அன்னை மலர் பாதம் சரணம்
ஒரு வருடமாய் எதுவும் எழுதவில்லை. இன்று வெளியே வெள்ளம். மனதிலும் எண்ண வெள்ளம். எது அதிகமாகிறதோ அதன் பெயர்தானே வெள்ளம்? மார்கழி மாதப் பிறப்பும் கூட. இட்லி என்றால் சட்னி சாம்பார் போல மார்கழி என்றால் ஒரு பெரிய பட்டியலே கூட வருகிறது. திருப்பாவை, கோவில், சூடான பொங்கல், போர்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் தூங்க மாட்டோமா என்று நினைக்க வைக்கும், விறைக்க வைக்கும் குளிர், அரங்கன் தரிசனத்துக்கும் பஜனைக்கும் ஆசை கொள்ளும் நல்ல மனசு, தலையணையையும் போர்வையையும் உதற விரும்பாத கெட்ட மனசு, இன்னும் எல்லாம்தான். காலைக் குளிர் தாலாட்டுகிறது. இரவுக் குளிர் தூக்கம் கெடுக்கிறது. காலில் அடிபட்டால் விந்தி நடப்போமே அது போல கோவிட் இந்த ஆண்டை நொண்டத்தான் வைத்து விட்டது. தேடி சோறு நிதம் தின்றுதான் வந்தோம். இந்த வருஷம் ஏனோ வேறு எதுவுமே செய்யவில்லை போல உள்ளது. ஆமாம், என்ன செய்ய வேண்டும்? வாழ்வின் இரண்டாம் இன்னிங்சில் என்னவெல்லாம் செய்யலாம், எது கூடாது?
காலையில் எழுந்தது முதல் வீட்டில் ஒரு தொழில் கூடம் இயங்க வேண்டும் என்றால் அது உணவுத் தொழிற்சாலையே. பசிக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றால் அது வீட்டின் சமையல் அறையே. அங்கு நானே ராணி. நானே மந்திரி. கேள்வி கேட்பாரில்லை. உதவியாளர்கள் கிடையாது என்பதை விட, அது உபத்திரவம் என நானே உதவி எடுத்துக் கொள்வதில்லை எனலாம். Consumers அதாவது நுகர்வோர், அதாவது நான் செய்த உணவை உண்ணும் வீட்டின் அங்கத்தினர்கள் ரொம்பவும் நல்லவர்கள். சாதுக்கள். எதிலும் குறை காணத் தெரியாதவர்கள். இத்தனை காலம் ஓடியே போனது. இப்போது வேறு ஏதும் செய்ய கொஞ்சம் நேரம் வேண்டும் போல இருந்ததால் சமையல் செய்ய விஜயாவை ஏற்பாடு செய்தோம். நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பது அவளால் எனலாம்.ஏன் இதை சற்று முன்னால் செய்யவில்லை தெரியவில்லை. காய்கனியாகவும் கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாகவும் இன்னும் எல்லாவற்றிற்கும் நேரம் வைத்துள்ளான் இறைவன். மனித வாழ்வை உற்று நோக்கின் சிறு நிகழ்வுகளிலும் அவன் ஆணை இருப்பது விளங்கும். ஆம். அவன் அன்றி அசைவேது?
ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் முதலில். தன் தேடல் செய்ய உதவும் பல சாதனங்களில் எழுத்தே முதலில் நிற்கிறது எனக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. நிதானப்பட ஒரு மாதம் பிடித்தது. ஆனால் நம் நெருங்கின பேருக்கே அந்த நேரம் நான் என்ன பண்ணுவேன் என்று அறியும் குறுகுறுப்பு உள்ளது. புற இயக்கம் மட்டுமே இயக்கம் அல்ல. நேரம் என்பது மைண்ட் ஸ்பேஸும் கூட. பீரோவை ஒழுங்கு படுத்துவது போல, இடம் மாறி உள்ள எண்ணங்களையும் அடுக்கிக் கொண்டு உள்ளேன். எல்லா புற அதிர்வுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். வார்த்தைகளால், செயல்களால், உணர்வுகளால். ஆனால் எதனால் பதில் சொன்னால் ப்ரச்சினை இல்லையோ அந்த மௌனம் மட்டும் என்னை விட்டு எங்கோ போய் இருந்தது. வாழ்வின் இரண்டாம் பகுதியில் உடல் எல்லா நாளும் இளமையில் இருந்தாற் போல இருப்பதில்லை. தொல்லை தர ஆயத்தமாகும் உடலும் சோர்வடையும் மனமும் நித்ய கூட்டாளிகள். சேர விடக் கூடாது. மித்ரபேதம் செய்யவே வேண்டும்.
மனது லேசில் ஒத்துக் கொள்ளாத பலவற்றில் முதன்மையானது அதிகாரத்தை த்யாகம் செய்வது. காலை சமையலறை போகாமல் இருப்பது ஏதோ ஆட்சி கை மாறின எண்ணமே கொடுத்தது முதலில். ஆனால் எனக்கென்று கொஞ்சம் நேரம் வேண்டும் என்ற எண்ணம் இன்னும் சற்று வலிமையாக இருந்தது போலும். அவ்வாறு நிகழ்ந்ததுதான் விஜயா விஜயம். மாற்றங்கள் முதலில் உண்டாக்குவது பயம்தான். ஆனால் அனுபவமும் கூட. ஸ்வாமி சித்பவானந்தா பகவத்கீதை உரையில் கூறுகிறார், முதலில் இல்லாமல் இருந்து, பிறகு வந்து மீண்டும் இல்லாமல் போகப் போவதே தேகம் என. விஜயாவை அப்படித்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். எங்கிருந்தோ வந்தாள்.இப்போது எல்லாம் நடக்கிறது. தேகம் போனாலும் ஆத்மா இருக்கும் என்பது போல விஜயா போனாலும் சாப்பாடு நடக்கும். அதனால் இந்த இடைவெளியை ரசிக்க விருப்பம்.
இப்போது மறுபடி முதல் பத்திக்குப் போகிறேன். நல்ல மனசின் ஆசைகள், இன்னும் சற்று கூட நேரம் தூங்க விரும்பும் கெட்ட மனசின் ஆசைகள் எல்லாம் விஜயா புண்ணியத்தில் நடக்கிறது. உடல் அடையும் அனுபவங்கள். உள்ளே உள்ள வஸ்து வேடிக்கை பார்க்கிறது. பார்க்கட்டும்.
No comments:
Post a Comment