Monday, December 17, 2018

வேர்கள் அறிவோம்

இன்று வைகுண்ட ஏகாதசி. வைஷ்ணவக் கோவில்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறப்பு. மிகவும் சிறப்பு பெற்ற நாள். முன்பெல்லாம் யாரோ சிலர், மிகவும் கற்ற அறிஞர்கள் , வயதில் மூத்தவர்கள், மடாதிபதிகள் இது போன்ற விசேஷ நாட்களின் சிறப்புகளை எடுத்துரைப்பார்கள். இப்போது யூ டியூபில் ஏராளமான தகவல்கள். தகவல் யுகம். வேகமான யுகம். நீர்க்குமிழி யுகம். வருவதும் போவதும் தெரிவதில்லை. அதனால் செய்திகள் ஆழமான பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. இதில் வாட்சப் வேறு. காட்டுத்தீ போல பரவும் நிகழ்வுகள். காட்டுத்தீ பார்த்தால் ஏற்படும் பயம்தான் எனக்கு வாட்சப்பின் Forwarded Messages பார்த்தால் வருகிறது. மனதைத் தொடாத  பதிவுகள். நல்லனவும் வருகின்றனதான் . ஆனால் அவையும் பயம் பரப்பும் செய்திகளே.

சென்ற மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். கம்பீரமாக  , பள்ளிகொண்டுள்ள அரங்கன் தரிசனம் வாய்த்தது.  புறக்கண்ணால் ஒரு நிமிடம்தான் காணலாம். நிற்க விடுவதில்லை. அகக் கண்ணால் தரிசிக்கத்  தடையே இல்லை. தடை இன்றி கிடைக்கும் ஒன்றை மதிக்க, ரசிக்க, அனுபவிக்க  நம்மில் பெரும்பாலோர் ப்ரயத்தனப்படுவதில்லை. ஆம். தடை இன்றி கிடைக்கும் பொருள்களை, நினைவுகளை, அனுபவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். Supply குறைந்தால்தான் Demand கூடும். திருவரங்கம் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது. ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாருடன் ஐக்கியப்பட்ட ஸ்தலம்.  மார்கழியின் குளிர்ந்த காலைப் பொழுதில் அங்கங்கே ஒலிபெருக்கி மூலம் ஒலித்து காற்றில் கலந்து வரும் திருப்பாவை வரிகளை அசை போட்டபடி இந்தக் கட்டுரை  மூலம் ஸ்ரீரங்கத்திற்கு பயணப் பட்டுக் கொண்டுள்ளேன். பயணச்சீட்டு இல்லாப் பயணம். நமக்கு எப்பவும் இலவசங்கள் பிடிக்கும்.  ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலையும் திருப்பாவை என்ற பாமாலையும் அரங்கனுக்கு சமமாக இருந்திருக்க வேண்டும்.  வேதங்கள் அனைத்திற்கும் வித்தாகும் என்ற வழக்கு உள்ளது.

ஸ்ரீரங்கம் என்றால் எனக்கு அரங்கன் மட்டும் இல்லை. என் அம்மாவின் ஊர். எங்கள் அம்மா தாத்தாவை ஸ்ரீரங்கத் தாத்தா என்றே அழைப்போம். ரங்கனை அறியும் முன் தாத்தாவையே அறிவேன். என் பத்து வயது வரையே அவர் இருந்தார் என்றாலும், அம்மா மூலம், அந்த வீடு, பாட்டி,தாத்தா, அவர்களுடைய வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை முறை எல்லாம் அறிவேன். ஸ்ரீரங்கத்தில் கால்பதித்த தருணம்,எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற பாரதியாரின் கவிதை வரிகள் மனதில் ஓடிற்று. நம் மூதாதையர் வாழ்ந்த ஊர் பற்றியது ரம்யமான உணர்வு. எனக்கு சொல்லத் தெரியாத ஒரு உணர்வும் கூடவே  ஏற்படுகிறது.  வேர்கள் அற்ற மரம் போன்ற பிம்பம் என்று குறிப்பிடட்டுமா?  தெரியவில்லை.  ஆழம் அற்று அகலமாகிக் கொண்டே போகும் ஒரு கற்பனை பிம்பம்.  தற்போதைய அவசர உலகம் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போன்ற பிம்பம். வேர்கள் பூமிக்குள் இருப்பதால் அதைப் பற்றி யோசிக்க ஏதும் இல்லை.  மரம் கிளை பரப்புகிறது. பூத்துக் காய்க்கிறது. பார்க்க நன்றாக உள்ளது.  ஆனால் விதை ஊன்றி வேர் பிடித்த மரம் தந்த பலன் அது. இன்னொரு மரம் வளர விதை வேண்டும். வேர் பிடிக்க வேண்டும். அபார தொழில் நுட்ப வளர்ச்சி.  உலகையே உள்ளடக்கும் பரந்த வளர்ச்சி. ஆனால் வேர்களை நாம் அறிவதில்லை.

Feast  or Famine  என்ற கற்கால மனிதன் இருந்தான் என்று இன்று படித்தேன். கிடைத்தால் விருந்து.  அல்லது பட்டினி.  அடுத்த நாள் பற்றின பயம் இல்லை. அதில் சொல்லொணா நிம்மதி, சூட்சுமம் இருந்தது. இப்போது எல்லாம் தேவைக்கதிகமாக உள்ளது. அந்தந்த நொடியை வாழத் தேவையான தைரியத்தை பயம் இடமாற்றம் பண்ணி விட்டது. பெருகி விட்ட ஆயுள் பாதுகாப்பு நிறுவனங்கள்   சாட்சி.  எல்லாக் கல்யாணத்திற்கும் கட்டிப் போக ஆரஞ்சு கலர் பாவாடை இருந்தது. அதைத் தொட்டாலே நாதஸ்வர ஓசை கேட்டது.  இப்போது பீரோ முன் நின்று கிளி, ஜோசியச் சீட்டு எடுப்பது போல் புடவையைக் கலைத்துப் போட்டு கழுதைக்  கலர் புடவை ஒன்றை தேர்ந்தெடுத்து ட்ரெண்ட் என்று சுற்றிப் போகிறோம்.  அடுத்த தெருவில் உள்ள அத்தை வீட்டிற்கு கூகிள் மேப் வழி சொல்கிறது. இது,அந்த நாளும் வந்திடாதோ என்ற ஆத்தங்கம் இல்லை. அமுதத்தை அளவுக்கதிகமாகப் பருகும் போது அது நஞ்சாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு. ஸ்ரீரங்கத் தாத்தா, நம் பெற்றோர், நாம், நம் குழந்தைகள் , என்ற வரிசையில் எந்தத் தலைமுறை சரியான அளவில் அமுதம் பருகியது என்ற ஒப்பிடல். நீதிபதி போல் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை .  ஏனென்றால் நேரடி வாக்குமூலம் இல்லை.  ஆனால், அவரவர் குடும்பம் பற்றி, ஏன் உலக சரித்திரம் பற்றி எல்லாம் கூட அறிந்து கொள்ள கொஞ்சம் நேரம் செலவிடலாம். வேர்களை அறிவோம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Sunday, December 16, 2018

BANANA MANI

கே கே நகரில் இருந்து, நாகாத்தம்மன் கோவில் செல்லும் வழியில்,சிவன் பூங்கா எதிரில் இரவு  எட்டு மணியில் இருந்து பத்து மணிவரை 2000 பழங்களுடன் ஒரு தள்ளுவண்டி நிற்கும். வாழைப்பழங்கள் மட்டும். அந்தப் பழம் விற்பவர்தான் மணி. நாங்கள் Banana மணி என்போம். சிலைகள் எப்படி காலமாற்றங்களுக்குக் கவலைப் படாது மெரினா கடற்கரையில் நிற்கிறதோ அது போல அவர் ஒரு இரண்டு மணி நேர சிலையோ என நினைத்துக் கொள்வேன். உட்கார நாற்காலி கிடையாது. பாதையிலேயே உட்கார ஒரு மேடான இடம் இருந்தும் உட்கார அவருக்கு நேரம் கிடையாது. எட்டு மணிக்கு வண்டி full . நேரம் செல்லச் செல்ல சீராக, பழங்கள் எண்ணிக்கை குறையும். "நீ கிட்ட இருந்து பார்த்தாயா, புனைந்து , இல்லாததை எல்லாம் சேர்த்து, எழுத வேண்டும் என எழுதுகிறாயா," என்றால் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரம் அந்த வழி சென்றிருக்கிறோம். மணியின் discipline  நம்மிடம் இல்லை என எண்ணிக் கொள்வேன். வண்டிகளில் போவோர் சாலையோர கோவில்கள் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல அந்த இடம் தாண்டும் போது மணி வண்டி உள்ளதா எனப் பார்ப்பது எனக்கு அனிச்சைச் செயல். அதனால் நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறொன்றில்லை.

யார் யாரோ பெரிய மனிதர்களையெல்லாம் நேர்காண்கிறார்கள். நேர்காணப்  பட  எல்லாத் தகுதியும் உள்ளவர்கள் சாலையோர மஹாராஜாக்களே. நாங்கள் அநேகமாக அவரிடம் தினம் பழம் வாங்குவோம். ஒரு நாள் என் கணவரிடம் கூறினேன். "அவர் பெயர், தொலைபேசி எண் கேட்டு வாருங்கள். முடிந்தால் அவரைப் பற்றி விசாரியுங்கள்". த்யாகு வந்து சொன்னார். "பெயர் மணியாம் . தினம், கொண்டு வரும் பழங்களை அநேகமாக விற்று விடுவாராம். வாழைப்பழம் தங்கும் பொருளல்லவே, விற்காவிடில்? என்று கேட்டதற்கு, தனக்கு sure regular customer base உள்ளது " என்றார் . ஆமாம் நாங்களே அவருடைய regular customers தானே?

Business knack ஒன்று உள்ளது. எல்லோரும்" நல்ல "வியாபாரிகள் ஆகி விட முடியாது. நல்ல என்பதில், Good , Efficient , Righteous என்ற பல ஆங்கில சொற்கள் அடக்கம். அது தமிழின் பலமா பலவீனமா?  ஆனால் நல்ல என்பதன் ஆங்கில அர்த்தம் எதுவானாலும் மணி நல்ல வ்யாபாரியே. எனக்கு business பற்றிய அறிவு இல்லை. ஆனால் மணியிடம் உள்ள ஏதோ வித்தியாசம் என்னைக் கவர்கிறது. அது என்ன என்று த்யாகுவிடம் business மொழியில் கேட்டறிந்தேன்.விற்பதோ அழுத்தித் தொட்டால் அழுகும் பொருள். என்ன தைரியத்தில் அவ்வளவு பழங்கள் கொள்முதல் செய்கிறார்? வீணாகப் போகும் பொருளுக்கும் சேர்த்து ஒரு மார்ஜின் வைத்து விற்கும் வியாபாரிகள் உண்டு. இவர் அப்படி அல்ல.

வியாபாரத்திற்குத் தேர்ந்தெடுத்த இடம் மிக முக்கியமான ஜங்க்ஷன். ஆனால் வேறு யாருக்கும் தொல்லை அற்ற இடம். மிகச் சரியான விலையில் விற்பதால் ஒரு டசனுக்கு லாபம் குறைவானாலும் அத்தனையும் விற்றுப் போகின்றன. நேர்மைக்கு மக்கள் தரும் விலை அல்லவா அது!! வாங்கும் அனைத்தையும் விற்று விடுவதால் கொள்ளை லாப வியாபாரிகள் பண்ணும் லாபத்தைக் காட்டிலும் அதிக லாபம். பேரம் என்ற பேச்சே கிடையாது. மனசாட்சி உடைய, ஏன் இல்லாத அனைவருக்கும் கூட தெரியும், அதை விடக் குறைவான விலையில் வாங்க முடியாது வேறெங்கும் என. புரியாமல் வீம்பாகப் போனவர்களுக்கு பிற பேராசை வியாபாரிகள் புரிய வைத்து விடுவார்கள். மணிக்கே ஜெயம். இப்படியாக விருக்ஷமாக வளர்ந்துள்ள அவரது Customer Base . Word of mouth என்று சொல்வார்களே அப்படிப் பரவிய நல்லெண்ணம். அனாவசிய பேச்சு கிடையாது. மணியின் கையும் வாங்குபவரின் கையும் மட்டுமே பேசும். யாரும், அடிக்கோடிட்டுச் சொல்கிறேன் யாரும் அவரிடம் விலை கேட்பதில்லை. இப்படி ஒருவர் என் , நம் கவனத்தில் பதியாதிருந்தால்தான் வியப்பு.

மணியிடம் பழம் வாங்கினால்தான் நாள் நிறைவுறும். நடுவில் ஒரு பத்து நாள்கள் அந்த இடம் காலியாக இருந்தது. அத்தனை மின்விளக்குகளுக்கு நடுவிலும் சாலை சோபையற்று இருந்ததாக உணர்ந்தேன். நிஜமாகவே. ஒப்புக்கு சொல்லவில்லை." மணி எங்கே போனார்? இறங்கி சுற்றி உள்ள யாரையாவது கேட்டு வர இயலுமா" என்ற என் தொணதொணப்பு தாங்காது, த்யாகு ரூட்டை மாற்றி விட்டார். நான் ஏமாறுவேனா? ஒரு வாரம் சென்ற பின்,அந்தப்பக்கம் வேலை உருவாக்கிக் கொண்டு அதே சாலையில் சென்றோம். வண்டி நிற்பது  தூரத்தில் தெரிந்தது. நலம் விசாரித்து வந்தோம். எல்லாம் நலமாம்.  இதெல்லாம் செய்தி இல்லை. செய்யும் தொழில் தெய்வம் என்ற உற்சாகம் குறையாத மணியின் இயல்பு. ப்ரயத்தனப் படாது நல்லவராக இருப்பது. லக்ஷங்களில் சம்பாதிப்பவரிடம் கூட தென்படாத அமைதி. முக்கியமாக த்ருப்தி . த்யாகு மூலம்தான் மணியுடன் சம்பாஷணை இது வரை நேரே பேசியதில்லை. மனது வாழ்த்த நேரில் பேசத் தேவையா என்ன? வாழ்க வளமுடன் மணி.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Thursday, December 13, 2018

ஆட்டோ ஓட்டுனர் அருள்ஜோதி

எளிமையான மனிதர்கள் பலர் இருப்பை வெளிக்காட்டாது வாழ்கின்றனர். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூமணம் போல அவர்கள் இருப்பு,  தானாக வெளிப்பட்டு விடுகிறது. நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் பற்றியும் எழுத விரும்பும் என்னுடைய முதல் பதிவு. பெரிய கார்ப்பரேட் பூதங்களால் விழுங்கப்பட்ட உலகில், நாம் எத்தனை பேர் ஆட்டோ ஓட்டுவதும் ஒரு தொழில்,அதையும் மிகவும் திறம்படச் செய்யலாம் என உணர்கிறோம். தெரியவில்லை.

பதினைந்து வருஷங்களுக்கு முந்தின ஒரு மாலைப் பொழுது.வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை கொட்டப் போகிறது. பள்ளி விடும் நேரம்.என் குழந்தை கார்த்திக் நாலாம் வகுப்பு. பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு வர வேண்டும். புயலும் மழையும் எப்பவும் மனதில் ஒரு அச்சம் கிளப்பும். நம் Reasoning Power எல்லாம் இது போன்ற நேரங்கள் உதவுவதில்லை. மற்றவருக்கு தைரியம், அறிவுரை தருபவர்களில் கூட  வெகு சிலரே தாம் அந்த நிலையில் இருந்து அதைச் செய்கிறார்கள். வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. பள்ளிக்குக் கிளம்பி விட்டேன். நல்ல மழை தொடங்கிவிட்டிருந்தது. வகுப்பு வாசலில் நின்று கார்த்திக்கை கூட்டிக் கொண்டு வீடு வந்து விட்டேன். என் குழந்தை பத்திரமாக உள்ளது என்ற எண்ணம் மட்டுமே. எத்தனை சிறு வட்டத்திற்குள் இருந்திருக்கிறேன் என்று இப்போ நினைத்துக் கொள்கிறேன். வாசல் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தால் சொட்டச் சொட்ட நனைந்த உடையுடன் அருள்ஜோதி. கார்த்திக் தினம் பள்ளி செல்லும் ஆட்டோவின் ஓட்டுனர் . முகம் பூரா கலவரம்.

"என்ன, அருள்ஜோதி" என்று நான் தொடங்கும் முன் , அறையில் இருந்து வெளிப்பட்ட கார்த்திக்கைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான். இடி வெளியில் இடிக்கவில்லை. வீட்டிற்குள் இடித்தது. தொடர்ந்து அரைமணி. நான் வாய் திறவாது கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் சொல்லாமல் குழந்தையைக் கூட்டி வந்ததற்காக, insensitive , irresponsible அம்மா என்ற பட்டம். மறுநாளில் இருந்து கார்த்திக்கைக் கூட்டிப் போக தான் தயாரில்லை என்ற முடிவு, எல்லாம் சற்றும் மரியாதை குறையாத ஆனால் தெளிவான உறுதியான குரலில் தெரிவிக்கப்பட்டது. " நான் பேசலாமா", என்று அனுமதி வாங்கி கொண்டு நிதானமாக அவரிடம் சொன்னேன்,"கார்த்திக் தானாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு பள்ளி செல்லும் வரை நீங்கள்தான் அவனைக் கூட்டிப் போக வேண்டும். இனி நான் இன்று செய்த தவறை செய்ய மாட்டேன்". வெளியே மழை நின்றிருந்தது. வீட்டில் ஒலித்த இடியும்தான். அமைதியாகப் பார்த்து விட்டு , "நாளை எட்டு மணிக்கு வரேன் மேடம்" கை கூப்பி வெளியேறினார்.

அன்று அருள்ஜோதியுடன் ஒரு பாசப்பிணைப்பு உருவானது. அவர் இன்னும் உயரம் தொடுவார் என்று தெரிந்தது..எல்லாத் தொழிலும் மரியாதை ஆனது.கஷ்டமான வேளைகளில் கூட, நிலை பிறழ, அவசர முடிவுகள் எடுக்க கூடாது போன்ற பல பாடங்கள் அறிந்தேன். கார்த்திக் வளர்ந்த பின் " நல்ல ஆட்டோ தெரிந்தால் சொல்லுங்கள்" என்ற சிறு பள்ளி குழந்தைகளின் பெற்றோர் பலருக்கு வேறு யாரைக் கை காட்டியிருப்போம்! அவரவர் பிசியாகி விடுகிறோம். பல வருடங்கள் சென்றபின் ஒரு நாள் பள்ளி வழியே சென்ற போது பழைய ஞாபகங்கள் திரைப்படம் போல மனத்திரையில் ஓடியது. " மேடம், ஞாபகம் வெச்சிருக்கீங்களா?" என்ற குரல்.ஒரு பெரிய வேன். அருள்ஜோதிதான். " இப்போ ரொம்ப நல்லாருக்கேன். இன்னும் குழந்தைகளைக் கூட்டிப் போறதுதான் செய்யறேன், ஆனா வேன் வாங்கிட்டேன் மேடம். இன்னும் safety இல்லையா" என்று பவ்யமாக சிரித்தார். அன்று நான் பண்ணியது போல் தப்பு பண்ணினால் மட்டும்தான் கோபம் வரும் போல. "இன்னும் safety இல்லையா" என்ற, பொய் கலப்பற்ற,ஆத்மார்த்தமான வரிதான் அருள்ஜோதி பன்ச். மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.

இன்றும் எங்கள் குடியிருப்புக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வருகிறார். இன்னும் எத்தனையோ ஆட்டோ ,வேன்கள் வருகின்றன.சரியாக ஐந்து நிமிஷம் மட்டுமே இந்த  வேன் நிற்கும். ஒரு நாள் நேரம் தப்பாது. குழந்தைகள் நேரம் தப்பினால்,பெற்றோர் அலுவலகம் தாமதமாகப் போக வேண்டியதுதான். தங்கள் மெத்தனத்தினால் அருள்ஜோதியைத் தவற விட்ட பெற்றோர்.  " கொஞ்சம் வெயிட் பண்ணறானா , திமிர் " என்ற விமர்சனம் தருபவர்கள் உண்டு. அதற்கெல்லாம் காது கொடுத்திருந்தால் உயரம் தொடுவது சாத்தியமில்லை. வாழ்க வளமுடன் அருள்ஜோதி. நாளை கர்ம வீரர் பனானா மணியை சந்திப்போமா?

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Wednesday, December 12, 2018

காலச்சக்கரம்

சுழன்று கொண்டே இருக்கும் காலச்சக்கரம். அதில் நம் பயணமும் நிகழ்வுகளும் நமக்கு பிரம்மாண்டமானது. ஆச்சரியமானது. ஆனால் உண்மை அல்ல. ஒரு சிற்றெறும்பு நம் தோள் பட்டையில் இருந்து உள்ளங்கை வரை மேற்கொள்ளும் பயணத்தைக் காட்டிலும் பெரிதொன்றுமில்லை நம் வாழ்க்கைப் பயணமும். ஆனால் எறும்புக்கு அது தொலைதூரம். நமக்கோ அது ஒன்றரை அடி . எறும்பால் உணர முடியாததால் , தொலைவு அதிகம் என்று பொருளில்லை. நாம் நிரந்தரமாக்கும் என்று எண்ணம் கொள்வதால் காலச்சக்கரம் சுழற்சியை நிறுத்தப் போவதுமில்லை. சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு அதனுடன் சுழலும் நாம் , ஒரு நாள் கைவலித்து பிடி தளர்ந்து வீழ்கிறோம் . சிலரது உடும்புப்பிடி. சிலருக்கு சீக்கிரம் கைவலிக்கிறது. கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பல தலைமுறைகள் காண்கிறார்கள். ஆனால் "அந்தக் காலத்தில் " என்ற வரியை பாடகர் நிரவல் செய்வது போல் திருப்பித் திருப்பிப் பாடுகிறார்கள். இசை கச்சேரியில் நிரவல் Bore . சரியோ தவறோ ஒரே விஷயம்தான் வேறு உருவில் வருகிறது.அரைத்த மாவு இன்று இட்லி. இரண்டு நாள் சென்றால் தோசை. இட்லியாய் உண்ண முடியாத அளவு புளித்திருக்கும். மாற்றி செய்தால் புதுமை. அதே கதைதான் எல்லாவற்றிற்கும். எல்லாக் காலங்களிலும் அடிப்படை நிகழ்வுகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தக் கட்டத்தில் போஸ்ட் கொஞ்ச நேரம் வேறு திசைக்குத் திரும்புகிறது.

இந்தியாவின் இரண்டே கதைகள் ராமாயணமும் மஹாபாரதமும் . ராமாயண காலம் தொட்டு எதுவும் மாறவில்லை என்பதை இன்றைய சினிமா காட்டுகிறது. சீதாபிராட்டி கவரப்பட்டு அசோகவனத்தில் சிறைவைக்கப் படுகிறாள். அது வன்முறை. அந்தக்கால வன்முறை. இப்போதும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் படங்களில், மெகா தொடர்களில் காட்டப்படுகின்றன. எந்த சினிமாவில் வரும் எந்த கதாபாத்திரத்திற்கும் ஒப்பான ஒரு கதாபாத்திரத்தை இரண்டில் ஒரு இதிகாசத்திலேனும் காணலாம். குடும்பக் குழப்பங்களை மையப் புள்ளியாய்க் கொண்ட எல்லா சினிமாவும் மஹாபாரதமே . இப்போது வந்த செக்கச் சிவந்த வானம் வரை. சில நேரம் பேசாமல் ராமாயணம் மஹாபாரதத்தையே படித்துக் கொண்டிருக்கலாமே ,அதை வேறு வடிவில் பார்க்க படிக்க என்ன தேவை என்றுள்ளது. அங்குதான் தொழில்நுட்பம் உள்ளே வருகிறது. புத்தகங்கள் படிக்கும் போது நம் மனதில் ஒரு கதைக்களம் உருவாகும். ராமாயணம் கேட்க துவங்கிய காலம் தொட்டு என் மனதில் உள்ள அயோத்தி அரண்மனை கிழக்கே பார்த்தது. என் மனத்தில் உள்ள  சீதாபிராட்டி பேரழகி. இன்றைய உலக அழகிகளின் அழகு பிராட்டியின் அழகிற்கு உறை  போட காணாது. Most Handsome ஆண் ஸ்ரீராமன்தான். அயோத்தியின் மஹாராஜா தசரதர் முதல், பணிப்பெண்கள் வரை என்ன நிகழ்வுகளின் போது என்ன நிற உடை அணிந்திருந்தார்கள் என்று கூட அறிவேன்.

ஹநுமாரின் கண்களின் பக்தியும் , மற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கண்களும் காட்டின Bhavam ம் கூட மாறாது மனத்தகத்து ஒரு கோலம் வரைந்துள்ளது. ( ஒவ்வொன்றாக இன்னும் பல கூற வேண்டும். ராமாயணம் எல்லைகள் தாண்டின இதிகாசம். போஸ்ட்டெல்லாம் வேஸ்ட். அனுபவிக்கலாம். உங்கள் விருப்பப்படி அரண்மனை வேறு திசை நோக்கட்டும். கதாபாத்திரங்கள் வேறு நிற உடை அணியட்டுமே!). பீஷ்மர் சபதம் செய்த இடம், சூது நடந்த அரண்மனை , குருக்ஷேத்திரம் , பகவான் கீதை சொன்ன விதம், இதெல்லாமும் மனதில் கண்ட ,இன்னும் காணும் படங்கள்தான். தொழில்நுட்பம் என்றேன் அல்லவா? இப்போது எல்லாவற்றையும் visual ஆகக் காட்டுகிறார்கள். அது பற்றி எனக்கு கருத்துகள் இல்லை. ஆனால் அது கற்பனை செய்யும் சக்தியை வளர விடாதோ என்று தோன்றுகிறது. ஹாரிபாட்டர் புத்தகத்தின் எல்லா பகுதிகளும் திரைப்பட வடிவம் கொண்டுவிட்டது. திரைப்படத்தில் நாம் காணும் ஹாரிபாட்டர் இயக்குனரின் மனதில் இருப்பவன். அவன்தான் கதாசிரியர் பார்த்த நபரா தெரியாது. புத்தகங்கள் மட்டும்தான் படமாகிறதா என்றால் இல்லை. ஆனால் நினைவு மடிப்புகளில் உள்ள ஏதோதானே சினிமா?தொலைநோக்கி, எந்திரன் செய்யும் சங்கர் அவர்கள் போன்ற அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசம் இருக்க இயலாது. துரியோதனன் பழிவாங்க எண்ணம் கொண்டு அழிந்தான். ராவணன் பெண் மீது மோகம் கொண்டு அழிந்தான். எந்திரன் சிட்டியும் அதையே செய்கிறது. சனா மீது மோகம் கொண்டு பழி வாங்கும் எண்ணம் கொண்டு இறுதியில் dismantle பண்ணப்படுகிறது . நான் பழைய பஞ்சாங்கம். எந்திரனின் அடுத்த பகுதி 2.0 என்று திரை அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் அது தொலைக்காட்சி மூலம் வீட்டிற்கு வரும். அதுவும் தீபாவளி,பொங்கல் என்று நல்ல நாள் பார்த்து வரும். பார்க்க இயலாது. இந்தியத் தொலைக்காட்சிகளில் ஏழாம் முறையாக வரும் போது பார்த்து விட்டு, பின் ஒரு நாள் Blog ல் எழுதலாம். இந்தக்காலப் படைப்பாளிகள் தொழில்நுட்பத்தின் துணையுடன் பல செய்திகள் சொல்கிறார்கள்.

காலச்சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு ஓடும் நாம் அமைதியாகச் சுற்றுவோம். சில வாட்சப் பதிவுகள் பார்த்தேன். கைநாட்டாக இருந்து,பின்  எழுத அறிந்து கொண்ட நாம் மறுபடி கைநாட்டாகி விட்டோமாம். Biometric impression வைப்பதைக் குறிப்பிடுகிறார்கள். அதனால் என்ன? எழுத அறியாமல் வைக்கும் கைநாட்டும் இதுவும் ஒன்றா? இல்லையே? சக்கரத்தின் பாதி சுழற்சியைத் தாண்டியவர்களுக்கு வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் மனநிலை வர வேண்டும். ஆட்டுரலில் அரைத்த மாவை கிரைண்டரில் அரைக்கிறார்கள். தோசை தட்டிற்கு வருவதுதான் முக்கியம். ரிசல்ட்தான் முக்கியம். மஹாபாரதக்கதை தளபதி படமாகிறது. துரியோதனனையும் கர்ணனையும் நினைத்துக் கொண்டு மம்முட்டியையும் ரஜினிகாந்த்தையும் பார்த்து விட்டுப் போவோமே. நம் சுழற்சி முடியும் தறுவாயில் சுழற்சியைத் தொடங்க உள்ளவர்கள் எப்படி நம் போல் சிந்திப்பார்கள்? சக்கரம் சுற்றி மறுமுறை அந்த இடம் வர வேண்டாமா? தானாக எல்லாம் நடக்கும். எல்லா அனுபவங்களையும் உணர வந்துள்ளோம். கண்டிப்பாக உணர்த்த அல்ல.

இவை இன்றைய நினைவுகள். பேசிய விஷயங்கள் கோர்வையாக, தொடர்பு படுத்தும்படி இருந்ததா தெரியவில்லை. இடைவெளி விட்டால் மறந்து போகிறது. ஆயிற்று,சக்கரத்துடன் ஒரு நாள் சுற்றி விட்டேன். இன்றைய அனுபவங்கள் நாளை போஸ்ட்டின் வித்துக்கள்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER LEADS

Sunday, December 9, 2018

நான் யார்?

இது ரமண பகவான் கேட்ட நான் யார் அல்ல. அதற்கும் பல படிகள் முற்பட்டது. பெரும்பாலும், அடிப்படை விஷயங்களிலேயே நமக்கு நம் நிலைப்பாடுகள் புரிவதில்லை. மனிதர்களால் சூழப்பட்டு இருக்கிறேன். இருக்கிறோம். ஒவ்வொருவரிடம் இருந்தும் அதிர்வுகள் எடுத்துக் கொள்கிறோம். அவை நல்லனவாகவும் இருக்கலாம். அல்லாதனவாகவும் இருக்கலாம். அந்த அதிர்வுகளின் கலவைதான் நான் என்றால், நான் என் தனித்துவம் இழந்த ஜீவன். அந்த நிலை மகிழ்ச்சி ஆன ஒன்றல்ல. ஆனால் தனித் தன்மையுடன் இருப்பதென்றால் ஒரு போருக்குத் தயாராக வேண்டும். போர் என்றால் இரண்டு. இரண்டு பேர். இரண்டு பக்கம்.  இது நம் அகத்துக்கும் புறத்துக்கும் நடக்கும் போர்.  அகம் வென்றால் மகிழ்ச்சி.  போர் முடிந்தது. புறம் வென்றால் துன்பம். மறுபடி படையெடுப்பு நிகழும். எப்போதும் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். எது வசதி?



எனக்கு முந்தின தலைமுறையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் சந்தோஷங்கள்,வலிகள் ( உடல் வலி,மன வலி ரெண்டும்தான்) , எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள் எல்லாம் பாடம்.   அனுபவ பாடம்.  தியரி அல்ல. "இப்போதாவது தயாராகு, காலம் தாழ்த்தாதே" என்ற எச்சரிக்கை மணி. ஐம்பது என்பது குத்திட்டு நிற்கும் நாணயம் போன்றதொரு வயதல்லவோ? இரண்டு பக்கத்தையும் காண இயலும். கடக்கப் போகும் காலத்தை விட கடந்து விட்ட காலம் அதிகம் என்ற நிதர்சனம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அப்பட்டமாய்த் தெரியும் வயது. பெற்றோர், ஆசிரியர்கள், கணவன், மனைவி,குடும்பம், மேலதிகாரி, நண்பர்கள், அக்கம்பக்கம், தெரிந்தவர், தெரியாதவர், எல்லாரும் அல்லவோ சேர்ந்து நம் வாழ்வை நடத்தினார்கள் !!! குழந்தை நடை பயிலத் துவங்கும் போது கையைப் பிடித்துக் கொள்கிறது.  தளர்நடை மாறின பின் தனியே ஓடுகிறது. வளர்ந்த குழந்தையின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஏதோ பிரச்சினை என்று பொருள்.



எதற்கு, நான் யாரில் குழந்தை வந்தது என்று மறந்து போகும் அளவு இடைவெளி விட்டுத் தொடருகிறேன். எனக்கு முந்தின தலைமுறையைப் பார்த்துக் கொண்டுள்ளதன் சலனங்கள். பயம், அழுகை, இயலாமை . இவ்வாறு கடைசிக் காலங்கள் நகரவா விழுந்து விழுந்து உழைத்தோம்! பொருள் ஈட்டினோம்!  சமைத்தோம்!  சாப்பிட்டோம்!  விட்டுப் போகவா ஒட்டி உறவாடினோம்! வங்கியில் 10 லக்ஷங்கள் வைத்துக் கொண்டு அதில் எட்டு லக்ஷத்தை விட்டுப் போய் விடுவோம் என்றால் அது எப்படி மகிழ்ச்சி? எண்பது வயதில் மோர் சாதம் மட்டுமே செரிக்கும் என்றால் விதம் விதமாய் சமைத்து சாப்பிட்டு சுவை நரம்புகளை வளர்க்க தேவை என்ன?  நாம் உருகி உருகி அன்பு செலுத்துபவர்களை என்ன செய்தாலும் பிடித்து வைத்துக் கொள்ள இயலாதெனில் உணர்வுகளின் பயன் என்ன? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் தொடர்ந்து மனித குலம் அதையே செய்கிறது. அது தவறா? அதுதான் துன்பமா?  எண்ணங்கள் நன்றா எண்ணங்கள் அற்ற நிலை நல்லதா?  என்ன பண்ணலாம்?  இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் தினப்படி வாழ்வு சுவை தருமா? தராது. அப்போ யோசிக்க வேண்டாமா?  அதில்லை.



பணம், வாழ்வை ஓட்ட தேவையான ஒன்றாக மட்டும் கருதப்படும் இடத்தில் துன்பமில்லை. பதட்டமில்லை. ருசிக்கு இன்றி பசிக்காக சாப்பிட்டால் துன்பமில்லை.  பதட்டமில்லை.  எப்படியும் ஒரு நாள் விலகப்போகும் உறவை, உயிரை ஒரு அளவுக்கு மேல் மனதில் சுமந்து, சுமைதாங்கியின் வேலையை செய்யாதிருந்தால் துன்பமில்லை.  பதட்டமில்லை. எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்த மனதிற்கு வயது கூடினால் இயலாமை வரும் என்பது புரிவதில்லை.  நம்மைத் தொடாத ஒன்றை உணர முயற்சிக்க மறுக்கிறோம். தொடும் போது பயம் கொள்கிறோம். முதுமையை சொல்கிறேன். முதல் மாணவனாக இருக்க, பொருள் ஈட்ட , வாழ்க்கைப் போட்டியில் முந்தி இருக்க கற்றுத் தரப் படும் பாடங்கள், வாழ்வின் இரண்டாம் இன்னிங்சை நடத்த துளியும் உதவுவதில்லை. வாழ்வின் முதல் பாதியை எல்லோரும் நடத்தி விடலாம்.  உடம்பில் வலு உள்ளது.  திமிரும் உள்ளது. தப்பாக சொல்லவில்லை. என்னால் முடியும் என்ற நல்ல திமிர்.  தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொள்ளும், உலகம் தரும் நிர்பந்தங்கள் உள்ளன.ஆனால் இரண்டாம் பாதியில் எல்லாம் மைனஸ். நீரோட்டத்திற்கு எதிர் திசையில் துடுப்பு போடுவதல்லவோ கஷ்டம்?



இப்போது மறுபடி முதல் பத்திக்கு வருகிறேன். தனித்துவம். நம் வாழ்வின் பொறுப்பை நாம் எடுத்துக் கொள்வது.  வாழ்வில் நிரந்தரமானது என ஏதும் இல்லை. ஆனால் ஒப்பிட்டால் ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று நீடித்திருக்கும் என்று சில உண்டு. செய்தித் தாளின் வாழ்வு ஒரு நாள்.  பழம் இரண்டு நாள். இப்படியே வாரம்,மாதம்,வருஷம் தாங்கும் பொருள்கள் உண்டு. காலத்தை வென்ற சரித்திரச் சின்னங்களும் உண்டு. ஆனால் எல்லாம் மறையும் காலமும் உண்டு. நம் கவனம் சற்றே நீடித்த பொருள்கள்,விஷயங்களின் மீது நினைவு தெரிந்த நாள் முதல் இருப்பது தேவையற்ற நிகழ்வுகளுக்கு, மனிதர்களுக்கு நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்கும். போர் முடியும். அகம் வெல்லும். அமைதி வரும். பயம் போகும். ஏமாற்றம் போகும். கண்ணீர் நிற்கும். நான் யார் புலப்படும். அதற்கப்புறம் ரமண பகவானைத் துணைக்கழைத்து உண்மையான நான் யார் தெரிந்து கொள்ள முதல் அடியை எடுத்து வைக்கலாம்.



ரஞ்ஜனி த்யாகு

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...