Wednesday, January 30, 2019

தர்மம் பற்றிய குழப்பங்கள்

எது தர்மம்? ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றா? அல்லது அது பொதுச் சொல்லா? தர்மம் என்று எல்லோருக்கும் பொதுவாக எதுவும் இல்லையோ என்று எண்ணுகிறேன். எனக்கு தர்மம் என்ற தலைப்பின் கீழ் வருவன சிலருக்கு தவறாகப் படுகிறது. அவர்கள் தருமம் என்னை ஆயாசப் படுத்துகிறது. மனமறிந்து தீங்கு செய்யாமை , குரல் உயர்த்தாமை, சோர்வடையாமை , பயமில்லாமை எல்லாம் எனக்கு தர்மம் என்ற தலைப்பில் வருகின்றன. உண்மையாய் மனதில் களங்கம் அற்று இருக்க வேண்டுமே தவிர அப்படிப் பட்ட இருப்பை மற்றவரை உணரச் செய்வது என் தர்மத்தில் இல்லை. தப்பைப் பார்த்துக் கொண்டு உரக்க வெளியிடத் தயங்குவது என் தர்மத்தில் இல்லை. நாடகத் தனம் என்னை சோர்வாக்கவே செய்கிறது. சண்டைக்குத் தயாராய் இருப்பவர் என்னை பயம் கொள்ளச் செய்கிறார்கள். சில நாட்களாக மனத்தராசு இரு பக்கமும் ஏறி ஏறி இறங்குகிறது. சமநிலைக்கு வர விழைகிறது.மேசை மேல் உள்ள ஒரு பொருளை எடுத்து வேறிடத்தில் வைப்பது போல மனத்தராசின் தட்டில் உட்கார்ந்துள்ள சில  கனமானவற்றை எடுத்து கண்காணாத இடத்தில் வைக்க விருப்பம். அது கஷ்டமா?  ஆம் என்றால் ஏன் கஷ்டம்?

இன்று பிப்ரவரி என்ற குழந்தை ஜனனம். பல வருஷங்கள் முன் அரவிந்த அன்னை என்ற தெய்வக்  குழந்தையின் ஜனனம் நிகழ்ந்த மாதம். மனம் பின்னோக்கி நகரும் விமானம் ஏறி பிரான்ஸ்  சென்றுள்ளது. இன்னும் திரும்பவில்லை. திரும்பியே தீரும். சஞ்சரித்துக் கொண்டே உள்ள பயணிதானே மனம்!!  முதல் பத்தியில் சொன்ன கனத்தை இறக்கி வைத்தால் மேலே ஏறுவது எளிது. மூட்டை சுமந்து ஏறுவது கஷ்டம். யார் அதை நம் மீது ஏற்றி வைப்பது? யாரோதானே? ஏற்றும் முன் மறுப்பது எளிது. தெரியாமல், கனம் அறியாமல் ஏற்றிக் கொண்டு விட்டாலும், இறக்குவதற்கு யார் அனுமதி வேண்டும்? எப்போ வேண்டுமோ இறக்கி விடலாம். எவ்வளவு துரிதமாக செய்கிறோமோ அவ்வளவு நல்லது.  செய்ய ஊக்கம் தேவை. அது இல்லாமல்தான், மனிதர்களையும், நிகழ்வுகளையும் சுமந்து திரிகிறோம். விமானத்திற்குள் பெரிய மூட்டைகளுக்கு அனுமதி இல்லை. கார்கோவில் போட்டால்தான் நாம் பயணப் படலாம். உயர்ந்த நிலைகள் அடைய, விட வேண்டிய பொருள்கள் உண்டு, அவை எதுவானாலும்.


என்னிடம் நான் கொண்ட சுய அன்பே பெரிய குறுக்கீடாய் உள்ளது. கழிவிரக்கம் . அதில் இருந்து மீண்டால் மட்டுமே விமோசனம் என உணர்கிறேன். நம் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது நம் மேல் நாமே கொள்ளும் அன்பு. நமக்கு நாமே தந்து கொள்ளும் முக்கியத்துவம். அதை சற்று விலக்கிப் பார்த்தால், நாடகத்தனமாக்காது  பார்த்தால் உண்மை தெரியும். எதற்கு நாடகம் ஆடுகிறோம், எல்லாவற்றையும் ஊதி? நாம் வாழ்வில் நடிக்காதிருந்தால், தானாக நாடகத் தனமான நிகழ்வுகள் நம் வாழ்வினின்று விடை பெறும். மற்றவரை விமர்சிக்க எந்த அளவு நாம் சுத்தமாக இருக்க வேண்டும்? ஏன் நான் சரி? இன்னொருவர் தப்பு? யார் அந்த இன்னொருவர்? என் போல அன்றி மாற்றி யோசிப்பவர்தானே? எல்லாம் நான். எனது. அங்கேதான் குழப்பம். எனதில்லாத ஒன்று என்னை பாதிப்பதில்லை. உண்மையில் எது என் சொந்தம்?  உடம்பு கூட சொந்தம் இல்லை எனும் போது ஏன் மனத்தராசின் முள் ஆடணும்? பார்க்கலாம். முயலலாம்.

Saturday, January 26, 2019

துக்கடா

கச்சேரிக்குப் பின் பாடப்படும் துக்கடாக்கள் போல் சில மாதங்கள் வரிசையாக நிகழ்வுகள். ஒவ்வொன்றும் வேறு வேறு பிரிவைச் சேர்ந்தவை. தனித்தனி போஸ்ட்டாக வலிமை அற்ற நிகழ்வுகள். அதனால் எல்லாம் ஒரு போஸ்டில் அடங்கப் போகின்றன. தலைப்பு சரிதானே? துக்கடாக்களுக்கு இலக்கணப் படி வரிசை, அதாவது ஆர்டர் இல்லை. அது போல இந்த போஸ்டின் contents  க்கு இலக்கணம் இல்லை. குரங்கு மாதிரி தாவ , என் மனக்குரங்கின் வேகத்திற்குத் தாவ என் எழுத்துக்கும் உரிமை உண்டு. மாதத்தின் முதல் பாதி பொங்கல் கொண்டாட்டங்கள். அதற்கான திட்டமிடல். திட்டமிடல் என்பது முக்கியமாக சாப்பாடுதான். சாமிக்கு நைவேத்தியம் என்று சொல்லி, வயிறும் குடலும் என்னை விட்டு விடேன் என்று கெஞ்சும் அளவு  உணவு. எனக்கு சென்ற தலைமுறையினரின் பல செயல்களுக்கு விளக்கம் தேவையாய் உள்ளது. இப்போது நல்ல நினைவுகளுடன் உள்ள பெரியவர்கள் தரும் விளக்கங்கள் எதுவும் உடன்பாடாயில்லை. அட, பூஜை புனஸ்காரம் அதெல்லாம் பற்றி சொல்வதாவது தேவலை. போகிக்கு போளி , பொங்கலுக்கு வடை, காணும் பொங்கலுக்கு கலந்த சாதம் இதற்கெல்லாம் என்ன விளக்கம்? இந்த வருடம் அரசாங்கம் வழங்கும் 1000 ரூபாய்க்கு ஆலாய்ப் பறந்து அலை மோதி , அந்த 1000 ரூபாய்க்கு பொங்கல் தவிர 1008 செலவு காத்திருக்கும் ஏழை மக்களைக் கேட்டால் தெரியும். அவர்களிடம் இருந்து சூரிய பகவான் தன்னை மறைத்துக் கொண்டு விட்டாரோ, வடையும் பொங்கலும் படைக்காததற்கு? 

முதல் பாதி இவ்வாறான எண்ண ஓட்டம் என்றால் இரண்டாம் பாதி உடல்நலக் குறைவுகளும் பெரிய மருத்துவ மனைகளும், நெருங்கியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பின் அமைதி காத்து கடவுளிடம் மட்டும் பேச்சுவார்த்தை நிகழ்த்துவதும் பற்றியது. பயம்தான் சார்பை ஏற்படுத்தும் சக்தி. எதைக் கண்டு பயம் கொள்கிறோமோ அது நம்மை அடிமையாக்குகிறது. தன்பயம் நம் அனைவருக்கும் இருக்கும்,சில விதிவிலக்குகள் நீங்கலாக. அந்த தன்பயம் ஒரு எல்லையைக் கடக்கும் போது உடல் தன் இயற்கையான குணப்படுத்திக் கொள்ளும் சக்தியை அதாவது ஹீலிங் பவரை இழக்கிறது. பயம் என்ற சாத்தான் இனி பார்த்துக் கொள்ளும், நாம் சற்று ஓய்வெடுப்போம் என்று இயற்கை கம் மென்று இருந்து விடுகிறது. அதுதான் பெரியமருத்துவமனைகளுக்கு வசதியான வியாபாரம் . எனக்கு உயிர் காக்கும் மருத்துவத் தொழில் மீதும் மருத்துவர்கள் மீதும் அபார மரியாதை உண்டு. நவீன மருத்துவத்தில்,போய்க் கொண்டிருக்கிற உயிரை சத்யவான் சாவித்ரி போல மீட்டு வரும் மருத்துவர்களுக்கு வணக்கம். ஆனால்,உண்மை மருத்துவர்கள் அருகி, மருத்துவ வியாபாரம் பெருகி விட்டதையே இன்றைய நிலையில் காண முடிகிறது. உணர முடிகிறது. கண்டிஷன் ஸ்டேபிள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசத்தை நீட்டிக் கொண்டே போகும் போது ஸ்டேபிள் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை அகராதியில் தேடணுமோ என்று நினைக்கிறேன். மருத்துவமனையில் உள்ளது என் மாமனார் என்பதால் என்னால் இதற்கு மேல் அழுத்தமாய் எழுத இயலவில்லை. Authentic ஆக சொல்ல அத்தாட்சியும் இல்லை. ஏனென்றால் பயத்தால் வழி நடத்தப் பட்டுக் கொண்டுள்ளோம். பெரிய மருத்துவமனைகள் சரியானவையா என யோசிக்க நம் பயங்கள் இடம் தராது.

அடுத்த துக்கடா உணர்வு சம்பந்தமானது. ஒரு இக்கட்டான நேரம் அல்லது நிகழ்வு நம் உணர்வுகளைக் கட்டவிழ்த்து விட தரப்பட்ட லைசென்ஸ் அல்ல. நிச்சயமாக அல்ல. நம் உண்மையான பலங்களை நமக்கே உணர்த்த வரும் இறைவன் வரம். அப்படித்தான் அணுக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர் மேல் கொள்ளும் கோபமோ, நம் பரபரப்போ, வருத்தமோ, நம் ஊகங்களோ ஒருவரை குணப்படுத்தும் என்றால் அதெல்லாவற்றையுமே செய்யலாமே? நமக்கு உற்ற ஒருவர் துன்ப பட்டுக் கொண்டுள்ள போது மற்ற எண்ண ஓட்டங்கள் அடங்கி அல்லவோ போகும்? விலங்கினங்களில் கூடக் காணப்படும் சில உணர்வுகள் நம்மிடம் இல்லை எனவும் உணர்கிறேன். தன் இனம் சேர்ந்த ஜீவன் ஒன்று Distress ல் இருப்பின்,அந்த இனம் சேர்ந்த மற்ற விலங்குகள்,பறவைகள் அதனை விட்டு நகர்வதில்லை. ஆனால் மனிதனுக்கு தன் சுகமே ப்ரதானம்.  மனம் குறுக்கிடுவதால் மனிதன் குழப்பவாதிதான். ஒரு காக்கை, இன்னொரு காக்கை தன் தர்மத்தை செய்கிறதா , என்று கவலை கொள்வதில்லை. கமெண்ட் அடிப்பதில்லை. ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை. எது ஸ்வதர்மம் என்று நமக்கு எதுவும் தெரியாது. நாமே வகுத்துக் கொண்ட ஒன்றை சரி என்று கருதி பிறர் செயல்களுக்கு நீதி தேவன் போல் செயல்படுகிறோம். தமாஷாக இல்லை? விலங்கினங்களின் தர்மம் பொது தர்மம். தன் இனம் சேர்ந்த ஒரு ஜீவன் துன்பத்தை அது தன் துன்பமாகப் பார்க்கிறது. மனிதன் அப்படி இல்லை. என்னைச் சார்ந்த ஒருவரின் உடல்நிலை உன்னைத் தொடுமா என்ற சந்தேகம். சந்தேகம் கொள்வோரை சந்தேகப்பிராணி என்கிறோம். உண்மையில் பிராணிக்கு சந்தேகம் கிடையாது. சரியான மனிதன் மனிதம் நிறைந்தவன் அல்லவோ? உயிர்களில் அவனால் வித்யாசம் காண இயலாது. உண்மையான உள்ளங்களைப் புரிந்து கொள்ள உண்மையாய் இருக்க வேண்டும். இயல்பாய், சாதாரணமாய் இருக்கும் போது வாக்கு தடிக்காது . அமைதி மாறாது. தவறுகள் நேர்ந்தால் அவற்றில் தன் பங்கு என்ன எனப் பார்க்கத் தோன்றுமே அன்றி மற்றவரைப் பற்றி எதுவும் தவறாகக் கூற, ஏன் எண்ணக்  கூடத் தோன்றாது.


நிறைய துக்கடாக்கள் ஆயிற்று. இன்று கச்சேரி நிறைவு பெற்றது. கடவுள் அருள் துணை நின்றால் வேறு தலைப்பில் புதுக் கச்சேரி செய்யலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Thursday, January 10, 2019

சாந்தி

சாந்தி. சாந்தி என்றால் அமைதி. இந்த போஸ்ட் அமைதி பற்றியது அல்ல. அமைதியை தன்னுடையதாக்கிக் கொண்ட ஒரு பெண் பற்றியது. சாந்தி என் பள்ளித் தோழி. என் எழுதும் ஆசைக்கு அவள் ஒரு முக்கியக் காரணம் என்பேன். பள்ளிக்கு என்றாவது லீவ் போடும் போதெல்லாம் மாலை குறைந்தது ஒரு ஐந்து பக்கக் கடிதம் யார் மூலமாவது எனக்கு வரும். அவளுடன் தொடர்பில் இருந்த பள்ளி நாட்களில் நான் லீவ் போட்டு, சாந்தி எனக்குக் கடிதம் அனுப்பாத நாள் ஒன்று கூட இருந்ததில்லை. பள்ளியின் ஒவ்வொரு பிரிவு வேளையிலும் நடந்த அனைத்து சம்பவங்களும், என் absence ஐ அவள் உணர்ந்ததும் அழகு தமிழில் விவரிக்கப் பட்டிருக்கும். அந்தக் கடிதங்கள் படிக்கவே லீவ் போடலாம் என்று தோன்றும். ஆனால் நான் செய்த தப்பு என்னவென்றால் அதை செய்ய வேண்டிய அளவு recognize செய்யாதது. வேண்டுமென்று நான் அப்படி இருக்கவில்லை. எனக்குத் தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை. சாந்தியின் தொடர்பு விட்டுப் போன பின்தான் நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று உணர்ந்தேன். என் புற வெளிப்பாடுகள் மைனஸ் ஆக இருப்பினும் அவளால் எப்படி ஒரு முறை கூட என்னிடம் வேறு முகம் காட்ட முடியவில்லை என்பது பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக் கூட்டம் போன்றதொரு அதிசயமே. புறம் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என் அகத்தில் அவள் மேல் ஒரு அதீத அன்பு இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இவ்வளவு ஆண்டுகள் சென்ற பின் திருச்சி சென்ற போது அவளைத் தேடத் தோன்றி இருக்காது. கண்டு பிடித்த பின் போஸ்ட் எழுத தோன்றி இருக்காது.

ஆனால் சமையல், வீட்டு வேலைகள் என்றே பெரும் பொழுதை செலவிடும் பெண்ணான எனக்கு போஸ்ட் எழுத உட்கார்ந்தே ஆகணும் என்பதற்கு ஒரு வலுவான நிகழ்வு தேவை. ஆம். உள்ளது. சென்ற வாரம் அவளிடம் இருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. அவள் கணவருக்கு திடீரென பைபாஸ் ஆப்பரேஷன் ஆகி மருத்துவமனையில் உள்ளதாக. மனதில் பிரார்த்தனைகளுடன் தொலை பேசினேன். வழக்கமான அமைதியுடன் அவள் குரல் கேட்டது. தொடங்கும் போதே,  "நல்லாருக்காருப்பா" என்றாள் . Iron women என்று பலர் பற்றி படிக்கிறோம். கேட்கிறோம். எப்போதாவதுதான் தொடர்பில் வருகிறோம். Full of Positive Energy . அதுதான் சாந்தி. "அவரை ஆப்பரேஷன் தியேட்டர் அனுப்பி விட்டு வங்கிக்கு வந்து விட்டேன். எல்லாம் நன்றாக நடக்கும். வார்டில் கொண்டுவிடும் முன் திரும்பி விட்டேன். அன்று நான் cash பார்க்க வேண்டும். எல்லோரும்,' இன்று உன் மனசு சரியாக உள்ளதா, கேஷ் handle செய்ய இயலுமா' என்று உதவ வந்தார்கள். நானே பார்த்துக் கொள்கிறேன்,அது வேறு இது வேறு. நான் உடலும் மனமும் நன்றாக இருக்கிறேன் " என்று கூறி விட்டேன் என்று வெகு இயல்பாக,  "இன்று வெண்டைக்காய் பொரியல் செய்தேன் " என்பது போல் இயல்பாகக் கூறினாள்.மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.  நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிதென்கிறார் வள்ளுவர். அன்றே சொன்னேன்." சாந்தி, நீ போஸ்டில் எழுதப் பட வேண்டிய பெண் "என்று. இன்றுதான் நேரம் கிடைத்தது.

சில சமயம், பலர் பற்றியும், பல நேரம் சிலர் பற்றியும் விமர்சனங்கள் செய்கிறோம். என் இடத்தில் இருந்தால் தெரியும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற வழக்குகள் உண்டு. மலைகள் எங்கிருந்தாலும் அசைவதில்லை. பிரச்சினைகள் இல்லாத வாழ்வும் இல்லை.சாந்தி சொன்ன இன்னொன்று. "என்ன, எல்லாம் அனுபவித்தாயிற்று. இனி ஒவ்வொரு நாளையும் அமைந்தவாறு நடத்தாமல் ஏன் கவலைப் பட்டு காலத்தை ஓட்ட வேண்டும்? ". மிகவும் சரி. ஐம்பது  + வயதில் அவள் மனதில் தங்கின அமைதி ரசிக்க வேண்டிய ஒன்று. சாந்தியுடையது காரணப் பெயரோ? வாழ்க வளமுடன் சாந்தி.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...