மெட்ராஸ்
17-11-1990
அன்புள்ள அம்மாவுக்கு,
மீரா எழுதுவது. மனம் முழுக்க வருத்தத்துடன் இந்தக் கடிதம் எழுதுகிறேன். எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும்,என் மனதென்னவோ வேறெதையும் நினைக்க மறுக்கிறது. நம் தாத்தா கட்டின அந்த அழகு வீட்டை விற்க முடிவெடுத்து விட்டீர்களாமே? கரூரில் இருந்து நேற்று வந்த நடராஜ மாமாதான் கூறினார். எப்படி, எப்படிம்மா மனசு வந்தது? அந்த வீட்டுடன் பிணைந்த என் நினைவுகள் மனதை என்னவோ செய்கின்றன. சாணம் தெளித்து, வாசல் அடைத்துக் கோலம் போட்டு, மார்கழி மாதம் சாணத்தில் பரங்கிப்பூ வைத்த அந்த வாசலும், பந்தல் போட்ட காரையும், அப்பா ட்யூஷன் எடுத்த அந்தத் திண்ணையும், தாத்தா கட்டிலில் படுத்திருந்த அந்த ரேழியும், கல்யாணமே நடத்தலாம் போலப் பரந்து விரிந்த அந்தக் கூடமும், வெளிச்சம் உள்ளே வரவே முடியாத அந்தப் பாவுள்ளும், நீ குளிச்சுட்டு, தலைல கட்டின துண்டுடன் ஸ்லோகம் சொல்லிக் கொண்டே சிரிப்பு மாறாத முகத்துடன் சமையல் செய்யும் சமையல் அறையும், மூன்று தொட்டி, கிணற்றோட இருக்கற கொல்லைப் புறமும் மனசில் சுற்றி சுற்றி வந்து வேதனைப் படுத்துகிறது.
அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மெட்ராஸ்ல ஒரு தீப்பெட்டி வீட்டுக்கு வர முடிவு செய்த உங்கள் மனதெல்லாம் என்ன, கல்லா? இனிமேல், நான் லீவுக்கு எங்கு வருவேன்? என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. இது தவிர உனக்கு எதுவும் எழுதவும் தோன்றவில்லை. அப்பாவை, அத்தையை, பக்கத்து வீட்டு ஜெயாவை, என் ப்ரிய பாட்டு டீச்சரை, சிலும்பாயியை ரொம்ப விசாரித்ததா சொல்லு.
அன்புடன்
மீரா சங்கர்
எழுதி முடித்து லெட்டரைக் கவரில் போட்டு ஒட்டி முடிப்பதற்குள், மீராவுக்கு புடவைத் தலைப்பெல்லாம் நனைந்து விட்டிருந்தது. கண்ணும் கன்னமும் வீங்கி, தலை விண்விண்ணென்று தெறித்தது. கவரைப் போஸ்ட் பண்ணி விட்டு வந்து சூடான காப்பியுடன் டீ வி முன் உட்கார்ந்த போது, மனபாரம் சற்று இறங்கினாற் போல் இருந்தது. கண் காலண்டரைப் பார்த்தது. இன்னும் நாலு நாளில் பதில் வந்துவிடும். எப்போதும் அம்மா உடனே பதில் எழுதுபவள். எதையும் ஒத்திப் போடாதவள்.
நான்கு நாட்கள் ஓடியே போயின. அன்று மீராவின் உடல் சமையல் அறையில் இருந்தாலும், மனம் தபாலை எதிர்நோக்கி காத்திருந்தது. சுவர்கடிகாரம் நின்று விட்டதோ என்று சந்தேகம் கூட வந்தது. " அம்மா, போஸ்ட்" என்ற கூவல் இனிய நாதமாய்க் காதில் ஒலிக்க, வாசலுக்கு ஓடினால் , அம்மாவின் முத்துப் போன்ற கையெழுத்தில், அந்த மஞ்சள் கவர் கதவில் சொருகப் பட்டிருந்தது. பிரிக்கும் முன் படபடப்பு தாங்கவில்லை மீராவுக்கு. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, வாசலைப் பூட்டி விட்டு, சோபாவில் சாய்ந்து, படிக்க ஆரம்பித்தாள்.
கரூர்
19-11-1990
அன்பு மீரா,
பாசத்தில் தோய்ந்த உன் கடிதம் நேற்று வந்தது. எங்கள் அனைவரையும் அது நெகிழ்த்தி விட்டது. மஞ்சள் கலரில் ப்ளூ பார்டர் போட்ட பட்டுப்பாவாடை கட்டி, நீ இந்த வீட்டைச் சுற்றி வளைய வந்த ஞாபகங்கள், நம் வீட்டுக் கொல்லையில் உள்ள ராமபாண மலரின் மணம் போல, எங்கள் மனதில் எப்பவும் வியாபித்துள்ளது. ஆனால், இன்னும் அந்த மஞ்சள் பாவாடையையேதான் நான் கட்டிப்பேன் என்று நீ அடம் பிடிப்பது போல குழந்தைத் தனமாக இருந்தது கண்ணே, உன் கடிதம்.
வாழ்க்கை ஒரு பயணம்.ஒவ்வொரு இடமாய் வண்டி நின்று போவது போல, நாம் ஒவ்வொரு கட்டமாய் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். பயணப்பட்டே ஆக வேண்டும். மாற்றங்கள் வாழ்வின் நியதி அல்லவா? வீடு பற்றி இத்தனை எழுதி உள்ளாயே, ஆர். மீராவாக இருந்த நீ, கல்யாணமான நாள் முதல், எப்படி கஷ்டமே இல்லாது மீராசங்கரானாய் ? அது போல்தான் இதுவும். நாம் இருக்கும் வீடும், நம் கொல்லையில் உள்ள மரமும், இன்னும் நூறாண்டுக்குப் பின் என்னவாகும் என ஒரு நொடி யோசி. உன் அக்ஞானம் பறந்து போகும்.
எங்கள் குழந்தைகள், நீங்கள் எல்லாம், நாட்டின் வேறு வேறு மூலைகளில் போய் செட்டில் ஆனபிறகு, எங்களுக்கு இங்கென்ன வேலை? எது மகிழ்ச்சி? வீடென்ன வெறும் கல் மண்ணால் ஆன கட்டடமா? மனுஷ மனங்களின் பாசமன்றோ? தனியாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு, எத்தனை நாள் இங்கிருப்பது? அதுதான் இந்த முடிவு.
இப்போ உனக்குக் கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கும்னு நினைக்கிறேன். நீ இரண்டு குழந்தைகளின் தாய். மனசை அலைபாய விடாதே. தெளிவான தாய்தான், தைரியமான பிரஜைகளை உருவாக்குகிறாள். மாப்பிள்ளைக்கு அன்பு விசாரிப்புகள். வரும் வருஷம் உன்னைப் புது மனுஷியாக்கட்டும்.
அன்பு அம்மா
பின் குறிப்பு: பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கைத் தத்துவம்.
மீராவின் நாலு நாளாய் மாறாத அழுமூஞ்சியைப் பார்க்க பயந்து கொண்டே ஆபீசில் இருந்து திரும்பிய சங்கருக்கு அவளின் திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை, டீ வி மேல் இருந்த மாமியாரின் கடிதத்தைப் பார்க்கும் வரை.