Thursday, July 18, 2019

வாட்சப்பும் நானும்

செவ்வாய்கிரகத்தில் இருந்து தப்பிய ஒரு ஜந்து பூமிக் கோளத்தில் நுழைந்தால் அதனால் அனுசரித்து வாழ இயலுமா? இயலாது. தொழில் நுட்பத்தின் பூதாகரமான வளர்ச்சியில் சிக்கிக் கொண்ட, இந்த பூமி கோளத்தில் வந்து மாட்டிய ஒரு வேற்று கிரஹ  ஜந்துவே நான். அதுவும் வழி அறியாது அல்ல, வழி அறிந்தும் சிக்கிக் கொண்ட முட்டாள். தெரிந்து செய்தாலும், அறியாமையினால் செய்தாலும் தப்பு தப்புதான். நெருப்பு தெரிந்து தொட்டாலும் சுடும். தெரியாமல் தொட்டாலும் சுடும். விஷமென அறிந்து குடித்தாலும், அறியாமல் குடித்தாலும் முடிவு ஒன்றே. விளையாடவில்லை. நிஜம். விளையாட்டு சீரியஸான விஷயம் தெரியுமா? கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதி நிமிஷங்கள் சொல்லும்,விளையாட்டு ஒன்றும் விளையாட்டல்ல. நியூசிலாந்த் கேப்டன் கேன் வில்லியம்சன் , உலகக் கோப்பையைத் தவற விட்டபின் காட்டிய அமைதி. வாழ்க்கையில், தவிர்க்க இயலாதவை உண்டு, அதற்கு எதுவும் செய்ய இயலாது என்ற புரிதல். நம்மில் எவ்வளவு பேருக்கு உள்ளது? விளையாட்டு அவர்கள் தொழில். ஆனால் அவர்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ள இயலுமா,என்ன!!!

வாட்சப்பிற்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமே. நாலு வருஷத்தில் ரெண்டு முறை தூக்கிப் போட்டு விட்டு மறுபடி பதிவிறக்கம் பண்ணினேன். பாதிக்கு மேல் அவசியமற்ற குறும் செய்திகள். அதாவது தேவலை. பார்ப்பதும் பார்க்காது இருப்பதும் அவரவர் தேர்வு. குறும் செய்திகள், Forwards அனுப்புபவர்கள் என் டார்கெட் இல்லை. அவர்களுக்கு நேரம் அதிகம் உள்ளது அல்லது நேரத்தை சரியாக உபயோகிக்கத் தெரிகிறது என்று சொல்லலாம். அல்லது நேரத்தை வீணடிக்கும் பேர்வழிகள் என,  குற்றம் கண்டுபிடிக்கும் தொனியில் கூறலாம். ஏதோ தொடர்பு தேவைப் படுகிறது. கைபேசியுடன் அலைகிறார்கள். ஆனால் தொடர்புக்கு கண்டிப்பாக சார்ந்திருக்க வேண்டிய விஷயமாக வாட்சப் வளர்ந்து வருவதே சிக்கல். தொடர்புக்கு நேரில் பார்க்கலாம். தொலைபேசியில் அழைக்கலாம். கடிதம் எழுதலாம். ஒழுங்கான வார்த்தைப் பரிமாற்றங்கள் நிகழும். அதிலேயே சிக்கல் யாதெனில், நாம் பெரும்பாலும் வெளிப்படுத்த விரும்புவதைத் தெரிவிக்கப் பேசுவதில்லை. மனதும் வார்த்தையும் நேர் கோட்டில் இருப்பதில்லை.  எனக்கு அத்தகைய பரிமாற்றங்கள் பிடிக்கவில்லை. ரொம்ப யோசனை செய்யாமல், வார்த்தை தேடாமல், நேரம் பார்க்காமல், வார்த்தை தடிக்காமல் "இந்த நொடி உன்னுடன் பேசப் பிடிக்கிறது, பேசறேன் அவ்வளவே ", என்று யார் கூடப் பேச முடியுமோ, பேசினால் போதுமே?

வாட்சப் அத்தனை குறுக்கு வழி யோசனைகளையும் அதிகமாக்கும் ஒரு சாபக்கேடு. ரூம் போட்டு யோசித்து மனவக்கிரம் வெளிப்படாத செய்தி அனுப்பலாம். அதில் என்ன நேர்மை இருக்கும்? வார்த்தை தேடித் தேடி செய்தி அனுப்பலாம். அதில் நேர்மை எங்கே இருக்கும்? நாள் முழுதும் அதில் மூழ்கி அதை மற்றவர் அறியா வண்ணம் செய்ய பல வழிகள் உண்டு. இதெல்லாம் தேவையா? இது பற்றி எழுதுவதே நேரவிரயம். இப்போ எனக்கு ஏன் திடீர் கோபம் அல்லது ஞானோதயம் என்று என் வாட்சப் தொடர்புகள் கேட்கிறார்கள். சரியான கேள்விதான். ஞானம் எப்பவோ ஏற்பட்டது. ஆனால் நான் புத்தராக இல்லாததால், ஞானப்பாதை எனக்கு மூடிக்கொண்டது. கோபம்?  உண்டு. எப்படி என சொல்கிறேன். நான் தொலைபேசுபவர் எண்ணிக்கை குறைவு. ஆனால் அப்படிப் பேசுவோரிடம் எந்தவித மனத்தடைகளும் அற்ற, கணக்குப் பார்க்காத எளிய தொடர்பு என்னுடையது. அதைக்  காணாமல் செய்தது வாட்ஸப்தான். நேர்பேச்சு  மனச்சுருக்கங்களுக்கு இஸ்திரி போடும். இந்தக் குறும் செய்திகள்,  Indifference, Ego,sarcasm, Imagined  Superiority, போன்ற மறைக்க வேண்டிய உணர்வுகளை--இந்த உணர்வுகள் இல்லாமல் இருப்பது உத்தமம். அப்படி இருந்தால் , அவற்றை  வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். யார் மீதும் குற்றம் இல்லை. நான் அனுப்பும் வாட்சப் குறும்செய்திகள் மற்றவருக்கும் இதையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் உன்னுடன் தொடர்பில் வர இப்போது இயலாது என்பதை செய்தியாகப் படிப்பதற்கும், வார்த்தைகளில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்திருந்தால், என் போன்ற வேற்று  கிரஹவாஸிதான் நீங்களும்.

செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்து இங்கு வாழ வேண்டுமானால், இப்போது பூமிப்பந்து சிக்கியிருக்கும் ஆபத்துகளை, கேன் வில்லியம்சன் போன்று தவிர்க்க இயலாதவை என்ற தலைப்பின் கீழ் போட்டு அமைதி காத்து வாழ முயலலாம். அல்லது தற்காத்துக் கொள்ளலாம். அறிவை திசை திருப்பி, தவறான ஊகங்கள், புரிதலுக்கு இட்டுச் செல்லும் ஒன்று எப்படி நல்லதாகும்? Facebook ம் இதே கைங்கரியம் செய்கிறது . நான் அதிகம் பயன்படுத்தாததால், அது என் வாயில் விழவில்லை. கைபேசியே கெடுதல்தான். தொலைபேசி ஒரு தொலைத்தொடர்பு சாதனம். இருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ளவருடன் பேச. இப்போ என்ன நடக்கிறது?  அடுத்த வீட்டில் உள்ளவரிடம் கூட, போய்ப் பேசுவதில்லை. கைபேசி வழி தொடர்புதான். அதுவும் இளைஞர்கள் ஒரு படி மேல். கைபேசி சிணுங்கின உடன் அதை எடுத்துக் கொண்டு வேறிடம் ஓடுகிறார்கள். இருந்த இடத்தில் இருந்து பேசும் வசதியைத் தொலைத்த  தொலைபேசிக்கு, பெயர்மாற்றம் செய்யலாமா? நூறில் தொண்ணூறு பேர் செய்வதால், ஒரு தீமை நன்மை ஆகாது. அதேதான் இதற்கும். எல்லா சாதனங்களையும் அவசியத்திற்குப் பயன்படுத்துகிறோமா அடிமைப்பட்டுப் பயன்படுத்துகிறோமா என்று நம் மனம் சொல்லும். வாட்சப் பயன்படுத்தும் போது ஒரு முறை கூட திருட்டு, குருட்டு யோசனைகள் தீண்டவில்லையானால், நாம் அவசியம் கருதிப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில், அது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே. 

Friday, July 12, 2019

உள்ளும் உடம்பும்

அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தோம்,நேற்று இந்த நேரம். அமைதி. உள்ளும் புறமும். அலைகடல் ஓரம் ஆசிரமம். கடலின் உள்ளே ஆழம். கடலின் மேற்பரப்பு அதற்கு சம்பந்தமே இல்லாத ஓயாத Activity . ஒரு நிமிடம் இந்த அலைகள் சும்மா இருக்கா பாருங்கள். அடியில் எப்படி இருப்பாய் என்றால் அதை விவரிக்க அலைகளால் இயலாது. அது போன்று ஆழ்மன எண்ணங்களுக்கு வடிவம் தருவதும் சிரமமே. அதனால்,பயண அனுபவங்கள் பற்றிய விவரங்கள் நோக்கி போஸ்ட் நகர்கிறது.

பயணம் படிப்பினை என்கிறோம். உள்ளிற்கா உடம்பிற்கா? உடம்பு அடையும் அனுபவங்களையே உலகம் படிப்பினை என்கிறது. அந்தப் படிப்பின் பலன் உடல் அழியும் போது முடிந்து விடுகிறது. உடம்பால் வள்ளுவன் சொன்னாற் போல் கசடற கற்க இயலுவதில்லை. மனத்தால் அது சாத்தியம். கற்றது மனதில் நிற்கும். அதன்படி நிற்றலும் நிகழும். பயண அனுபவங்களை அனுபவித்து பாராட்டி சொன்னவர்கள் உள்பயணத்திற்கு புறப்பயணம் ஒரு பாடம் என்று சொல்லி இருப்பின் அது உண்மையே. இல்லை என்றால் அது பொய் . அது ஒரு தற்காலிக குதூகலம் அன்றி வேறெதுவும் இல்லை. நேரம்,வயிறு, எல்லாவற்றின் மேலும் செய்யும் Attack . பணம் மீதும்  என்று சொன்னால் அடி வாங்குவேன். என்னை கருமி என்று நினைப்பீர்கள். 

குளிர் பிரதேசத்தில் பயணிக்க கம்பளி வேண்டும், வெப்பமான இடம் என்றால், காட்டன் உடை வேண்டும், பஸ் இல்லாத இடத்திற்கு காரில் போக வேண்டும் , முன்னாடியே பயணச்சீட்டு வாங்க வேண்டும் , இங்கு இந்த உணவு கிடைக்கும் அல்லது கிடைக்காது போன்ற superficial விஷயங்கள் தெரிந்து பெரிய பலன் என்ன, தெரியவில்லை. மறுபடி அந்த இடங்கள் சென்றால் கஷ்டம்  அதிகம் இருக்காது. திட்டமிடல் சுலபம். அவ்வளவுதான். வேறு யாரோ கேட்கும் போது , அந்த லாட்ஜ் போகாதே, ஏசி வேலையே செய்யாது என்று நம் ஒரு நாள் அனுபவத்தை  நிஜம் போன்ற தொனியில் கூறி நாம் தங்க இடம் தந்தவருக்கு ஒரு கஸ்டமர் கிடைக்காது செய்யும் நல்ல காரியம் செய்வோம்.

உள்ளும் மனமும் அடையும் அனுபவம்,பாடம் வேறானது. ஆனால்,அதற்கு உடல் பயணப்பட வேண்டுமா என்பதே கேள்வி. தேவை இல்லை என்பது கருத்து. ஒரே இடத்தில் இருந்து கொண்டு நீண்ட தொலைவு பயணிக்கலாம்.சுகமாக. கண்மூடி. ரோடில் அது முடியாது. "ஏ பெரிசு,சொல்லிட்டு வந்திட்டியா" என்பார்கள். உடம்பின் வேகத்தை விட உள்ளின் வேகம் அதிகம். பயண முன்பதிவு வேண்டாம். மாறி மாறி சாப்பிட வேண்டாம். உள்ளிற்கு உடை,Presentable ஆன உடை தேட வேண்டாம். ஏறி,இறங்கி, முட்டிக்கு தைலம் தேட வேண்டாம். ரெண்டு நாள் தங்கின ரூமை விட்டுக் கிளம்பும் நேரம், மனதில் ஒரு Pang உடன் திரும்பிப் பார்க்க வேண்டாம். மறுபடி எப்போ பயணம் என்ற எதிர்பார்ப்புகள் வேண்டாம். ஆனால் பயணம் சந்தோஷமே. சின்ன சந்தோஷமே. சின்ன ஆசைகளின் கூட்டமே உடல்  வாழ்க்கை. படிப்பினை என்ற கதைகள் சொல்லாமல், அது என் சின்ன ஆசை. பயணிக்கிறேன் எனலாம். மற்றபடி, புறப்பயணம் தவிர்த்து அல்லது குறைத்து பரமசிவன் கழுத்து பாம்பு போல் ஓரிடம் இருக்க இயன்றால் அது சௌக்கியமே. பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

Monday, July 8, 2019

VERBAL DIARRHEA

வயிறு கோளாறாகி, கழிவு ஆசனவாய் மூலம் வெளியேறினால் அதன் பெயர் ஆங்கிலத்தில் டயேறியா. வார்த்தைகள் தடித்து வாய்வழி கட்டுப்பாடற்று வெளியேறினால் அதன் பெயர் வெர்பல் டயேரியா. தடித்த வார்த்தைகள் மலத்திற்கு சமம். வயிறு கோளாறு நீங்க கழிவு வெளியேறணும் . ஆனால் வெர்பல் டயேரியா கட்டுப்பட வார்த்தைகள் உள்ளே போகணும். எதையான சாப்பிட்டு ஒரு முறையேனும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அவதிப் படாதவர் இல்லை. அதே போல் வார்த்தை தடித்து வார்த்தைகள் கொட்டி அனுபவப் படாதவரும் இல்லை. வயிற்றுப் போக்கை அவதி என்கிறேன். ஆனால் வார்த்தை வீச்சை ஏன் அனுபவம் என்கிறேன், தெரியுமா?  காரணம் உள்ளது.வயிற்றுப்போக்கு வியாதி என்று உணரும் நாம்,அவதி என்று உணரும் நாம், வார்த்தை வீச்சும் வியாதி என்று உணரவில்லை. ஒரு கேவலமான,திருத்திக் கொள்ள வேண்டிய அனுபவம் என்று உணர்வோர் கூட சிலரே.

வயிறு சுத்தமாக இருக்க எப்பவும் சரியாக அளவாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் மாறினாலும் கோளாறு. வார்த்தை சுத்தத்திற்கும் அதேதான். அளவு மீறும் எல்லாம் நஞ்சு. விஷம். இயற்கை ஒரு கொடை . தவறு ஏற்பட முடியாத இறைவனின் அரசாட்சி வழங்கிய கொடை . அதில் எல்லாம் இன்பம்தான். நாம் குறுக்கிடாதவரை இன்பம்தான். நமக்குத்தான் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்க வேண்டுமே? Limited Human Vision கொண்டு தலையிட வேண்டுமே? விலங்குகள் ஒரு நாளை எப்படி எதிர்கொள்ளும்? சாதாரணமாக. ஆனால் சுனாமி வந்தால்,வெடிச்சத்தம் கேட்டால் என்ன செய்யும்? ஓடும்.பயம் கொள்ளும் . பதுங்கும். அதுவே இயல்பு. நமக்கும் அதே விதிதானே . ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒன்று. கஷ்டங்கள் வரும் போது வருந்தலாம். எப்படி வெளிவருவது என யோசிக்கலாம். மகிழ்ச்சியாக இருக்க காரணம் தேவை இல்லை. ஆனால் வருந்த, காரணம் வேண்டும். ஆனால் இப்போ எல்லாம் உல்ட்டா.

மகிழ்ச்சி அடைய மால் போக வேண்டி உள்ளது. வீட்டில் விசேஷம் ஏதும் வர வேண்டி உள்ளது. தோழர்களுடன் டூர் போக வேண்டி உள்ளது. உணவகத்தில் டின்னர் சாப்பிட போக வேண்டி உள்ளது. நல்ல உடை அணிந்து கொள்ள வேண்டி உள்ளது. மற்றவரைக் கவருமாறு பேச வேண்டி உள்ளது. மொத்தத்தில் சிரிக்க காரணம் தேட வேண்டி உள்ளது. அதையும் வெளியே தேட வேண்டி உள்ளது. ஆனால் , வருந்த,முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,வார்த்தை அம்புகள் வீச , அடாதன செய்ய காரணங்கள் தேவைப்படுவதில்லை. மலம் வெளியேற ஒரே வழி உள்ளது. மனமலங்கள் வாய்வழி வெளியேறுகின்றன. ஏனெனில் ஐம்புலன்களில் இரு செயல்கள் செய்ய வாய்க்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பேச்சு,பேச்சு.கல்யாண வீட்டிலும் பேச்சு. மற்ற வீட்டிலும் பேச்சு. சாதாரணமாக காலைக் கடன் கழிக்கிறோமே அது போன்று நிகழும் இயல்புப் பேச்சல்ல. வீட்டில் சீரக ரசமும் கத்திரிக்காய் கூட்டும் சாப்பிட்டு, அது செரிமானமாகி மறுநாள் இயல்பாக வெளியேறும் விஷயம் போன்ற, வெளியேறின பின் அப்பாடா என நிம்மதி தருமே அந்தப் பேச்சல்ல. விடியும் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு போகாமல், சந்தோஷங்களுக்கு காரணம் தேடி, காரணமின்றி துன்பம் தேடி, ஹோட்டல் பரோட்டா சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வது போல், வேண்டாதன எண்ணி மனத்தைக் கெடுத்துக் கொண்டு செய்யும் வெர்பல் டயேரியா .

வயிற்றுப்போக்கு நிற்க வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். தானாக நிற்குமாக இருக்கலாம். ஆனால் நாளாகும். அதற்குள் Weak ஆகி விடுவோம். வெர்பல் டயேரியா நிற்க எண்ணங்களுக்கு,மனசுக்கு வைத்தியம் தேவையே. அது தானாக நிற்பதில்லை. நம் உயிர் உள்ள வரை நிற்பதில்லை. என்ன,வயிற்றுப்போக்கு நமக்குத் தெரியாது நிகழ வாய்ப்பில்லை. VERBAL DIARRHEA IS NOT A CONSCIOUS PHENOMENON , UNFORTUNATELY . சஞ்சய் மஞ்சரேக்கருக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்து செய்தியான , நான் முதல்முறையாகக் கேட்ட VERBAL DIARRHEA என்ற பிரயோகம் இந்த போஸ்ட்டின் மூலம். இந்த பிரயோகம் எனக்குப் புதிதே தவிர கருத்துக்கள் மிகவும் பழசு.

ரஞ்ஜனி த்யாகு  

MOTHER LEADS

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...