Monday, April 13, 2020

வீடு

மெட்ராஸ்
17-11-1990

அன்புள்ள அம்மாவுக்கு,

மீரா எழுதுவது. மனம் முழுக்க வருத்தத்துடன் இந்தக் கடிதம் எழுதுகிறேன். எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும்,என் மனதென்னவோ வேறெதையும் நினைக்க மறுக்கிறது. நம் தாத்தா கட்டின அந்த அழகு வீட்டை விற்க முடிவெடுத்து விட்டீர்களாமே? கரூரில் இருந்து நேற்று வந்த நடராஜ மாமாதான் கூறினார். எப்படி, எப்படிம்மா மனசு வந்தது? அந்த வீட்டுடன் பிணைந்த என் நினைவுகள் மனதை என்னவோ செய்கின்றன. சாணம் தெளித்து, வாசல் அடைத்துக் கோலம் போட்டு, மார்கழி மாதம் சாணத்தில் பரங்கிப்பூ வைத்த அந்த வாசலும், பந்தல் போட்ட காரையும், அப்பா ட்யூஷன் எடுத்த அந்தத் திண்ணையும், தாத்தா கட்டிலில் படுத்திருந்த அந்த ரேழியும், கல்யாணமே நடத்தலாம் போலப் பரந்து விரிந்த அந்தக் கூடமும், வெளிச்சம் உள்ளே வரவே முடியாத அந்தப் பாவுள்ளும், நீ குளிச்சுட்டு, தலைல கட்டின துண்டுடன்  ஸ்லோகம் சொல்லிக் கொண்டே சிரிப்பு மாறாத முகத்துடன் சமையல் செய்யும் சமையல் அறையும், மூன்று தொட்டி, கிணற்றோட இருக்கற கொல்லைப் புறமும் மனசில் சுற்றி சுற்றி வந்து வேதனைப் படுத்துகிறது.

அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மெட்ராஸ்ல ஒரு தீப்பெட்டி வீட்டுக்கு வர முடிவு செய்த உங்கள் மனதெல்லாம் என்ன, கல்லா? இனிமேல், நான் லீவுக்கு எங்கு வருவேன்? என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. இது தவிர உனக்கு எதுவும் எழுதவும் தோன்றவில்லை. அப்பாவை, அத்தையை, பக்கத்து வீட்டு ஜெயாவை, என் ப்ரிய பாட்டு டீச்சரை, சிலும்பாயியை ரொம்ப விசாரித்ததா சொல்லு.

அன்புடன்

மீரா சங்கர்

எழுதி முடித்து லெட்டரைக் கவரில் போட்டு ஒட்டி முடிப்பதற்குள், மீராவுக்கு புடவைத் தலைப்பெல்லாம் நனைந்து விட்டிருந்தது. கண்ணும் கன்னமும் வீங்கி, தலை விண்விண்ணென்று தெறித்தது. கவரைப் போஸ்ட் பண்ணி விட்டு வந்து சூடான காப்பியுடன் டீ வி முன் உட்கார்ந்த போது, மனபாரம் சற்று இறங்கினாற் போல் இருந்தது. கண் காலண்டரைப் பார்த்தது. இன்னும் நாலு நாளில் பதில் வந்துவிடும். எப்போதும் அம்மா உடனே பதில் எழுதுபவள். எதையும் ஒத்திப் போடாதவள்.

நான்கு நாட்கள் ஓடியே போயின. அன்று மீராவின் உடல் சமையல் அறையில் இருந்தாலும், மனம் தபாலை எதிர்நோக்கி காத்திருந்தது. சுவர்கடிகாரம் நின்று விட்டதோ என்று சந்தேகம் கூட வந்தது. " அம்மா, போஸ்ட்" என்ற கூவல் இனிய நாதமாய்க் காதில் ஒலிக்க, வாசலுக்கு ஓடினால் , அம்மாவின் முத்துப் போன்ற கையெழுத்தில், அந்த மஞ்சள் கவர் கதவில் சொருகப் பட்டிருந்தது. பிரிக்கும் முன் படபடப்பு தாங்கவில்லை மீராவுக்கு. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, வாசலைப் பூட்டி விட்டு, சோபாவில் சாய்ந்து, படிக்க ஆரம்பித்தாள்.

கரூர்
19-11-1990

அன்பு மீரா,
பாசத்தில் தோய்ந்த உன் கடிதம் நேற்று வந்தது. எங்கள் அனைவரையும் அது நெகிழ்த்தி விட்டது. மஞ்சள் கலரில் ப்ளூ பார்டர் போட்ட பட்டுப்பாவாடை கட்டி, நீ இந்த வீட்டைச் சுற்றி வளைய வந்த ஞாபகங்கள், நம் வீட்டுக் கொல்லையில் உள்ள ராமபாண மலரின் மணம் போல, எங்கள் மனதில் எப்பவும் வியாபித்துள்ளது. ஆனால், இன்னும் அந்த மஞ்சள் பாவாடையையேதான் நான் கட்டிப்பேன் என்று நீ அடம் பிடிப்பது போல குழந்தைத் தனமாக இருந்தது கண்ணே, உன் கடிதம்.

வாழ்க்கை ஒரு  பயணம்.ஒவ்வொரு இடமாய் வண்டி நின்று போவது போல, நாம் ஒவ்வொரு கட்டமாய் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். பயணப்பட்டே ஆக வேண்டும். மாற்றங்கள் வாழ்வின் நியதி அல்லவா? வீடு பற்றி இத்தனை எழுதி உள்ளாயே, ஆர். மீராவாக இருந்த நீ, கல்யாணமான நாள் முதல், எப்படி கஷ்டமே இல்லாது மீராசங்கரானாய் ? அது போல்தான் இதுவும். நாம் இருக்கும் வீடும், நம் கொல்லையில் உள்ள மரமும், இன்னும் நூறாண்டுக்குப் பின் என்னவாகும் என ஒரு நொடி யோசி. உன் அக்ஞானம் பறந்து போகும்.

எங்கள் குழந்தைகள், நீங்கள் எல்லாம், நாட்டின் வேறு வேறு மூலைகளில் போய் செட்டில் ஆனபிறகு, எங்களுக்கு இங்கென்ன வேலை? எது மகிழ்ச்சி? வீடென்ன வெறும் கல் மண்ணால் ஆன கட்டடமா? மனுஷ மனங்களின் பாசமன்றோ? தனியாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு, எத்தனை நாள் இங்கிருப்பது? அதுதான் இந்த முடிவு.
இப்போ உனக்குக் கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கும்னு நினைக்கிறேன். நீ இரண்டு குழந்தைகளின் தாய். மனசை அலைபாய விடாதே. தெளிவான தாய்தான், தைரியமான பிரஜைகளை உருவாக்குகிறாள். மாப்பிள்ளைக்கு அன்பு  விசாரிப்புகள். வரும் வருஷம் உன்னைப் புது மனுஷியாக்கட்டும்.

அன்பு அம்மா

பின் குறிப்பு: பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கைத் தத்துவம்.

மீராவின் நாலு நாளாய் மாறாத அழுமூஞ்சியைப் பார்க்க பயந்து கொண்டே ஆபீசில் இருந்து திரும்பிய சங்கருக்கு  அவளின் திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை, டீ வி மேல் இருந்த மாமியாரின் கடிதத்தைப் பார்க்கும் வரை. 

காலமாற்றங்கள்

 இன்று தீப்தியைப் பெண் பார்க்க வருகிறார்கள். வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. தீப்தி என் நாத்தனார் லலிதாவின் இளைய பெண். அவர்கள் சென்னைப் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறார்கள் என்பதால் மாமா வீட்டில் வைத்து, பெண் பார்க்க ஏற்பாடு. காபிக்கு டிகாக்க்ஷன் போட்டுக் கொண்டு அடுப்படியில் நின்று கொண்டிருந்த என் மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன. காலச்சக்கரம் பின்னோக்கி ஓடி, எண்பதுகளில் போய் நின்று அசைய   மறுத்தது.

அது ஒரு தை மாதம். பொங்கல் கழிந்து ஒரு நல்ல நாளில், மாப்பிள்ளை பார்க்க உத்தேசம் ஆனது. " பெண்ணை நீங்கள்தான் கூட்டிக் கொண்டு வந்து காட்ட வேண்டும்" என்ற, என் மாமியாரின் முதல் கண்டிஷனுடன் பிள்ளையார் சுழி போடப்பட்டது. சிங்கராஜா போல, தான் வைத்ததே சட்டம் என்று அது வரை வாழ்ந்த என் அப்பாவைக் கெஞ்சி, கூத்தாடி, " நாம் பெண்ணைப் பெற்றவர்கள்" என்று மந்திரம் ஓதி, ஒரு வழியாக, திருச்சி போக சம்மதிக்க வைத்தார்கள் என் அம்மா. அப்பா, அம்மா, நான், தம்பி என நாங்கள் நான்கு பேரும் கிளம்பி, எங்கள் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு மேற்படி வைபவத்தை நடத்த முடிவெடுக்கப் பட்டது. அப்போதெல்லாம் லாட்ஜில் ரூம் போடுவதெல்லாம் நினைத்துப் பார்க்க மட்டுமே முடியும். பெண், எத்தனை பேரிடம் பாஸ் மார்க் வாங்க வேண்டுமோ என்ற கவலை, பெற்றோர்  முகத்தில் நிதர்சனமாய்த் தெரிந்தது.

மாப்பிள்ளையின் பாட்டியில் தொடங்கி, ப்ளஸ் டூ படிக்கும் குட்டித் தம்பி வரை எல்லாரும் ஏக மனதாக சம்மதித்து, பாஸ் மார்க் போட்டு என் திருமணம் நிச்சயம் ஆனது. நிச்சயம் ஆகி, திருமணம் வரை உள்ள நாட்கள், நேர்முகத் தேர்வில் தேர்வாகி, ஆர்டர் கையில் கிடைக்க காத்திருக்கும் இளைஞர்கள் மனநிலை போலத்தான் பெற்றோருக்கு. எனக்கு,  என்னையே வேடிக்கை பார்த்துக் கொள்ளும் மனநிலையே இருந்தது. என் உள்ளே இருந்த ஒன்று, உடல் அடையும் அனுபவங்களை பார்த்துக் கொண்டிருந்தது. திருமணம் நடந்து அதன் பின் வந்த நாட்கள் பலவருடக் கதை. புதுப் பெண்ணாக, வேறொரு வீட்டில் காலம் கழிக்கும் முதல் சில நாட்கள்தான், எத்தனை படித்த வசதியுள்ள பெண்ணாக இருந்தாலும், ஒரு பெண்ணின் வாழ்வில் தர்மசங்கடமான காலகட்டம். அதே தர்மசங்கடம் எனக்கும்தான். உள்ளே இருந்த அதே  ஒன்று, தன் வேடிக்கை பார்க்கும் திறன் தொலைத்து, அனுபவங்களில் திளைத்து, அதிர்ச்சி அடையத் தொடங்கியது.

" காத்தால அஞ்சரை மணிக்குத்தான் எழுந்து வரா " என புகுந்த வீட்டினர் என் காதுபடப் பேசியதைக் கேட்டதில் தொடங்கின என் அதிர்ச்சிகள். அந்த வீட்டில் நமக்கு மிகவும் நெருங்கிய நபரான கணவன் போர்வைக்குள் சுகமாக, சுருண்டு தூங்கும் போது, ஐந்து மணிக்கு எழுந்து, அத்தனை பெரிய வீட்டில், ஒரு சின்னப் பெண், அல்லது நேற்றுவரை, தாய்வீட்டில் குழந்தையாகவே நடத்தப்பட்டவள் செய்ய என்ன உள்ளது? இப்படித்தான், ஒரு மகள், ஆசிரியை ஒரே நாளில் ரோல் மாற்றம் செய்யப் பட்டேன்.

எல்லோரும் சேர்ந்து திருமண ஆல்பம் பார்க்கும் போது," பொண்ணு கலர் கம்மி, ஊஞ்சல் போட்டோவில் ரொம்ப கறுப்பு தெரியறது "

" உங்க வீட்ல தோசை செஞ்சதே இல்லியா, எல்லாம் கிண்டிப் போறது பாரு"

" ஏண்டா ராஜு,  ஒவ்வொரு தடவ மெட்ராஸ்லேந்து  திருச்சி வரப்பவும், உன் மாமனார் வீட்டுக்கும் போயே ஆகணுமா? "

" குழந்தைக்கு கிருஷ்ணான்னு பேர் வைக்கணுமாம், இதெல்லாம் நாங்க பெரியவர்கள் இல்லே முடிவு பண்ணணும்? அப்பா பேரு வெச்சு, வருண்னுதான் கூப்பிடணும்."

இப்படி இன்னும் எவ்வளவோ! ஒரு வீட்டின் மூத்த பிள்ளையாய்ப் பிறப்பது வரமா? தெரியவில்லை. ராஜு மிகவும் நல்ல பிள்ளை. அவர் மாறி எதுவும் பேசினால், வீட்டுப் பெரியவர்களுக்கு இதயநோய் வரும். மயக்கம் வரும். அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. என்னிடமும்  ரொம்பப் பிரியம்தான். திருமணம் ஆன நொடி முதல், என்னை அந்நியப் படுத்திப் பார்க்காத ராஜுவுடன்  வாழ்க்கைப் பயணம் நகர்ந்ததில், பெரிய குழந்தை வருண் ஆட்டிசத்துடன் பிறந்து, எனக்கு வாழ்வின் சூட்சுமங்களை உணர்த்தியதில், எப்படியும் வேலை பார்த்திருக்க முடியாது, ஒரு சிறப்புக் குழந்தையை வளர்க்கணுமே என மனதைத் தேற்றிக் கொண்டதில், தவறில்லா இறைவன் முடிவால், இரண்டாவது குழந்தை ப்ரீதி பிறந்து, சிறு வருத்தங்களும் இல்லாது செய்ததில் மனம் பழையனவற்றைக் கிளறாமல் அமைதி காக்கப் பழகியது.

" மன்னி, அவங்க எல்லாம் வந்தாச்சு. இன்னும் கிச்சன்ல என்ன பண்றீங்க?
லலிதாவின் குரல் என்னை நிகழ்காலத்துக்குக் கூட்டி வந்தது. பையன், அவன் பெற்றோர், தம்பி என நான்கு பேர் வந்திருந்தனர். முதல் அறிமுகங்கள் முடிந்தவுடன், " தீப்தியைப் பார்க்கலாமா ஆண்ட்டி? " என்றான் ஆனந்த் காஷுவலாக.
" ஆமாம் லலிதா, குழந்தையை வெளியே கூப்பிடுங்க. நோ பார்மாலிட்டீஸ். அவளும் நம்ம கூட வந்து சேர்ந்து உக்காந்துக்கட்டும். "என்றாள் ஆனந்தின் அம்மா.
தீப்தி தனக்கு சவுகரியமான ஒரு எளிமையான சிவப்பு சல்வாரில் அறையில் இருந்து வெளிப்பட்டு எல்லோருக்கும் பொதுவாக கையைக் கூப்பிவிட்டு, ஆனந்தின் அம்மா அருகில் போய் பதவிசாக அமர்ந்து கொண்டாள். சற்று நேரம், பெண், பையனுடைய படிப்பு, வேலை, இரு பக்கத்தாரின் பூர்வீகம் போன்ற பேச்சுகள் சுவாரஸ்யமாக நடந்தன.

" ஆனந்த், உனக்கு தீப்தியைப் பிடிச்சிருக்கா கண்ணா? அவ கூட ஏதும் தனியா பேச இஷ்டப்படறியா? என்றார் ஆனந்தின் அப்பா.

" தீப்தியை மட்டும் இல்லப்பா, எனக்கு இவங்க எல்லாரையும் பிடிச்சிருக்கு. தனியா பேச ஏதும் இல்ல. அவங்க எதுவும் சொல்லணுமான்னு கேளுப்பா"

" தீப்தி, சொல்லும்மா, நாங்க பெரியவர்கள் பேச ஆரம்பிக்கவா, உனக்கு சொல்ல எதுவும் இருக்கா? " -- ஆனந்தின் அப்பா.

" ஆமாம் அங்கிள், நான் பேசணும். எங்க அம்மா அப்பாவுக்குப் பையன் கிடையாது. நானும், அக்காவும்தான். ஆனந்துக்கும் சிஸ்டர்ஸ் கிடையாது. இந்தக் கல்யாணம் நடந்தா, நான் உங்க பெண்ணாகவே மாறி, உங்ககிட்ட பாசமா இருப்பேன். அதே போல ஆனந்த் என் பெற்றோருக்கு மகன் மாதிரி இருக்கணும்னு ஆசைப் படறேன். நீங்களும் என்னை ஆனந்த் மாதிரி, உங்க குழந்தையாவே எண்ணி அன்பா, இயல்பா இருக்கணும்.  நம் இரண்டு குடும்பங்களுக்கு நடுவில ஒரு அழகான உறவு ஏற்படணும்ங்கிறது தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. "

ஆனந்தின் அம்மா ஒரு நிமிடம் கண்மூடி மெளனமாக இருந்தாள். என் போல எத்தனை வருட நிகழ்வுகள் மனத்திரையில் ஓடியதோ. கண்கள் லேசாகப் பனித்திருந்தன.

" தீப்திம்மா, நீ சொல்லவே வேண்டாம். என் குழந்தை கையைப் பிடித்துக் கொண்டு வரப்போற எங்கவீட்டு மஹாலக்ஷ்மி நீ. இனி அது உன் வீடு. உன் மனசு வாடற மாதிரி எதுவும் அங்க நடக்காது. " என்றபடி லலிதாவிடம் திரும்பினாள்.

" லலிதா, என்ன பேச மாட்டேன்றீங்க? ஆனந்தை உங்க பிள்ளையா ஏத்துக்க சம்மதம்தானே? "

வரவேற்பறை, சந்தோஷ அதிர்வுகளால் நிறைந்தது. என் மனதில் பட்டுப்பூச்சிகள் சிறகுவிரித்துப் பறந்தன.

Tuesday, March 31, 2020

கொரோனா நாட்கள்

கடந்து விட்ட அரை நூற்றாண்டை நின்று திரும்பிப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் ஓடின பிறகு கூட நின்றிருக்கலாம். ஆனால் ஓட்டம் எத்தனை நாள் தெரியாது. நிகழ்வுகள் மறந்து போகும் சாத்தியக்கூறுகளும் உண்டு. என் வயது ஐம்பத்து ஏழு. முதல் ஏழு வருடங்கள் நான் குழந்தை என்று ஒதுக்கி விடுகிறேன். சுக்ர தசை ஒவ்வொருவருக்கு வாழ்வின் ஒரு பகுதியில் வரும். எனக்கு அது எட்டு வயதில் வந்தது எனலாம். சந்தோஷம் தவிர வேறொன்றும் அறியா பத்து ஆண்டுகள். அன்பான வீடு சுகம். பசி அறியா வயிறு சுகம். நன்றாகப் படிப்பு வருவது சுகம். கொண்டாடப்பட்ட முதல் மாணவியாய் இருத்தல் சுகம். நினைத்தது கிடைத்தது சுகம். வேலை செய்யவே தேவை அற்று இருந்தது சுகம். வசை மொழி என்றால் என்ன என்பதே அறியாதிருந்தது சுகம். ஆனால் சக்கரம் என்றால் சுற்றியே ஆக வேண்டும். நிற்றல் அதன் தன்மையல்ல . வாழ்க்கைச் சக்கரமும் அப்படித்தான்.என் வாழ்க்கைச் சக்கரமும் சுற்றி வருகிறது. பாதி முடித்து விட்டது. பாதைதான் சற்று கரடுமுரடாக ஆனது. வண்டியை ஓட்டுபவன் நினைத்தால் சக்கரத்திற்கு சேதம் இல்லை. மனித ஓட்டுனர்கள் திறமையானவர்கள் அல்லர்.

இந்தத் தருணம் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி உலகை உலுக்கிக் கொண்டுள்ளதால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். அரசின் ஆணை. தனிமைப் படுத்திக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப் பட்டிருக்கிறோம். உடலால் தனிமைப் படுத்திக் கொள்வது வைரஸ் பரவுவதைத் தடுக்குமாம். உடலை பாதிக்கும் நுண்கிருமி வைரஸ். மனதை செயல்பட விடாது முடக்கும் வைரஸ் உண்டு. அதற்கும் தனிமைப் படுத்திக் கொள்வதே தீர்வு. எதை? மனதை. சாலைகள் அமைதிப் பூங்காவாக உள்ளன. மாசு இல்லை. அமைதி. வாகனங்களின் அசுரவேகம் இல்லை. விபத்துகள் இல்லை. சண்டைகள் இல்லை. மனம் வெளியே அலையாமல் இருந்தாலும் இதே நல்ல விளைவுகள் நிகழும். இது யோசிக்க வேண்டிய நேரம். பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஈடுபட வேண்டிய தருணம் இல்லை. இயற்கை அன்னை தேவை ஏற்படும் போது குறுக்கிட்டு உலகை சமநிலைக்குக் கொண்டுவருகிறாள். நாம் ஒத்துழைத்தால் இன்னும் வேகமான முன்னேற்றங்கள் நிகழும். ஆனால் பத்தாம் வகுப்புப் பாடத்தை பரீட்சை முடிந்தவுடன் மறந்து போகும் மாணவன் போல் நாம் மறுபடி எல்லாக் குளறுபடிகளும் செய்வோம்.

யோசிக்க நிறைய நேரம் உள்ளது. உடல்  அடைந்த அனுபவங்களை அசை போடுகிறேன். இந்தப் பதினைந்து நாட்களில் எதையாவது மிஸ் பண்ணினேனா? இல்லை. ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றில் இருந்தும்,எல்லாரிடத்திருந்தும்  விலகி இருப்பது ஒரு வித அமைதிதான். நமக்கு யாரும் தேவை இல்லையா நாம் யாருக்கும் தேவை இல்லையா? தெரியவில்லை. என் அம்மா, உடன்பிறப்புகள் தவிர யாரும் என்னைத் தேடவில்லை. நானும் யாரையும் தேடவில்லை. என் குடும்பம் கூடவே உள்ளதால் அவர்கள் பற்றி சொல்லவில்லை. நான் சொல்வது ஒரு நல்ல மனநிலையில் இருந்துதான். எல்லார் நினைவும் அடி மனதில் உள்ளது. ஆனால் உறங்கிக் கொண்டு மட்டுமே உள்ளது. இதுதான் சரியான இருப்பு, என்னளவில். நேற்று ப்ரம்மகுமாரி ஷிவானி அவர்களின் பேச்சு கேட்டேன். பற்று, அன்பு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக விளக்கி இருந்தார்கள்.

 பற்று நம்மைப் பிடித்துக் கொள்கிறது. கவலை கொள்ள வைக்கிறது. நீ எனக்காக பிரார்த்தனை செய்வாயா, நானும் உனக்காகப் பண்ணுவேன். நீ என்னை நினைத்து மகிழ்வாயா, நானும் அதையே செய்வேன். நீ என்னை நினைத்து அழுவாயா, நானும் உனக்காக அழுவேன். உன் பிரச்சினை எல்லாம் என்னதும். எனக்கு ஏதோ ஒன்று என்றால் நீ அதை உன் சொந்த பிரச்சினை போல் நினைக்க வேண்டும். இந்த மாதிரி பற்று, உதவியை விட உபத்திரவம்தான். நமக்கென்று சில நல்ல குணங்கள் உண்டு. எதிரே உள்ளவர் யாரானாலும், எப்படிப் பட்டவரானாலும், என்ன செய்தாலும் மாற்றிக் கொள்ள இயலாத ஒன்று. அது பிணைப்பதில்லை. இந்த இருபது நாட்கள் எதை நாடினோம்? எதையும் இல்லை. அதற்கு ஏன் அரசு உத்தரவு வேண்டும்? நாம் அனைவரும் நல்லவர்கள். நமக்கு நம்மை விட யார் நன்மை செய்ய இயலும்? என்ன, வேறு வேலை இல்லை என்றால் மட்டுமே, செய்ய வேண்டிய விஷயம் என்றில்லாது தினம் ஐந்து நிமிடமாவது செய்து கொள்ளும் சுயபரிசீலனை, போக்குவரத்தற்ற சாலை போல் மனதைத் தெளிவாக்கும்.

Friday, February 28, 2020

முன்னுரை

2020ம் வருஷத்தின் பிப்ரவரி மாதத்தின் 29 ம் நாளின் அதிகாலைப் பொழுதில் என் இரண்டாவது புத்தகத்தின் ஜனனம். முதல் புத்தகத்தின் சலசலப்பு இரண்டாவதின் முன்னுரையாக மலர்கிறது. சந்தோஷம் , சங்கடம் இரண்டும் அதிர்வுதான். சந்தோஷ அதிர்வுகள் மெத்தனமாக்கி விடுகின்றன. சங்கடத்தால் விளையும் அதிர்வுகளே தூண்டுகோலாகின்றன . தீபம் பிரகாசமாய் எரிய தூண்டுகோல் தேவை. எழுத்துக்களைப் புத்தக வடிவமாகப் பார்க்கும் என் ஆசையை ஊக்குவித்த தூண்டுகோல் நண்பர்களுக்கு முதல் நன்றி. மறுபடி ஒரு பிப்ரவரி 29ஐ சந்திக்க நான்கு ஆண்டுகள் ஆகும். எல்லா ஆண்டுகளும் நல்லபடி நகர பிரார்த்தனைகள். பேதை மனதின் குறுகுறுப்புகள். நாலு வருடம் என்பது காலமாற்றம், இடமாற்றம், இன்னும் எத்தனையோ. மனமாற்றமுமா? இன்னும் செம்மையான மனம் அருள்வாளா அன்னை? வேண்டிக் கொள்ளலாம். புத்தகத்தின் உள்ளே செல்லலாம். சந்திக்க வேண்டிய மனிதர்கள் காத்துள்ளார்கள். தருணங்கள் காத்து நிற்கின்றன . சேர்ந்து பயணிக்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

Wednesday, January 1, 2020

முதல் நாள் 2020

ஜனவரி 1, இன்று. லீப் வருஷம். அடுத்த பத்தாண்டுகளின் ஆரம்பம் எனலாம். இன்னும் பத்து வருஷங்கள் 202 என்று தொடங்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் பார்க்க இரண்டு நிலைகள் உண்டு. மேல், கீழ். மேலே இருந்து, கீழ் நோக்கின், வாழ்க்கைச் சிக்கல்கள் விலகுகின்றன. கீழிருந்து மேல் நோக்குவது ஜிலேபி பண்ணுவது போல் சிக்கல். ஒரு பொருளின் முப்பரிமாணங்கள் காண்பது கலை . சுலபம் அல்ல. எல்லாம் வெறும் கோடுகளாகத் தெரிந்தால், எங்கேயிருந்து பார்த்தால் மூன்றாம் டைமென்ஷன் தெரியுமோ அங்கிருந்து நோக்க வேண்டும். அப்போதுதான் உண்மை பிம்பம் புலப்படும். அதற்கு சும்மா இருக்க வேண்டும் என அறிந்து கொள்ள செய்யும் முயற்சியே 2020 ன் முதல் பாடமானது.

பொம்மலாட்டத்தை நடத்துபவனுக்கு தானே பொம்மைகளை ஆட்டுகிறோம் என்று தெரியும். பார்வையாளனுக்கு அது தெரிவதில்லை. அதனால்தான் காட்சி ரசிக்கிறது. நாம் உலகில் பார்வையாளர்கள். நடப்பனவற்றை ரசிக்கலாம். இது காட்சி என்றுணர்ந்ததால் அதில் வரும் சோக நிகழ்வுகள் நம்மை காட்சி முடியும் நேரம் தாண்டி, தொடுவதில்லை. ஆனால் வாழ்வெனும் நாடகம் நமக்கு அந்த சலுகையை அளிப்பதில்லை. நாடகம் நடக்கும் போதே நாடகம் என்று தெரிந்து விட்டால் நலம். அதுதான் இரு நோக்கு. எல்லோரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்கிறார்கள். அளிக்கப்பட்ட பாத்திரத்திற்கேற்ப ஆடுகிறார்கள். இதில் தப்பில்லை. அவரவர் இயல்பே ஒருவரை இப்படி இப்படி நடக்கத் தூண்டுகிறது. அதுதான் பிரச்சினைகளை சற்றே மேலே போய் நோக்குவது. கீழிருந்து நோக்குவது என்ற சொல் தொடரை, நான் கேவலமான அர்த்தத்தில் உபயோகிக்கவில்லை. நடப்புகளுடன், மனிதர்களுடன் நம்மைப் பிணைத்துக் கொண்டு படும் அவதி என்ற அர்த்தம்தான் அதற்கு. 

வெளி உலகுடன் நாம் கொள்ளும் தொடர்பின் போது பார்வையாளராக இருக்கும் நாம், நம் உள்ளே நோக்கும் சமயம், ஆட்டுவிக்கப் படும் பொம்மைதான். எந்தக் காட்சியில் யாருடன் இருக்க வேண்டும், எத்தனை பெரிய பங்கு நம்முடையது, யார் வாழ்வில் நான் ஹீரோ, யாருக்கு வில்லன், அதே போல் யாருடன் அதிக வசனங்கள் பேசப் போகிறோம், யாருடன் சில காட்சிகள் மட்டும்தான், எந்த கதாபாத்திரத்தை சந்திக்கவே போவதில்லை எல்லாம் ஆட்டுபவனின் முடிவு. சிவமே அன்பு என்னும் ஆத்திகவாதிகளுக்கும் சரி, அன்பே சிவம் எனும் மற்றவர்களுக்கும் சரி. உள்ளேயும் வெளியேயும் போர் நிகழாமல் நம்மை சேர்வன, சேர்பவர்கள் நம்முடன் பயணிக்க ஆட்டுபவன் செய்த முடிவு. அகப்போர், புறப்போர் இரண்டும் அபாயமே. போர் மேகங்கள் சூழும் போதே பின்வாங்கி விட்டால் நலங்கள் வரும். 2020 ன் முதல் நாள் முடிவல்ல, இது. வரப்போகும் பத்தாண்டுகளின் இனிய துவக்கம்.

பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...