என்று என்ன உண்டு. கடந்த சில நாட்கள் ஏதேதோ யோசனைகள். என் மாமியாரின் இந்தப் பயணம் நிறைவடைந்து நமக்குத் தெரியாத அடுத்த பயணம் ஆரம்பித்தது. ஆரம்பமாகி இருக்க வேண்டும். மனிதன் Powerless என்பதையே எல்லா நிகழ்வுகளும் உணர்த்தின. எனக்கு விழுங்கவும் ஜீரணிக்கவும் இயலாத ஒன்று என்னவென்றால் மனித இனத்தின் முதன்மைப் படுத்திக் கொள்ளும் ஆசை. மனசு வருத்தத்தில் உள்ள போது கூட, என் வருத்தம் உன்னததை விடப் பெரிது என்பது Silly ஆக உள்ளது. எதற்கென்றே புரியாத Rituals. அதில் வசதிக்கேற்ப செய்து கொள்ளும் மாற்றங்கள். பணத்தால் எல்லாவற்றையும் மூடி விடலாம் என்ற நம்பிக்கைகள். வேதகாலம் தொட்டு வரும் நம்பிக்கைகளை வசதி கருதி Breach செய்வதுடன் நிறுத்தாமல் ஆயிரம் ரூபாயும் ஒரு ஆப்பிள் பழமும் அதற்கு எப்படிப் பரிகாரமாகும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது இதெல்லாம் கூட நெருஞ்சி முள் போல மனசில் நிற்கவே செய்கிறது.சக உயிர்களிடம் இந்த வாழ்வில், பூமியில் உள்ள போது அன்பு செலுத்துவதே அர்த்தம் உள்ள செயல். நம் தொடர்புகள் அனைத்தும் அந்த உயிர்க் கூட்டுடன்தான். உயிரும் கூடும் வேறு. சேர்ந்து இருக்கும் உயிரும் கூடும் மட்டுமே அன்பை உணர இயலும். கூட்டை விட்டு வெளியேறின உயிருக்கு யாரையும் தெரியாது. மறுபடி ஒரு கூடு புகுந்து அடுத்த பயணம். வேறு சக பயணிகள். கிளம்பி விட்டவர்கள் பற்றிய ஆர்பாட்டம், ஆரவாரம் ஏன் அக்கறை கூட Useless. இருக்கும் போது பேசப்படும் கடும் சொற்களுக்குப் பரிகாரம் இல்லை. காட்டப் படும் கடுமைக்கு ஆயிரம் ரூபாயும் ஆப்பிள் பழமும் உதவாது. அதே போல, மறைந்த பின் பண்ணும் Fuss க்கும் பொருள் இல்லை.ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருப்பது அவரவர் Choice. சடங்குகளை நம்புவது நம்பாதது அவரவர் விருப்பம்.

ஆனால்

ஆத்திகம் பேசும் அடியவர்க்கு சிவம் என்றால் அன்பு.

நாத்திகம் பேசும் நல்லவர்க்கு அன்பு என்றால் சிவம்

ஏனோ முரண்பாடுகள். ரசிக்கவில்லை.

Thursday, February 4, 2021

சிலை

 இன்றைய பொழுது விடிந்தது. ஒவ்வொரு விடியலும் ஒரு செய்தியுடன் ஒரு Aspiration உடன் விடியும். Wait. இந்த நாளை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்த பின் Post க்குள் செல்லலாம். நம் நினைவு அடுக்குகளில் உள்ள பல மனிதர்களில், பல விஷயங்களில், ஏதோ ஒன்று அல்லது நிகழ்கால சாதா நிகழ்வொன்று தரும் அழுத்தம் அல்லது மகிழ்ச்சியுடன் விடியல் நிகழும். சூரியன் தன் பயணம் தொடங்கி சில மணி நேரம் சென்றபின் துயில் எழுந்தால் அந்தந்த நாளுக்கு என்ன செய்ய வேண்டும், இன்று என்ன சமையல், எந்த வங்கிக் கணக்கு Mature ஆகிறது, அதைத் துடைக்கணும், வண்டியில் பெட்ரோல் தீர்ந்திருக்குமே, இன்று குழந்தைக்கு ஃபீஸ் கட்டணுமே, சாய்சங்கரா மேட்ரிமோனில வந்த கோயம்புத்தூர் பையன் ஜாதகம் நம்ம பொண்ணுக்கு சேருமா, அவன் தலைல இப்பவே வழுக்கை எட்டிப் பார்க்கிறதே, இன்று அந்த சிடுமூஞ்சி Boss ஐ எப்படி சமாளிப்பது, காஸ் சிலிண்டர் நாம் இல்லாத சமயம் வந்தால் யார் வாங்கி வைப்பார்கள் என்ற பல முக்கிய விஷயங்களே மனதை ஆக்ரமிக்கும். கிண்டலாகச் சொல்லவில்லை. எல்லாம் முக்கியம்தான். கர்மபூமியில் இருந்து கொண்டு, அதைக் கிண்டல் செய்து, வித்தியாசமாக இருப்பதாய் நினைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எந்த Realisation ம் இங்கேயே நடக்க வேண்டும். இன்று சூரியனை முந்திக் கொண்டேன். அதனால் சுற்றுப்புறம் முழு மோனம். மனதுக்குள் ஒரு வாக்கிங். தனியாக. சுகமாக. 

ஒவ்வொரு நாளுமே நீண்ட வாழ்க்கைக்கு ஒப்பானதுதான். பல தவறுகள், திருத்திக் கொள்ள நேரம் இருப்பதாய்  நாம் நினைப்பதால் நிகழ்பவையே.Indifference, கோபம், அலட்சியம்,Depression,பயம், பொய் இவற்றுக்கெல்லாம் ஏது நேரம். ஒவ்வொரு நாளும் மனசுக்குப் பிடித்ததை, நல்லதை, சக ஜீவன்களுக்கு இணக்கமானதை செய்து விட்டுப் போகலாமே. கடவுள் படைப்பில் வெவ்வேறுஉயிரினங்களுக்கு வெவ்வேறு Life Span உண்டு. ஒரு நாள், இத்தனை வருடங்கள் என்ற கணக்கு உண்டு. நமக்கு ஒன்றும் தெரியாது. தெரியாதவற்றுடன் விளையாடக் கூடாது. தினமுமே சரியாக இருக்கவே வேண்டும்.

இன்று பகுள பஞ்சமி. த்யாகராஜஸ்வாமி ஆராதனை. பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு மாஸ்க் வழி பாடினார்கள். அதில் மிகவும் முதியவர் ஒருவர் கலந்து கொண்டார். குரங்கில் இருந்து வந்த நாம் மறுபடி குரங்காகி மறைகிறோம். யௌவனம் கர்வம். ஆனால் எந்த ப்ரயோஜனமும் இல்லை அந்த கர்வத்தால். முதுமை முகத்தில் கோலம் இடுகிறது. ஆனால் அது ஒரு அழகே. இப்போது எனக்கும் வயதானதால் கூறவில்லை. எப்போதுமே குழந்தைகளும் முதியவர்களும் அழகுதான். வெகுளித்தனம் அழகு. அனுபவம் அழகு. நடுப்பட்ட யௌவன கர்வம் அழகில் சேர்த்தி இல்லை. ஆனால் அந்த ஈகோ துளியாகிலும் இருப்பதாலேயே பூமியில் வாழ்வு சாத்தியமாகிறது.மறுபடி அந்த பெரியவருக்கு வருவோம். Explicit ஆக சொல்ல தயக்கமாக உள்ளது. அவரைப் பார்த்து ஆஞ்சனேய ஸ்வாமிதான் வந்து உட்கார்ந்துள்ளார் எனத் தோன்றியது. முகம் மனித முகமாகவே இல்லை. ஆனால் அப்படி ஒரு தேஜஸ் அந்த முகத்தில்.மனித குலத்துக்கு பற்பல கண்டுபிடிப்புகளை வழங்கிய மேதைகள் பலர் உள்ளார்கள். அவற்றில் பல தவிர்க்க இயலாத பிரிவின் கீழ் வருபவை. Electricity யில் தொடங்கி இண்டர்நெட் வரை. ஆனால் பாட்டும் கவிதையும் அந்தப் பிரிவில்  வராதவை. அது போன்ற ஒன்றை செய்து காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மஹானுபாவருக்கு ஒரு ஆராதனை. அவர் கூறுகிறார் எத்தனை மஹானுபாவர்கள் உண்டோ அந்தரிகி வந்தனமு என்று.

எனக்கு அந்த Humility வராதா என்று உள்ளது. என்னமோ முயற்சி செய்து கொண்டுள்ளேன். அல்லது அப்படி நினைத்துக் கொண்டுள்ளேன். ப்ரபஞ்சத்துடன் ஒன்றுபட்ட ஒரு வாழ்வில் கருத்து வேறுபாடுகளுக்கும் கலகங்களுக்கும் அவசியம் என்ன? பல முறை செதுக்கப்பட்ட பின்னரே சிலை வடிவம் பெறுவது போல, செதுக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். உளியால் வாங்கும் அடி போன்ற நிகழ்வுகள். ஆனால் அது நல்லதே. முழுமை அடைந்த சிலையே உபயோகமாகும். சிலை விஷயத்தை எடுத்துக் கொண்டால் சிற்பிதான் செதுக்கும் வேலை செய்ய வேண்டும். நாம் உயிர்ச் சிற்பங்கள். நாமே நம்மை அழகிய சிற்பமாக்கிக் கொள்ள இயலும். கண்ணாடி முன் நின்று, பௌடர் போதுமா கண்மை சரியாக உள்ளதா என்று பார்ப்பது போல மனக் கண்ணாடியில் பார்த்தால் எவற்றை வெட்ட வேண்டும் என்று புலப்படும். கற்சிலைகளை வடிவமைக்க வேண்டும். ஆனால் நம் போன்ற உயிர்ச் சிற்பங்களில் வேண்டாததை  வெட்டினால் மட்டும் போதும்.போஸ்ட் பல விஷயங்களுக்குப் பயணித்து விட்டது. அதனால் ஓய்வெடுக்கப் போகிறது. 




Friday, January 29, 2021

24 மணி நேரம்

 இன்று காலை கண் முழித்தது என் சகோதரிக்கு பேரன் பிறந்த செய்தியுடன். சந்தோஷம். குழந்தை பிறப்பைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். ஆனால் வாழ்வைக் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை. யார் வாழ்வையோ கொண்டாடி, சுயம் தொலைத்து வழி நடத்தப்பட்டு, மற்றவரை வழி நடத்தி, வாழும் நாட்களை நகர்த்துகிறோம் என்றே படுகிறது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வு சரித்திரம் என்றால் என் வாழ்வும் சரித்திரமே. நான் சரித்திரம் ஆகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டா குழந்தை பிறக்கிறது? இல்லையே. பத்து வயது வரை குழந்தைகள் சரி. அல்ஜீப்ராவும் சரித்திரமும் அறிவியலும் அறியாத பிள்ளை முட்டாள் இல்லை. தன்னை அறியாதவர்களே முட்டாள். இன்று பூத்த அந்த குழந்தை சரித்திரம் படைக்கட்டும்.

மூன்று நாளாக பொங்கல் கொண்டாட்டங்கள்.பொங்கலுக்கு முதல் நாள் என் மாமனார் உடல் நிலை மோசமானது. சற்று பயம் அளித்தது. ஏன் பயம். நம்மால் அறிய முடியாதனவற்றை பற்றின ஹேஷ்யங்கள் செய்வதால் பயம். ஏன் மனிதமனம் இவ்வாறு இயங்குகிறது. அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நல்லது பற்றின சந்தேகம். அல்லாதன பற்றின கவலை. இந்தக் கூட்டு எண்ணக் கலவையா வாழ்க்கை. சாலை ஓரம் பஞ்சடைந்த கண்ணுடன் சில்லறைப் பொருள் விற்கும் சிறுமி நாளை பொங்கல் பண்டிகை என அறிவாளா. எதனால் அவள் சாலை ஓரம் அலைகிறாள். நாம் ஏன் காணாதது போல வேறு திசை நோக்கி கார் கண்ணாடியை திறந்து தொலைக்காதே என்று குழந்தைகளுக்கு நல்ல பாலபாடம் அளிக்கிறோம். இவை எல்லாம் யோசிக்க வேண்டியவையே. உலக அரங்கில் நம் இடத்தை மற்றவருடன் ஒப்பு நோக்குவது இயல்பாக நிகழ வேண்டிய ஒன்றே. எத்தனை கிடைத்துள்ளது. நாம் அடைந்தவற்றைப் பற்றிக் கேள்வி எழுவதில்லை நமக்கு. பிறருக்குக் கிடைத்த ஒன்று நமக்குக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏக்கம் அளிக்கிறது. பலருக்கு கிடைக்காத ஒன்று ஏன் எனக்கு இவ்வளவு சுலபமாய்க் கிடைத்தது என்ற உள் தேடல் ஏற்றம் தருகிறது.

நிமிட நேரத்தில் வாழ்வின் காட்சிகள் மாறும் அதிசயம்.இன்று மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர்களை சுற்றி நாடகங்கள் நடப்பதை பார்க்கிறேன். உலகம் சுயநலம் நிறைந்ததே என உணர்கிறேன். நான் இந்த உலகத்தை சேர்ந்தவளே. என்னை உயர்த்திக்கொண்டோ தனிமைப்படுத்திக் கொண்டோ எதுவும் பேசவில்லை. நான் எழுதிக் கொண்டுள்ளது காந்திஜியின் சத்திய சோதனை போன்ற சுயசரிதம் அல்ல. அதனால் எந்த Declaration ம் தரவில்லையே தவிர என்னைப் பற்றியும் மற்றவர் நினைவுகள் எப்படியும் இருக்கலாம். ஆழமாக சிந்தித்தால் அன்றி நம் தவறுகள் நமக்குப் புலப்படுவதில்லை. மருத்துவமனையில் ஒருவர் உள்ள போதே சுற்றங்கள் அவர்களை சிந்தையில் இருந்தும் விலக்கி அல்லது சற்று தள்ளியாவது வைத்து வடுகிறார்கள். கடவுள் தீர்ப்பு எப்படியோ மனிதர்கள் அவர்கள் வாழ்ந்தது போதும் என்று தீர்மானிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு சம்பளம் நின்று விட்டால் என்ன ஆகும் என்ற ஞாயமான கவலை. அதனால் அவள் அவர்கள் திரும்பி விட்டால் போதும் என்கிறாள். அசையாமல் அவர்கள் இருப்பதில் அவளுக்குக் கவலை இல்லை. உண்மையில் வேலை இன்னும் எளிது. 

சுற்றங்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் தாமதப்படக் கூடாதே என்ற பயம். அதை வெளிக்காட்ட இன்னும் பயம். ஒருவர் உயிருடன் உள்ள போதே அடுத்த நம் வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் இவர்கள் நகர்வார்களா என்ற கணக்குப் போடும் ஜீவன் மனிதன் மட்டுமே. பரிதாபம். ஏன் நமக்கு எதையும் முழுமையாகப் பண்ணத் தெரியவில்லை. சந்தோஷம் வரும் போது குதூகலிப்போம். வருத்தம் வரும் போது அதையும் வாய் மூடி அனுபவிக்கத்தானே வேண்டும். மனசு இருப்பதால் ஓயாத கணக்கு. தேவையா. உயிருக்குப் போராடும் ஆத்மா இந்த அதிர்வுகள் தாண்டிப் பிழைக்க வேண்டும். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தால் தான் மருத்துவ மனையில் இருந்த சமயம் நடந்த உலக நிகழ்வுகளை ஒரு நாடகம் போலக் காண ஒரு வாய்ப்பு அளிக்கப் பட்டால், ஓ இவ்வளவுதானா நம் இடம் இந்த உலகில், இதற்காஅவ்வளவு ஓடினோம், எல்லாவற்றையும் சஞ்சீவி பர்வத ஆஞ்சனேயர் போல் முதுகில் சுமந்தோம், பறவை போல லகுவாக இன்றி பளு சுமந்தோம் என்ற எண்ணம் வாராது போகாது. ஆனால் இந்த ஞானம் எல்லாம் வரும். ஆனா வராது. இல்லை என்றால் நாடகத்தின் ஒரு பகுதியாய் இருந்த நாம் மாயத் தளையை அறுத்தெறிந்து விட்டுப் போகாமல் மறுபடி அடுத்த வேடம் ஏற்கத் தயாராவோமா. 

தினம், சற்று அமைதியான சுய ஆய்வு உதவலாம்.அதற்காக இமயமலை போக முடியாது. இருக்கும் இடம் போதும். ஓடும் ரயிலுள் அமர்ந்து வெளிக் காட்சிகளை நோக்குதல் போல இங்கேயே இருந்து கொண்டு, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாடமாக்கிக் கொண்டால் Evening years சலனமின்றி அமையும். வரும் போது எழுதப் படாத வெள்ளைத் தாள் போலத்தானே வந்தோம். விடை பெறுவதும் அவ்வாறே இருக்கட்டுமே. பல வண்ண மை கொண்டு எழுதி  பக்கத்தை நிரப்புவது போல குழப்பிக் கொள்ள என்ன அவசியம். எல்லார் கூடவும் நட்பாக இருப்போம். ஆனால் எல்லாருக்கும் அவரவர், வேலை உள்ளது. நம்மிடம் சொல்ல மாட்டார்களே தவிர எல்லாருக்கும் Self Love பொது. தள்ளி இருப்பது தவறில்லை. இன்றைய போதுக்கு யோசித்து விட்டேன். இனி நாளைதான்.




Tuesday, January 5, 2021

விஜயா விஜயம்

 அன்னை மலர் பாதம் சரணம் 

ஒரு வருடமாய் எதுவும் எழுதவில்லை. இன்று வெளியே வெள்ளம். மனதிலும் எண்ண வெள்ளம். எது அதிகமாகிறதோ அதன் பெயர்தானே  வெள்ளம்? மார்கழி மாதப் பிறப்பும் கூட. இட்லி என்றால் சட்னி சாம்பார் போல மார்கழி என்றால் ஒரு பெரிய பட்டியலே கூட வருகிறது. திருப்பாவை, கோவில், சூடான பொங்கல், போர்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் தூங்க மாட்டோமா என்று நினைக்க வைக்கும், விறைக்க வைக்கும் குளிர், அரங்கன் தரிசனத்துக்கும் பஜனைக்கும் ஆசை கொள்ளும் நல்ல மனசு, தலையணையையும் போர்வையையும் உதற விரும்பாத கெட்ட மனசு, இன்னும் எல்லாம்தான். காலைக் குளிர் தாலாட்டுகிறது. இரவுக் குளிர் தூக்கம் கெடுக்கிறது. காலில் அடிபட்டால் விந்தி நடப்போமே அது போல கோவிட் இந்த ஆண்டை நொண்டத்தான் வைத்து விட்டது. தேடி சோறு நிதம் தின்றுதான் வந்தோம். இந்த வருஷம் ஏனோ வேறு எதுவுமே செய்யவில்லை போல உள்ளது. ஆமாம், என்ன செய்ய வேண்டும்? வாழ்வின் இரண்டாம் இன்னிங்சில் என்னவெல்லாம் செய்யலாம், எது கூடாது?

காலையில் எழுந்தது முதல் வீட்டில் ஒரு தொழில் கூடம் இயங்க வேண்டும் என்றால் அது உணவுத் தொழிற்சாலையே. பசிக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றால் அது வீட்டின் சமையல் அறையே. அங்கு நானே ராணி. நானே மந்திரி. கேள்வி கேட்பாரில்லை. உதவியாளர்கள் கிடையாது என்பதை விட, அது உபத்திரவம் என நானே உதவி எடுத்துக் கொள்வதில்லை எனலாம். Consumers அதாவது நுகர்வோர், அதாவது நான் செய்த உணவை உண்ணும் வீட்டின் அங்கத்தினர்கள் ரொம்பவும் நல்லவர்கள். சாதுக்கள். எதிலும் குறை காணத் தெரியாதவர்கள். இத்தனை காலம் ஓடியே போனது. இப்போது வேறு ஏதும் செய்ய கொஞ்சம் நேரம் வேண்டும் போல இருந்ததால் சமையல் செய்ய விஜயாவை ஏற்பாடு செய்தோம். நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது அவளால் எனலாம்.ஏன் இதை சற்று முன்னால் செய்யவில்லை தெரியவில்லை. காய்கனியாகவும் கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாகவும் இன்னும் எல்லாவற்றிற்கும் நேரம் வைத்துள்ளான் இறைவன். மனித வாழ்வை உற்று நோக்கின் சிறு நிகழ்வுகளிலும் அவன் ஆணை இருப்பது விளங்கும். ஆம். அவன் அன்றி அசைவேது?

ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் முதலில். தன் தேடல் செய்ய உதவும் பல சாதனங்களில் எழுத்தே முதலில் நிற்கிறது எனக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. நிதானப்பட ஒரு மாதம் பிடித்தது. ஆனால் நம் நெருங்கின பேருக்கே அந்த நேரம் நான் என்ன பண்ணுவேன் என்று அறியும் குறுகுறுப்பு உள்ளது. புற இயக்கம் மட்டுமே இயக்கம் அல்ல. நேரம் என்பது மைண்ட் ஸ்பேஸும் கூட. பீரோவை ஒழுங்கு படுத்துவது போல, இடம் மாறி உள்ள எண்ணங்களையும் அடுக்கிக் கொண்டு உள்ளேன். எல்லா புற அதிர்வுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். வார்த்தைகளால், செயல்களால், உணர்வுகளால். ஆனால் எதனால் பதில் சொன்னால் ப்ரச்சினை இல்லையோ அந்த மௌனம் மட்டும் என்னை விட்டு எங்கோ போய் இருந்தது. வாழ்வின் இரண்டாம் பகுதியில் உடல் எல்லா நாளும் இளமையில் இருந்தாற் போல இருப்பதில்லை. தொல்லை தர ஆயத்தமாகும் உடலும் சோர்வடையும் மனமும் நித்ய கூட்டாளிகள். சேர விடக் கூடாது. மித்ரபேதம் செய்யவே வேண்டும்.

மனது லேசில் ஒத்துக் கொள்ளாத பலவற்றில் முதன்மையானது அதிகாரத்தை த்யாகம் செய்வது. காலை சமையலறை போகாமல் இருப்பது ஏதோ ஆட்சி கை மாறின எண்ணமே கொடுத்தது  முதலில். ஆனால் எனக்கென்று கொஞ்சம் நேரம் வேண்டும் என்ற எண்ணம் இன்னும் சற்று வலிமையாக இருந்தது போலும். அவ்வாறு நிகழ்ந்ததுதான் விஜயா விஜயம். மாற்றங்கள் முதலில் உண்டாக்குவது பயம்தான். ஆனால் அனுபவமும் கூட. ஸ்வாமி சித்பவானந்தா பகவத்கீதை உரையில் கூறுகிறார், முதலில் இல்லாமல் இருந்து, பிறகு வந்து மீண்டும் இல்லாமல் போகப் போவதே தேகம் என. விஜயாவை அப்படித்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். எங்கிருந்தோ வந்தாள்.இப்போது எல்லாம் நடக்கிறது. தேகம் போனாலும் ஆத்மா இருக்கும் என்பது போல விஜயா போனாலும் சாப்பாடு நடக்கும். அதனால் இந்த இடைவெளியை ரசிக்க விருப்பம்.

இப்போது மறுபடி முதல் பத்திக்குப் போகிறேன். நல்ல மனசின் ஆசைகள், இன்னும் சற்று கூட நேரம் தூங்க விரும்பும் கெட்ட மனசின் ஆசைகள் எல்லாம் விஜயா புண்ணியத்தில் நடக்கிறது. உடல் அடையும் அனுபவங்கள். உள்ளே உள்ள வஸ்து வேடிக்கை பார்க்கிறது. பார்க்கட்டும்.


கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...