Wednesday, October 30, 2019

பணம்

பணம் என்பது என்ன? ஒவ்வொருவருக்கு ஒன்று. ஏழைக்கு வயிறு நிரம்பத் தேவையான பொருள். பணக்காரனுக்கு சொத்து சேர்க்கத் தேவையான பொருள். நடுத்தர வர்க்கத்தினருக்கு துரத்த வேண்டிய பொருள். சுருக்கமாக சொன்னால், அளவுக்கு அதிகமாய் இருந்தாலும் சரி, அளவுக்கு குறைவாக இருந்தாலும் சரி நிம்மதியை தொலைதூரம் தள்ளும் சக்தி படைத்த சாதனம். அப்படி என்றால் எது அளவு? இவ்வளவு பணம் ஒருவரிடம் இருக்கலாம் என்பதை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது? வாழ்வின் முக்கிய Preoccupation பணம் பண்ணுவதாகவே எல்லோரும் நினைப்பார்களோ? இன்றைய கல்விப் பாடத்திட்டம் அப்படித்தானே வடிவமைக்கப் பட்டுள்ளது? அதிகம் பணம் பண்ணும் வேலைகளுக்கு தேவையான படிப்பைத்தானே தேர்ந்தெடுக்கச் சொல்லி குழந்தைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள்? தேவைக்கு சம்பாதிக்க வேண்டுமா? அதற்கு மேலா ? தேவையையும், ஆசையையும் பிரிக்கும் மெல்லிய நூல் எது? அது யார் கற்றுத் தந்து வரும்? இல்லை, தானாகவே புரியுமா? எப்பவானும் இது போதும் என்று தோன்றுமா, இல்லை அப்படித் தோன்ற வாய்ப்பில்லையா?

தான் ஈட்டும் பணம் முழுவதையும் செலவழித்து tally பண்ணி விட்டு உலகத்தில் இருந்து விடை பெற்ற யாரும் இல்லை. அப்படியானால் அதன் மேல் எவ்வளவு பற்று வைக்கலாம்? பணத்தின் ஆச்சரியமான குணமே, ஏழையை மனதில் பணக்காரனாகவும், பணக்காரனை மனதில் நித்ய ஏழையாகவும் வைத்திருப்பதே. வங்கி கணக்கில் கோடிகளை தேக்கி வைத்து விட்டு, மேலும் மேலும் பணம் பண்ண ஓடுபவனை உலகம் அண்ணாந்து பார்க்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உழைப்பவனை துச்சமாகப் பார்க்கிறது. பணத்தைக் கொட்டிக் கொடுத்து வேலை வாங்கும் கார்ப்பரேட் கம்பெனி வேலையை, நல்ல வேலை என்கிறோம். வேலையை செய்து விட்டு ஊதியம் பெறுபவனை தினக்கூலி என்கிறோம். இவையெல்லாம் முரண்பாடுகள் அல்லவா?

உணவு,உடை,உறையுள் அருளப் பெற்று அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள உழைத்த நம் முன்னோர்களின் அமைதியை நம்மிடம் நான் தேடவே செய்கிறேன். பயங்கள். என்ன வருமோ, வந்தால் இது போதுமா என்ற பயங்கள். அமைதி, துன்பம், வளமான வாழ்வு, நோய்கள், எல்லாமே நாம் அழைத்து வரும் விருந்தாளிகளே . தொந்தரவு தரும் விருந்தினரை எப்போதும் நினைப்போமா, அழைப்போமா? என்னை விட என் சந்ததி இன்னும் அமைதியாக, உள் தேடல் செய்து கொண்டு, வாழ்வைப் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விட அதிகம் சம்பாதிப்பது அல்ல என்றே நினைக்கிறேன்.  சொல்லத் தெரியவில்லை. வாழ்வின் இந்த கட்டத்தில், ஒப்பு நோக்க முடிந்த ஐம்பதுகளில், எது சந்தோஷம் என்று ஆழ்மனம் உணர்கிறது. மனதிற்குள் பயணப்பட முயலும் எல்லோருக்கும் தெரிவதுதான்.

ஒரு வாரமாக கொரோனா வைரஸ் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது. உலகம் முழுதும் உச்சகட்ட பயத்தில் உள்ளது. இயற்கை அவ்வப்போது மனிதனுக்கு அவனை விட தான் பெரிது என்பதை உணர்த்திக் கொண்டேதான் உள்ளது. அத்தியாவசியத் தேவைகள் என்ன என்பதை அடிபட்டு மட்டுமே நாம் உணர்வோம். நம் அறியாமை அப்படி. பால்காரரும், துப்புரவுத் தொழிலாளிகளும், விவசாயிகளும், மருந்து அடிப்பவரும், சிறு வியாபாரிகளும்தான் இன்றைய ESSENTIAL சர்வீஸ் பிரிவில் அடங்குவார்கள். படிப்பாளிகள் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். எதுவும் கெட்டுப் போகவில்லை. நாம் வேலைக்கு அமர்த்தி சொற்ப வருமானம் ஈட்டும் தொழிலாளிகள் வாராது போனால் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கிறது. வேடிக்கை பார்க்கிறேன். ஆனால் பாடம் பெறுவோமா என்றால் மாட்டோம். எல்லாம் சரியான பின் மறுபடி நாம்தான் உலகைத் தாங்குவதாக நினைத்துக் கொள்வோம். கர்வம் கொள்வோம்.

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாட்சப் செய்திகள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுகின்றன. இன்று முதல் 144 தடை உத்தரவு தமிழ் நாட்டில். பாவம், பலருக்கு வாழ்வே போராட்டம். காரணம் பணம். ஆனால் பணத்தட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். விசித்திரங்கள். பொருளிலார் ஆனாலும், பொருள் உளார் ஆனாலும் தேடல் ஒன்றே கலியுகத்தில் என்றே தோன்றுகிறது. பொருள் தேடலை, தப்பாக விமர்சிக்கவில்லை. தேவைகள் பூர்த்தியான பின்னாவது அமைதி தேடலாம். ஆனால் செய்ய முடியவில்லையே, ஏன்? ஏனென்றால், தேவைகளுக்கு வரையறை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 144 அரசாங்கம்தான் போட வேண்டும் என்றில்லை. நமக்கு நாமே போட்டுக் கொள்ளலாம். தடை உத்தரவின் போது உள்ள சாலைகள் போல மனசு ஆரவாரமற்று இருப்பது மகிழ்ச்சி. அத்தியாவசிய நினைவுகளுக்குத் தடை இல்லை. எது அத்தியாவசியம் என்று அறிய முயற்சி வேண்டும்.

Wednesday, October 16, 2019

மாம்பழத்து வண்டு

மாம்பழம் ருசி. வண்டு உள்ள மாம்பழத்தை வெளிப்பார்வையில் இருந்து கண்டறிய இயலாது. சாப்பிடவும் லாயக்கில்லை. நறுக்கினபின்னே தெரிய வரும். மனிதனை, அவன் மனதை கீறிப்பார்த்து, பழக ஆரம்பித்தோமானால், உலகம் போர்க்களமாகும். வண்டு துளைக்காத மாம்பழங்களே அதிகம். ஏதோ ஒன்றிரண்டை வண்டு  துளைத்திருக்கும். ஆனால், நாம் அனைவரும் வண்டு துளைத்த மாங்கனிக்கு ஒப்பான மனிதர்கள்தான் என்பது பரிதாபகரமான உண்மை.  "நான் அப்படி இல்லை, முழு சுத்தம், ரொம்ப நல்லவன்" என்று கூறிக்கொண்டோமானால், அந்தக் கூற்றே ஒரு சிறு வண்டுதான் . ஈகோ வண்டு . ஆனால்,பழத்தைத் தூக்கிப் போடலாம். சகமனிதர்களைத் தூக்கி ஏறிய இயலாது. வண்டுப் பகுதியை வெட்டி விட்டுப் பழத்தை உண்ணுவது போல், வேண்டாததை விட்டு, வேண்டியதை விழுங்கி நடத்தும் நாடகமே வாழ்வு. நல்ல பகுதியை உண்ணும் போது வண்டிற்காக வெட்டின பகுதி நினைவில் வந்தால் பழம் ருசிக்காது. சகமனிதனின் குறைகள் மேல்மனத்திற்கு வரின் வாழ்க்கைப் பயணமும் ருசிக்காது.

இன்று ஏன் இந்த யோசனைகள்,தெரியவில்லை. சில சமயம்,  "ஓ, களையப்பட வேண்டியவை நம்மிடம் இவ்வளவு உள்ளதா!"  என்று தோன்றுகிறது. பற்று, எதிர்பார்ப்பு, கோபம், துடுக்குப் பேச்சு,சந்தேகம் என்று எல்லா மனிதர்களிடமும் ஒரு லிஸ்ட் உண்டு. இவையெல்லாம் தைரியமான திருடர்கள் போல கூட வரும். " நான் திருடன்தான், முடிந்தால் பிடித்துத் துரத்து. மறுபடி எப்போ வேண்டுமானாலும் திருட வருவேன், அதாவது உன் அமைதியைத் திருட" , என்று சவால் விடும் குணங்கள். இவைகளைத் துரத்த முடியும். மறுபடி வர பயம் கொள்ளுமளவு விரட்ட முடியும், கவனமாக இருந்தால். அலட்சியம் காட்டினால் , திருட்டு நடக்கும்.கவனம் என்றால் விழிப்பு. எப்போதும், உண்மையாய், விழித்திருத்தல். நாம் தவறின் பக்கம் போகும் போது , நம்மைத் தடுப்பது ஒரு விழிப்பு நிலை. அந்த ஒவ்வொரு நிகழ்வையும், வேகமாக முன்னேற வாய்ப்பாகப் பார்ப்பதும் விழிப்பு. இரண்டும் தேவை.

நன்றாக வாழ, யோசிக்க, கஷ்டப்பட வேண்டும் ,  தியாகம் செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தால் அது உண்மை அல்ல. இந்தக் கூற்றின் மறுபக்கமே உண்மை. நல்ல நினைவும் வாழ்க்கை முறையும் ஒரு மகிழ்ச்சியான, துன்பங்கள் தீண்டாத நிலை. மேல் பார்வையில் தெரியும் சிலவற்றை சுரண்டிப் பார்த்தால் உள்ளே என்ன உள்ளது தெரியும்.There is a life behind appearances . கடல் நீரைத் தொடலாம். காற்றை? தொட இயலாது. உணர மட்டுமே செய்யலாம். உலகில் உணரும் பொருள்களும் உண்டு. தொடும் பொருள்களும் உண்டு. நம் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும் நாள் நல்ல நாள், ஒரு சிறிய அடி வாங்கினால், அது கெட்ட நாள் என்று நினைக்கிறோம். தப்பு. அது நம்மை ஒரு படி மேலே ஏற்றி விட கடவுள் தரும் வாய்ப்பு என்பது, காற்று போல் உணர வேண்டிய ஒன்று. இந்தத் தருணம், ஒரு அழகான நிகழ்வை பகிர விரும்புகிறேன். காலை, ரோஜாப்பூ வாங்க சென்றோம். பல வண்ண ரோஜா மலர்கள். ஒரு குழந்தையை,ரோஜாப்பூ என்ன நிறம் என்று கேட்டால் அது குழம்பி விடும். நாம் குழந்தையாய் இருந்த போது ரோஸ் நிறம் என்று உடனே கூறுவோம். மஞ்சள் என்று பதில் கூறினால், டீச்சர் தலையில் கொட்டுவார்கள் . இப்போதைய குழந்தை, வேறு ஏதேனும் கலர் சொன்னால், டீச்சருக்கு பயம் வந்து விடும்.  "ஓ,நேற்று இந்தக் கலரில் ஒரு ரோஜா வந்து,நமக்குத் தெரியவில்லையோ, குழந்தையின் பதில் தப்பு என்று கூறினால்,அதன் சைக்காலஜியை கெடுத்து விட்டீர்கள் என்று அதன் பெற்றோர் வந்து விரட்டுவார்களோ" என்று.

சரி, இப்போது அதில்லை பிரச்சினை. தொன்று தொட்டு உள்ள, ரோஸ் என்ற இளம் ரோஸ் நிற பூவை சுற்றி வண்டுக்கூட்டம். அவை மற்ற நிறங்களில் உள்ள ரோஜாப்பூக்களை திரும்பியும் பார்க்கவில்லை. அந்தப் பூக்கார அம்மா சொன்னார்கள். அந்த ஒரிஜினல் ரோஜாக்கள் தீரும் வரைதான் அந்த வண்டுகள் அங்கே சுற்றுமாம். எனக்கு கண்கள் பனித்தது . இந்த வித்தியாசம்தான், இறைவன் படைப்புக்கும், மனிதன் படைப்புக்கும். மனிதன் தவிர மற்ற  ஐந்தறிவு படைத்த உயிரினங்கள்  இயல்பாக  உணரக் கூடியவற்றை மனிதனால் செய்ய முடிவதில்லை. தொடக்கூடிய கடலை நம்பும் அவனுக்கு காற்றின் இருப்பை உணர்வதில் சிரமம் உள்ளது. நம்மையும் அவன்தான் படைத்தான், ஆனால் நம் அறிவை,பேரறிவாக்கும் என்று நினைத்து, நாம் செய்து கொண்டுள்ள சிக்கல்கள், கொஞ்சமில்லை. இன்று என்னவோ வண்டு எட்டி எட்டிப் பார்க்கிறது.

மாம்பழத்தின் சிறு வண்டுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? நமக்கே இனம் காண இயலாது ,  நமக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மோசமான  எண்ணங்கள் உண்டு. அவை இருப்பதை நாம் உணர விரும்பாததால் உணர்வதில்லை. அவை மேலே சொன்னவற்றையும் விட சீரியஸ் ஆனவை. ஏனென்றால், கோபதாபங்கள் வெளியே தெரியும் தன்மையன. தப்பு என்று நிதர்சனமாய்த் தெரிவன. சரி போலத் தென்படும், நம்மை நாமே சமானப் படுத்திக் கொள்ளும் , அழகான போர்வை போத்திக் கொண்ட கெட்ட பழக்கங்கள் உண்டு. சபிப்பது, பழிவாங்க எண்ணுவது, நமக்குப் பிடிக்காதவர்களின் துன்பத்தை ரசிப்பது , மித்ரபேதம் செய்வது, என்று பல. இவை வெளியே தெரிவதில்லை. ஏனென்றால், இந்த எண்ணக்கலவையை  வைத்துள்ள பாத்திரம் ஆழ்மனது. மேல்மனது கட்டளை இட்டு வாய் நல்ல செய்தியை தான்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கும். கண் மூடி அமைதி காத்து யோசித்தால் மட்டுமே மனம் முழு சுத்தமா என்று புலப்படும். உண்மையாய்த் திருந்த விரும்பினால் மட்டுமே அழுக்குகள், அடைப்புகள் வெளிவரும். வந்தால்தான் அவற்றை நீக்கலாம். நம்மை சோதனைக்கு உள்ளாக்கிக் கொள்வதே வழி. 

Saturday, October 12, 2019

சாக்ஸபோன் ஓய்வெடுக்கப் போனது

பத்மஸ்ரீ, கலைமாமணி கதிரி கோபால்நாத் மறைவுச் செய்தியுடன் அன்றைய நாள் தொடங்கியது. வயசு ஏற ஏற மனிதர்கள், மாமனிதர்கள் எல்லோரின் மறைவும் அதிர்ச்சியை விட, ஆழமான, வலியையே உண்டுபண்ணுகிறது. ஒரு மிக வித்தியாசமான வாத்தியத்தைக் கையாண்டு, அதில் எந்த உயரம் தொட இயலுமோ தொட்டு , அவர் உறங்கினதால் சாக்ஸபோன் தூங்கி விடுமோ என்ற அச்சம் உண்டு பண்ணும் அளவு சிறப்பாக வாழ்ந்த மனிதர் நேற்று இருந்தார், இன்று இல்லை. என்ன, அவர் கொஞ்சம் முன்னால் பயணம் தொடங்கினார், முன்னால் முடித்து விட்டார். நாம் மட்டும் தொடர்பயணமா செய்யப் போகிறோம் என்ற தெளிதல் . ஆனால் ரொம்ப யோசித்தால், நம் அனைவரதும் தொடர் பயணமே. இறங்கி, இறங்கி,வேறு உடல் மாற்றி,நம் ஆத்மா செய்யும் பயணம்.

நல்ல நாளில், நட்சத்திரத்தில் பிறப்பு நிகழ வேண்டும்  என்று எல்லோரும் சொல்கிறோம்.. இறுதி நாளுக்கும் அது பொருந்தும். எவ்வளவு பெரிய கலைஞர், எத்தனை முக்கியமான செய்தி. ஆனால், வேண்டாத செய்திகளை மணிக்கணக்காகத் தரும் ஒரு தொலைகாட்சி சேனல் கூட, அவர் மறைவுச் செய்தியை இரண்டு நிமிஷம் கூடக் காட்டவில்லை, நான் அறிந்த வரை. ஏன் தெரியுமா?  சீனப் பிரதமருடைய இந்திய, தமிழ்நாட்டு விஜயத்துடன் இந்நிகழ்வு சேர்ந்து விட்டதால். சீனப் ப்ரதமருடைய  ஒவ்வொரு வேளை சாப்பாடும் என்ன, அவர் கார் எத்தனை கோடி என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகம், ஒரு இரண்டு நிமிஷ இரங்கல் செய்தி கூட சாக்ஸபோன் சக்ரவர்த்திக்குச் சொல்லவில்லையே என்றிருந்தது. எதற்கு சில நிகழ்வுகளுக்கு மட்டும் இத்தனை ஆர்பாட்டம்  என்ற கோபமும் வந்தது. ஆனால், அது பெரிய தவறில்லை. பண்டைக் கால அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறெல்லாம் மரியாதை செய்யப்பட்டதுதானே? இப்போது ராஜாக்கள் இவர்கள். கொண்டாட்டம் ஓ கே தான். ஆனால் அந்தக்காலத்து அரசர்களே கலைஞர்களுக்குத் தனி இடம் அல்லவோ கொடுத்தார்கள்!! பிரதமர்,மோடி அவர்கள் " என் எண்ணம் கோபால்நாத்தின் குடும்பத்துடன் உள்ளது " என ட்வீட் செய்திருந்தது சற்று மனதை சாந்தமாக்கியது.

தொழில்நுட்ப வளர்ச்சியும்,மனித நேயமும்,தலைகீழ் விகிதத்தில்  உள்ளன. முகத்தில் அறைவது போல் இருந்தாலும் உண்மை அதுதான். வானம் பார்த்து நேரம் கணக்கிட்ட, ஆதி மனிதனின் எளிமையை தொழில்நுட்பம் என்ற பூதம் விழுங்கி விட்டது. அகஸ்திய மாமுனிவர் வாதாபியை ஜீரணம் செய்தது போல் , எளிமையை, முழுமையாக ஜீரணம் பண்ண முடியவில்லை. காரணம், அங்கங்கே மனதால் சிந்திப்பவர்களும் இருப்பதால். ஆனால் அவர்கள் வாயைத் திறந்தால் , அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் போல் பார்க்கிறோம். அல்லது கோபம் கொள்கிறோம். நடந்த கலைநிகழ்ச்சிகள் ஜாதி வித்தியாசங்களைக் காட்டியது என்று டி . எம் .கிருஷ்ணா கருத்துத் தெரிவித்தால் அவர் மேல் பாய ஒரு கும்பலே தயாராக உள்ளது.  மீ டூ விவகாரம் ஒரு முப்பது நாள்களுக்கு வெறும் வாய் மெல்பவர்களுக்கு அவலானது. அப்போதைக்கப்போது, ஒரு பரபரப்புக்காக எதிலேனும் ஈடுபடுவது. இது வருந்தத் தக்க நிலை அல்லவா? ஆப்பிள் என்றால் இப்படி இருக்கும். ரோஜா என்றால் இப்படி இருக்கும். யானை என்றால் இப்படி இருக்கும். மயில் என்றால் இப்படி இருக்கும். அதே போல் எளிதாக, மனிதன் என்றால் இப்படி இருப்பான் என்று சொல்வது எப்படி சாத்தியம்? அவனுக்கு மனம் என்ற ஒன்று அதிகப்படியாக உள்ளதே? அதுதானே அவனை வேறுபடுத்திக் காட்டும் விஷயம்?  மனம் செம்மைப் பட்டால்தான் மனிதன். இல்லை என்றால் அவனும் ஒரு இருகால் விலங்கினமே .

மனிதனாய், மாமனிதனாய் ஒருவர் வாழ்வது கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. அவர்கள் மறைவு சாதா நிகழ்வல்ல. கட்டுரை எழுதும் நேரம் பூரவும் கதிரி கோபால்நாத் அவர்களின் கம்பீரமான பாக்யாத லக்ஷ்மி பாரம்மா மனதில் ஒலிக்கிறது. அதுவே பெரும்பாலும் அவர் கச்சேரிகளின் மங்களமாக இருந்துள்ளது. மனம் மௌன அஞ்சலி செய்கிறது. மனதை லகுவாக்க ஒன்று கூற வேண்டுமானால், அவருடைய அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடல் மூலம் திரையிசையை அதிகம் நேசிக்கும் எண்ணற்றோர் மனதிலும் ஒரு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர். அடுத்த கட்டுரை சந்தோஷமான நிகழ்வு பற்றிப் பேச இறைவன் அருளை யாசிக்கிறேன்.

Tuesday, October 8, 2019

வாசனை

எழுதத் தொடங்கி விட்டேன். கடைசியில்தான் தலைப்பு கொடுக்க வேண்டும்.
இனிப்பு மிக்ஸ்சர் என்று தலைப்பு தரலாமா என்று தோன்றுகிறது.  ஒவ்வொரு நாளும் புதிய சந்தோஷங்களை, நிறங்களை, அனுபவங்களை சேர்ந்து தருவதால், மிக்ஸ்சர் என்கிறேன். இனிப்பு சுவையை மட்டும் இன்றைய தினம் எடுத்துக் கொள்கிறேன். கசப்பும் காரமும் வேண்டாம். மிக்ஸ்சரில் முந்திரிப் பருப்பு அகப்பட்டால், சுவை அரும்புகள்  மகிழுமே, அது போல இன்றைய இனிமையான நிகழ்வு என் குருஜியின் கச்சேரி.  இரண்டு மணி நேரம், ஒரு தியானம் செய்யும் மனநிலையில்தான் கேட்டு வந்தேன்.
   
என் போன்ற பெண்களுக்கு எப்பவும் ஒரு குழப்பம் உள்ளது. பிடித்ததை செய்வதா அல்லது செய்வதைப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்வதா என்பதே அந்தக் குழப்பம். இரண்டும் தப்பில்லை. பிடித்தது செய்பவர்கள் ரசித்து வாழ்கிறோம். செய்வதைப் பிடிக்கும்படி பண்ணிக் கொள்வது அமைதி. அதை ரசிக்கவும்  வேண்டுமெனில் ப்ரயத்தனம் தேவை. பாட்டு பிடிக்கிறது. படிக்கப் பிடிக்கிறது. வானம் பார்க்கப் பிடிக்கிறது. குழந்தைகளைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்கிறது. வயதானவர்களிடம் உள்ள குழந்தைத்தனம் பிடிக்கிறது. குழந்தைகளிடம் உள்ள மனமுதிர்ச்சி பிடிக்கிறது. முழு அமைதி  பிடிக்கிறது.விவாதங்கள் இல்லாத  நாள்கள் பிடிக்கிறது. சமைக்கப் பிடிக்கிறது. செருப்பு போடாமல் நடக்கப் பிடிக்கிறது. என்னை யோசிக்க வைப்பதால் சிலசமயம் சிறு முரண்பாடுகள்  கூடப் பிடிக்கிறது.

பிடிக்கிறது வரிசையில் பாட்டு முதலில் வந்துள்ளது. இப்போது எழுதுவது கச்சேரி சென்று வந்ததன் தாக்கம். 1997ல் இருந்து மணிசுந்தரம் சாரைத் தெரியும். இன்று விஜயதசமி. இதே போல் ஒரு விஜயதசமி நாளில்தான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனேன், மாணவியாக.  முதலில் கற்றுக்கொண்டது ஷண்முகப்ரியா ஸித்தி விநாயகம். இன்றும் ஷண்முகப்ரியா காற்றில் கலந்து வந்தாலும் மனது அமைதியாகிவிடும். ஒரு சில விஷயங்களே மனம் தொடும் ஆற்றல் வாய்ந்தவை. சார் பாட்டு Therapeutic என்று நினைத்துக் கொள்வேன்.  நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அருளப் பட்டுள்ளது. ஏதோ ஒரு செயல், நம்மை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது என்றிருக்கும். அதில்தான் நாம் பூரணமாக வெற்றி பெற இயலும். பாட வருபவர்கள் எல்லாரும் பாடகர் இல்லை.

 பாட்டு கற்கப்  போனது என்னுடைய மிக சந்தோஷமான அனுபவம். கற்றல் என்பது வெறும் ஸ ரி க ம ப இல்லை. நேற்று கச்சேரியில் பெஹாக். வேறு யார் பெஹாக் அவ்வளவு அழகாகப் பாட முடியும் என்றிருந்தது. சார் பாடி நான் கேட்ட முதல் பெஹாக் நாராயணதே . பெஹாக் ராகம் ஒரு உருக்கொண்டு பகவான் நாராயணனுக்கு நமஸ்தே சொல்கிறது என்று அப்போதே நினைத்துக் கொள்வேன். வருடங்கள் உருண்டோடி விட்டன. மனம் உயரங்களில் சஞ்சரிக்கும் போது வாழ்வின் சிறு கவலைகள் தீண்டுவதில்லை. புவிஈர்ப்பு  எல்லையைத் தாண்டின ஒன்றை கீழே இழுக்கும் சக்தி பூமிக்கு இல்லை.க்ளாஸ் போகும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், இசையும்  அதை சதாகாலம் ஸ்வாசிப்பவர்களும் வேறு உலகத்தவர் என்று. உலக நிகழ்வுகளால் இழுக்கப்படாமல், அதாவது புவி ஈர்ப்பு விசையைத்  தாண்டி போன பொருள்களுக்கு இணையான இருப்பு சாத்தியம் என்று தோன்றும். வாழ்வு பல மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டி உள்ளது. எல்லாம் இருந்தும் எளிமையானவர்கள். எல்லாம் கிடைத்துள்ளதற்கு நான் காரணம் இல்லை என்பதை உணர்வு பூர்வமாய் அறிந்தவர்கள்.இன்னொரு பிரிவினர் வாழ்வு எதைக் கொடுப்பினும் அதை ரசிப்பவர்கள். எளிதில் கிடைக்க முடியா சொத்தான த்ருப்தியைத் தனதாக்கிக் கொண்டவர்கள்.

பள்ளி ஆசிரியர் போல,என் மனம் கவர்ந்தவர்களுக்கு ரேங்க் தர இயலாது. சார் ஒரு இசை ஆசிரியர் மட்டும் இல்லை. மேலே சொன்ன இரண்டு பிரிவில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற அலசலும் தேவை இல்லை. ஷண்முகப்ரியா போல, தர்பாரி கானடா போல , எப்போது கேட்டாலும் இனிமை தரும் ராகம் போல ஒருவர். வாழ்வின் பல கட்டங்களில் அறிமுகமாகி என்னுடன் (மனதளவில்) ,  தினம் பயணப்பட்டுக் கொண்டுள்ளவர்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களில் பலரை எப்போதோதான் சந்திக்கிறேன்,தொடர்பில் வருகிறேன். ஆனாலும் பூக்கூடையில் தங்கிய ஜாதிமல்லியின் மணம் போல, மனத்தில் ஒரு வாசனை தங்கி உள்ளது. இன்றைய கச்சேரி, மணத்தை மனம் உணர தூண்டுகோலானது . 

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...