உலகம் ஒரு சுழற்சியின் அடிப்படையில் இயங்குகிறது. சுழற்சியின் ஒரு நிலை மற்றொன்றிற்கு இட்டுச் செல்கிறது. ஜனனமும் மரணமும்தான் பெரிய சுழற்சி. காலையும் மாலையும், இன்பமும் துன்பமும், காற்றும் வெயிலும், வேகமும் நிதானமும் தெளிவாகப் பிரிந்துள்ளன . ஒன்றுள்ள இடத்தில் மற்றது அநேகமாக இருப்பதில்லை. ஆனால் ஜனன மரணம் வேறுபடுகிறது. ஜனனத்தில் சில மரணங்களும் மரணத்தில் சில அழகிய ஜனனங்களும் நிகழ்வதுண்டு. தொடக்கம், முடிவு என்ற வார்த்தைகளை உபயோகித்துக் கொள்கிறேன். சில வார்த்தைகள் படிப்பது, எழுதுவது இரண்டுமே கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது. பௌதீகப் பிறப்பு, முடிவு பற்றினதில்லை கட்டுரை. எண்ணங்களின் பிறப்பும் முடிவுமே . ஒரு வாழ்க்கை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவு முக்கியம் எண்ணங்களும். விளையாட்டில்லை .
சிற்றாசைகள் பிறக்கின்றன. ஓயாது மனத்தாய் சூல் கொண்ட பெண்ணாகவே இருக்கிறாள். பேறு காலம் ஒன்பது மாதம் இல்லை. ஒன்பது வினாடிகளாகக் கூட இருக்கலாம். ஆசைக் குழந்தையின் அளவைப் பொறுத்து அதன் கர்ப வாசம் அமையும். சில ஆசைக் குழந்தைகள் மனக் கருவறையில் நீண்டு தங்கி அம்மாவைப் பாடாய்ப் படுத்திவிடும். சில சரியான காலத்தில் பிறக்கும். வேறு சில குறை ப்ரஸவம் ஆகும். எப்படிப் பிறக்கினும் அந்த ஆசை என்ற குழந்தைக்கு நிர்ணயிக்கப் பட்ட வாழ்நாள் உண்டு. எப்படி தோன்றுவன எல்லாவற்றிற்கும் முடிவு உண்டோ அப்படி. ஆசைகள் பிறப்பதும்,நிறைவேறுவதும், நிறைவேறாது மடிவதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால், சில ஆசைகளின் முடிவில் நிகழும் ஜனனம், முக்கியமானது. பேரரசர் அசோகருக்கு நிகழ்ந்தது போல. ஸ்வாமி அரவிந்தர் ஒரு வருட அலிப்பூர் சிறை வாசத்திற்குப் பின் சொல்கிறார், "ஒரு வருடம்,கானகத்தில், ஒரு ஆஸ்ரமத்தில் நான் இருந்ததாகச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். அது சிறைவாசம் அல்ல. ஆங்கிலேயர்கள் கொண்ட காழ்ப்பின் ஒரே விளைவு நான் கடவுளைக் கண்டதுதான்" என்று. ஸ்வாமி அரவிந்தருடைய யோகவாழ்வின் ஜனனம் நிகழ்ந்தது, அவருடைய தீவிர எண்ணங்களின் முடிவில். இதோ அவருடைய திரு வாக்கில்.
ஒவ்வொரு சிற்றாசையின் முடிவையும் வேறொரு உயர்ந்த நிலையின் தொடக்கமாகப் பார்த்தால் மனச்சலனங்கள் அடங்குகின்றன. பதட்டம் தரும் எல்லாம் ஆசைகள்தான். உள்ளும் புறமும் அமைதியே நிலைக்கட்டும் . அல்ப விஷயங்கள் மீதான பற்றும் பிடிப்பும் நம்மிடம் இருந்து விடை பெறட்டும். மனத்தாய் சூல் கொள்ளும் காலம் முடியட்டும். அவளுக்கு வயசாகிப் போனது. இன்னும் இன்னும் ஏன் ஆசைகள் பிறந்து மடிய வேண்டும்? பிறந்து மடிந்த கோடானுகோடி ஆசைகளின் முடிவில் ஜனித்த சொற்ப நல்லவை நாம் உள்ளவரை நிலைக்கட்டும்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS