பல மாதங்களுக்குப் பின் கணினியைத் தொடுகிறேன். அதுதான் தலைப்பு இப்படி. எந்தக் காய் என்றே கண்டறிய இயலாது எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி ஒரு பதார்த்தம் பண்ணுவோமே,அதன் பெயர்தான் அவியல். அது போன்று எண்ண காய்களின் கலவையான ஒரு மன நிலை. அவியலில் கடைசியில் மோர் சேர்ப்போம். மோர் புளிப்பு சுவை. எல்லாம் நல்ல காய். எல்லாம் நல்ல சுவை. தனியாக சில காய் பிடிக்காதவர் கூட அவியலில் அதை பொருட்படுத்துவதில்லை. பீடிகை பலமாக உள்ளது. அல்லவா? ஆமாம். வாழ்வு சில கால கட்டங்களில் மனசுக்கு அவியல் தருகிறது. அதற்கு நம் ஜாதகத்தில் உள்ள கட்டங்கள் காரணம் என நான் நினைக்கவில்லை. வேறு ஏதோ காரணம். அந்தக் காரணங்களை சாதாரண மன நிலையில் இருந்து அறிவது அசாத்தியமான செயல். அமைதியாக இருக்க முடிந்தால், காரணம் புலப்படாவிடினும் அவியலை ருசித்து உண்ணும் வழியேனும் புலப்படும்.
பிரச்சினைகள் எல்லாம் அருள்தான். பிரச்சினை அற்ற வாழ்வு யோசனைகளுக்கும் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்திக் கொள்வதற்கும் இடம் தருவதில்லை. வெறுமே நேர் கோட்டில் பயணிக்கும் வாழ்வு தேக்கம் காண்கிறது. சில மாதங்களாக ஏன் வீட்டிற்குள் ஒரு மேக மூட்டம்? மேகக் கூட்டம் வீட்டிற்குள்ளா மனமெனும் வீட்டிலா? வீட்டின் கான்க்ரீட் கூரை மேகத்தை மறைத்து விடும். மனவீடு பொத்தல் நிறைந்த கூரை வீடு. வெளியே மேகம் கவிந்து கொண்டிருப்பின் ஓட்டை கூரையின் வழியாக அது நமக்குத் தெரியாது போவதில்லை.
இரண்டு நாள் விட்டுத் தொடர்கிறேன். இப்படி அவியல் செய்தால் ஊசித்தான் போகும். என்ன செய்ய? என் நிலை அப்படி. வருத்தமாகச் சொல்லவில்லை. இயல்பாக சொல்கிறேன். ராகவனின் ஆட்டிசம் வேறு வேறாகத் தன்னை வெளிக் காட்டிக் கொள்கிறது. என்ன பண்ணனும் தெரியவில்லை. எப்படித் தெரியும்? என்னை நான் அறிவதல்லவோ முதல்? தன்னை அறிதலுக்கு மஹானாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. தன்னை அறிதல் வாழ்க்கையின் கடைசிப் படி, ஏணியின் மேல் படி என்னும் வாதங்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. நான்,தான் என்பது ஆத்மா, அதை உணர்தல் என்ற complicated ஞானியர் உரைகள் புரியவில்லை. இந்தப் பிறவியில் ஒரு பெயர் கொண்டு நடமாடும் என் உடம்பினுள் உள்ள மனசை அதன் ஓட்டங்களை நெறிப்படுத்துவதுதான் என்னளவில் தானறிதல். அதை செய்யும் முன் என்ன முயன்றாலும் இன்னொருவருக்கு உதவியாக இருக்க இயலாது. அவ்வாறு நினைத்துக் கொண்டால் அது ப்ரமையே.
இந்த அவியல் பற்றின எண்ணங்களின் தொடர்பாய் இன்னும் ஏதோ யோசனைகள். பாலங்கள் என்றொரு கதை சிவசங்கரி எழுதினார்கள். மூன்று தலைமுறைகள் அலசப்பட்டு அப்படியொரு புதினம் இனி வருமா என்று நினைத்துக் கொள்வேன். என் பாட்டி தலைமுறை இன்னும் எளியதானதோ என்று தோன்றும். அல்லது இயல்பானதோ என்பது சரியான வழக்கு. அவர்களுக்கு வீடு மட்டுமே பிரதானம். அவர்கள் கட்டுப் படுத்தப் பட்டார்களா கட்டுப் பட்டார்களா நான் அறியேன். சந்தோஷங்களும் வருத்தங்களும் பொதுவாக இருந்தன. பகிர்தல் இருந்தது. என் பெற்றோர் தலைமுறை பற்றிக் கடைசியாகப் பேசுவேன். என் தலைமுறையினர் சந்தோஷங்களையும் சரி வருத்தங்களையும் சரி தங்களுக்குள் handle செய்து கொள்கிறார்கள். Facebook Whatsapp மூலம் உலகம் குடும்பமாகிப் போனது. குடும்ப உறவுகள் நெருக்கம் தொலைத்தன. வீட்டில் இருந்து விலகி தீவாகி, அதே போன்ற இன்னொரு தீவுடன் , எப்போது வேண்டுமானாலும் ஒடிந்து விழும் ஒரு weak ஆன பாலம் மூலம் இணைந்து சந்தோஷத்தை வெளியே ,இன்னும் வெளியே தேடி கானல் நீர் மகிழ்ச்சியில் திளைக்கும் தலைமுறை. நாம் விதிவிலக்காக இருந்தால் யோசனைகள் வரவே செய்யும். வருவதுதான் நல்லது. ஆனால் கடக்கும் போது கஷ்டமாக உள்ளது. கடவுள் தவிர யாரும் பதில் தர முடியாது என்பது மட்டும் இல்லை. பாலில் விழுந்த ஈ போல மற்றவர் பற்றி எல்லாம் சிந்திக்கக் கூட இயலாத இருவர் ஒருவருக்கொருவர் என்ன சமாதானம் செய்து கொள்வார்கள்?
என் பெற்றோர் தலைமுறை திரிசங்கு சொர்கத்திற்கு சொந்தக்காரர்கள். அவர்களுக்கு சேர்ந்திருக்கும் சந்தோஷங்கள் தேவைப்படுகின்ற அளவு,விலகி இருக்க விரும்பும் நேரம் தனிமையும் தேவைப் படுகிறது. வீட்டின் பிரச்சினைகள் அவர்களால் தள்ளி இருந்தே பார்க்கப் படுகின்றன. அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. ஒரு Transition Period ல் சிக்கிக் கொண்டவர்கள். மூன்று தலைமுறைகள் அருகருகே இருக்க நேர்ந்தால், போர்முனைதான் வாழ்க்கை. என்ன,வன்முறை சற்றே குறைந்த போர். எனக்குத் தெரிந்த யாரும் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லவே மாட்டேன் என்கிறார்கள். ஏன்? அமைதிதானே இயல்பு? அது ஏன்,எப்போது தொலைகிறது? ஏன் சின்ன விஷயங்கள் யோசிக்கப் பட வேண்டும்? சாப்பாட்டில் அவியல் கண்டுபிடித்த மாதிரி, வேண்டாத எண்ணங்களின் கலவை எப்போது உண்டாகிறது? அதன் மூலம் என்ன? சாதாரண மனிதனின் மனமே புதிராக உள்ள போது ராகவன் மனதை அறிவது எப்படி என்று உள்ளே,எனக்குள்ளே போகிறேன்.
எதற்கு இந்த போஸ்ட் தொடங்கினேன்,தெரியாது. ஒரு பகிர்தல் செய்ய விரும்புகிறேன்.யாரும் எதற்கும் குழப்பம் அடைய வேண்டாம் . ஹேஷ்யங்கள் செய்ய வேண்டாம் . மற்றவராக அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் வரை அலட்டிக் கொள்ள வேண்டாம் . அடுத்தவரிடம் காட்டும் அன்பையும் அவர்கள் வாழ்வில் தலையிடுவதையும் ஒன்று என நினைத்துக் கொள்ள வேண்டாம்.Like ,Dislike என்று கருத்துப் பதிவுகளை ஆதரித்து எல்லார் விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் உரிமை தந்து Facebook பண்ணி இருக்கிற கெடுதல் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.சுதாரகுநாதன் மகள் மைக்கேலை திருமணம் செய்வதை விமர்சிப்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவப் போகிறது? முக்கியமாக ஒருவர் உண்மை நிலை அறியாது நாம் செய்யும் கணிப்புகளுக்கு சொல்வடிவம் தர வேண்டாம். பாம்பின் கால் பாம்பறியும். நாம் சக மனிதர்கள். அதனால் மனித மனத்தின் செயல்பாடுகள் உணர முடிவதால் எழுதினேன். நம்மை இப்படி ஒரு கண்ணாடிப் பேழை போல் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டால் , ஏதோ சிறு விரிசல் மூலம் வெளி உலக அதிர்வுகள் நுழைவதை தவிர்க்க இயலுவதில்லை.அதுதான் சலனத்திற்குக் காரணம். ஆட்டிசம் போன்ற விடை அறியா வினைகள் உள்ள போது விடை தெரிந்த , அல்லது விடை அறிய இயன்ற வினைகளாவது நம்மைக் குழப்பாமல் இருக்கட்டுமே? வாழ்வு ஒரு புத்தகம். சிலருக்குக் கடினமான புத்தகம். சிலருக்கு எளிமையான புத்தகம்.ஆட்டிசம் திறக்க இயலாப் புத்தகம். புத்தகத்தை வடிவமைத்தவன்தான் அதைத் திறந்து எனக்கு வெளிச்சம் தரணும். காத்திருக்கிறேன். அதில் என்ன உள்ளது என்ற ஆவலுடன்!! மற்ற புத்தகங்கள் வாசிப்பது ஓரளவு எளிமை ஆகி விட்டது என்ற நன்றியுடன்.
ரஞ்ஜனி த்யாகு
Mother Leads
No comments:
Post a Comment