Saturday, June 25, 2022

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலைமுறையல்ல அனிதா. நேரம் தெரிய வேணுமானால் எழுந்தே ஆகணும். கண்ணை  இடுக்கிக் கொண்டு பார்த்ததில் இருள் பிரியத் தொடங்கி இருப்பது தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கலாமா என்ற ஆசையைப் போர்வையுடன் சேர்த்து உதறி விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள். நேற்றைய தின பரபரப்பின் தாக்கம் மீதி இருந்தது. மனப் பேழையில் தேவையற்றதொரு சுமை . இறக்கி வைத்தால்தான் இன்றைய நாள் ஓடும். அதற்கு கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். இந்த அதிகாலைப் பொழுதைத் தவிர அதற்கு ஏற்ற நேரம் கிடைக்காது.  பல் துலக்கி , அரை லிட்டர் பால் மட்டும் காய்ச்சி , கொஞ்சம் ப்ரூ  காபித் தூளைப் போட்டு மடக் மடக் என அரை டம்ளர் காபியைக் குடித்து விட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பாலா நிம்மதியாய் உறங்குவதை மெல்லிய குறட்டை சப்தம் உறுதி செய்ய அப்பாடா என்று இருந்தது. எப்படி எந்த பாதிப்பும் அன்றி இவனால் தூங்க முடிகிறது என்ற எண்ணம் கோபம் தந்தது. ஒரு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கீழே இறங்க யத்தனித்த போது ரெண்டு மாடி இறங்கி நடைப் பயிற்சி தேவையா என்று கால் கெஞ்சுவது போல ப்ரமை. ஆனால்  யோசிக்க அதிகம் நேரம் இல்லை. இன்னும் அரை மணியில் குடியிருப்பு முழித்துக் கொள்ளும். இப்போதே யார் கண்ணிலாவது பட்டால் தொணதொணவெனப் பேசப் பிடித்துக் கொண்டு விட்டால் எப்படித் தப்புவதென மனம் அசை போட்டது. ஆமாம், நமக்கே மனசில் கனம் உள்ள போது யாருக்கோ பஞ்சாயத்து பண்ணப் பிடிக்குமா. மனதைக் குரங்கென்று தெரியாமலா சொன்னார்கள். நினைப்பது நடக்குமா நடக்காதா என்று அறியும் திறன் இல்லாவிட்டாலும் என்ன குதி குதிக்கிறது.

அவள் நினைத்தது நல்ல வேளையாய் நடக்கவில்லை. குடியிருப்பு இன்னும் உறக்கம் கலைந்து எழவில்லை. செக்யூரிட்டி  கண்ணன் தவிர வேறு அரவம் இல்லை. அவரது வணக்கம் மேடமே அநாவசியத் தொல்லை போலத் தோன்றியது. தரைக்கு வலிக்குமோ என்பது போல மெதுவாக நடக்கத்  தொடங்கினாள். முந்தைய நாள் நிகழ்வுகள் திரைப்படம் போல் மனதில் ஓடின. குரல் உயர்த்துவதில்லை என்ற தன் சபதம் எத்தனையாவது முறை  நேற்று தோல்வியைத்  தழுவிற்று எனக் கணக்குப் போட வெட்கம் தடை போட்டது. கோபம் வெற்றி இல்லை. தோல்வி. வருத்தம் வெற்றி இல்லை. தோல்வி. அமைதி வெற்றி. மகிழ்ச்சி வெற்றி.எப்படித் தோற்காமல் இருப்பது. இப்போதெல்லாம் பாலாவுடன் வாக்குவாதம் செய்யவே பொழுது புலர்கிறதோ என்ற நினைவு எட்டிப் பார்த்தது.  அவள் செய்யும் எல்லாவற்றையும் இன்னும் நன்றாக செய்கிறேன் பேர்வழி என அவன் மாற்றிச் செய்வதும் தான் செய்வதே சரி என்ற அவன் தன் நிலை விளக்கங்களும் சலிப்பையே தந்தன. கல்யாணம் என்பது சில வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் நித்திய போராட்டத்திற்குப் போடப் படும் முடிச்சா.? ஆயாசமாக இருந்தது.  அதனால்கோபம். இதற்கா வந்தோம் என்ற வருத்தம்.  அவனும் இதே எண்ணம் கொண்டிருக்கலாம். ஆமாம், அவன்  மனதில் உள்ளதை உட்கார்ந்து பேசி விடவா போகிறான். பேசி என்ன பயன். ஒரே கூரை கீழ் ஒரே மொழி பேசி வாழ்ந்தாலும் பரிதலில் ஏன் ப்ரச்சினைகள். 

யோசித்துக் கொண்டே நடந்த போது கிக்கீ பூனை ஒய்யாரமாய் தூரத்தில் உட்கார்ந்திருந்தது. அதுவும் ஏதோ யோசனையில் இருந்தது. முந்தைய நாள் நடப்பை யோசித்து கவலைப் பட அதற்குத் தெரியாது என்று மட்டும் சற்றே பொறாமையுடன் உணர்ந்தாள் அனிதா. கவலையும் எல்லாவற்றையும் ஊதி ஊதிப் பெரிதாக்குவதும் மனித இனத்தின் ஏகபோக சொத்து போல. பறவைகள் மேலே ஒலி எழுப்பிக் கொண்டு இரை தேடப் புறப்பட்டிருந்தன. அவற்றிற்கு மனம் என்ற ஒன்று  இல்லை. அதனால் பாரம் இல்லை. நாமும் லேசாக இருந்தால் பறவை போலப் பறக்கலாம். கிக்கீ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவளுக்கு அதைப் பார்ப்பது சுவாரசியமாய் இருக்கவே சற்று தள்ளி இருந்த ஒரு மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.

திடீரென கிக்கீயிடம் ஒரு துள்ளல் தெரிந்தது. “ஓ இதுதானா காரணம்! கறுப்பு பூனை வருவதைப் பார்த்த மகிழ்ச்சி.  அது பூனை நடை போட்டு கிக்கீக்கு மிக அருகில் வந்தமர்ந்தது. இந்த கறுப்பு பூனைக்கு பயமே கிடையாது. அலட்சியமாய் நம்மைப் பார்க்கும். இரண்டும் ஒன்றை ஒன்று  சற்று நேரம் பார்த்துக்  கொண்டன. சன்னமாய் ஒலி எழுப்பின. பிறகு ஒன்றன் மீது ஒன்று தாவிக் கட்டிப் புரண்டன.அது சண்டையா கொஞ்சலா தெரியவில்லை. தான் இருந்த மனநிலையில் அது சண்டைதான் என அனிதா முடிவு செய்து கொண்டாள். ஒன்றுக்கொன்று என்ன சொந்தம், நேற்று அவற்றிற்குள்ளும் ஏதும் மனவேறுபாடா  புரியவில்லை. இப்போது ஒரு குட்டிப் பூனையும் வந்து சேர்ந்து கொண்டது. அவர்கள் குடியிருப்பில் பூனைகள் அதிகம். அவைகள் அரச போகம் அனுபவித்தன எனலாம். என்ன,வாடகை தர வேண்டாம்.  காலை சிற்றுண்டி மதிய உணவு இரவு உணவு இலவசம். அசைவ உணவு தேவைப் பட்டால் எலிகள் தானாக வந்து அவற்றிடம் மாட்டும். இப்போது குரல் உயர்த்தி மூன்றும் ஏதோ பேசின. அமைதியாகின. சேர்ந்து அவ்விடம் விட்டு அகன்றன. அவற்றுக்கு ஏதும் ப்ரச்சனையா. தெரியாது. அது தீர்ந்ததா. தெரியாது. கிக்கீ தன்னை மற்ற இரண்டு பூனைகளுக்கும் புரிய வைக்க முயன்றதா. இல்லை. ஆனால் சக பூனைகளுடன் விரைவாய் கிக்கீ இயல்பாகி விட்டதே. தன்னால் பாலாவுடன் அவ்வளவு விரைவில் சுமுகமாக இயலவில்லை என்றிருந்தது அனிதாவிற்கு. அதனிடம் உள்ள எது அவளிடம்  இல்லை? பூனை  ஒரு அற்ப ப்ராணி. அவளிடம்தான்  ஏதோ அதிகமாக இருக்க வேண்டும். மனிதப் பிறவி ஆயிற்றே!. ஆறாவது அறிவும், மனமும், கர்வமும், கவலையும் , தான் என்ற எண்ணமும், பலம் என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் பேச்சும்அதனிடம் இல்லை. எல்லாரிடமும் வாதம் செய்து வெற்றி பெறும் வேண்டாத வேலை அதற்கில்லை. மௌனம் மொழியை விட மேல். மௌனம் புரிந்து கொள்ளப் படும் இடங்களில் பேச்சு தேவை இல்லை. அனிதாவிற்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. பாலாவுடன் கோபமாகப் பேசக் கூடாது என்று நினைத்துக் கொள்வாள். நீள வசனங்கள் அவனை எரிச்சலாக்குவதாக எண்ணிக் கொள்வாள். ஆனால் ஒரு முறை கூட முழு அமைதி காத்ததில்லை. இரைச்சல் பலம், அதுவே வெற்றி என்ற தப்பான பாடங்களை உலகம் எப்படியாவது நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது. 

சூரியன் மேலே எழும்பத் தொடங்கி இருந்தான். இயக்கம் ஆரம்பமாகி விட்டிருந்தது. காரைத் துடைக்க பாலா வருவது தெரிந்தது. அனிதாவின் வசவுகளையும் அறிவுரைகளையும் எத்தனை நேரம் கேட்கணுமோ என்று அவன் முகம் கவலை காட்டிற்று. அல்லது அவளுக்கு அவ்வாறு தோன்றிற்று.

 “குட் மார்னிங்  பாலா”

“குட்மார்னிங். நல்லா தூங்கினயா?”

“ம் தூங்கினேன். முழிப்பு வந்தது. வாக் பண்ண வந்துட்டேன்.”

நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன்  அவனுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

அவனிடம் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. “எப்போது எப்படித் தொடங்கப் போகிறாளோ !”பேசி அனைத்தையும் புரிய வைத்து விடலாம் என்ற அவள் பிறவிக் குணம் எட்டிப் பார்த்தது. நிதானித்தாள். மூச்சை இழுத்து ஒரு முறை விட்டுக் கொண்டாள். பூனைகளின் மௌனமான வட்ட மேசை மாநாடை நினைத்துக் கொண்டாள்.மனத்தேரில் கிக்கீ க்ருஷ்ணன் போல தேரோட்டி இடத்தில் அமர்ந்து இருந்தது. அனிதா பார்த்தன் போல பய பக்தியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிக்கீ பற்றியாவது பேச வேண்டுமோ என்ற ஆவல் தலை தூக்கிற்று. ஆனால்  மௌனம் சுகம் என்று உணர்ந்து கொண்ட மனசுக்கு அந்த இரண்டு நிமிட மௌனம் கூட சுகமாக இருந்தது. எதுவும் பேசி அதைக் கெடுத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவனையும் அந்த அமைதியின் அதிர்வுகள் தொட்டிருக்க வேண்டும். அவன் கண்கள் அந்த எண்ணத்தைப் ப்ரதிபலித்தன. பொலபொலவென விடிந்த அந்த காலைப் பொழுது போல மனசும் ரம்யமாய் இருந்தது.

Tuesday, March 8, 2022

திருமணங்கள் பாகம். மூன்று

 நாளை மகளிர் தினம். இந்த வாரம் சில பெண்களுடன் சற்றே அதிக நேரம் பேச நேர்ந்தது. அது தலைவலியில் முடிந்தது என்றால் மிகை இல்லை. திருமணத்திற்குப் பின் சுயம் தொலைத்து விட்டேன் என்று கூறும் பெண்கள் என் மனதை விட்டு லேசில் நகர்வதில்லை.  எல்லாப் பெண்களும் அப்படியா அப்படித்தானா தெரிந்து கொள்ள இன்னும் பலருடன் பேச வேண்டும். அவர்கள் தம் சொந்தக் கதையைப் பகிர நான் சரியான ஆளா என்று முடிவு செய்ய வேண்டும். ஏன் எல்லாப் பெண்களும் பொசுக் என அழுது விடுகிறார்கள். ஒரு செடியை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட்டாலும் அது அதே செடியே. துளசி வாடாமல்லியாகி விடுவதில்லை. ஆனால் பெண் இடம் மட்டும் பெயர்வதில்லை. வேறு யாரோ ஆகிறாள்.திருமண பந்தம் புனிதமானது என்று வறட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டு வீட்டிற்குள் கோழை போல் நடப்பவர்களுக்கு எதற்குத் திருமணம். யாரை ஏமாற்ற இந்த வேஷம்.

நான் சந்தித்த முதல் நபர்.  சிரித்து நாற்பது வருடங்கள் ஆனது என்றாள். தன்னை வாயைக் கூடத் திறக்க விடாத கணவன் எப்போதும் தான் வைத்ததே சட்டம் எனும் கணவன். கடந்த காலத்தில் இருந்து வெளி வர இயலாத பழம் பெருமை பேசும் கணவன். இன்னும் பல. இந்தியாவில் திருமணங்கள் பெண்களைக் கட்டித்தான் போடுகின்றனவா, தெரியவில்லை. ஆண்களுமே சுதந்திரத்தை இழக்கத்தானே செய்கிறார்கள். சண்டைகள் இல்லாத வீடுகளே பார்க்க இயலவில்லை. ஏதோ கோளாறு. எங்கோ இடிக்கிறது. அனைவருடனும் இணக்கம்தானே இயல்பு. நம்முள் உள்ள எது போருக்குத் தயாராகிறது. அதை விலக்கினால் எல்லா இல்லங்களும் அமைதிப் பூங்காவாகி விடுமா.

இப்போது திருமணத்தைத் தள்ளிப் போடும் அல்லது மறுக்கும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. சுயத்தை இழக்கத் தயாரானால் மட்டுமே திருமணம் சாத்தியம் என்ற உண்மையை பகிரங்கமாக வெளியிட்டு எனக்குக் கட்டுகள் வேண்டாமே என்பவர்கள். அவர்கள் சார்பாக பேசினால் நான் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறேன். உலகம் மாற்றங்கள் சந்திப்பது இயல்பாய் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமே என்றே நினைக்கிறேன். பால்ய விவாகம் நடந்தது ஒரு காலம். கந்தர்வ விவாகம் ஒரு காலம். வர்ணக் கலப்பற்ற திருமணங்கள் நடந்தது ஒரு காலம். வர்ணக் கலப்புகள் இயல்பாகி விட்டது ஒரு காலம். திருமண பந்தம் இன்றி சேர்ந்து வாழ்வது கூட அதிர்ச்சியான செய்தி இல்லை என்பது ஒரு கலிகாலம். ஒன்றைத் தள்ளி மற்றொன்று அதன் இடத்தை ஆக்ரமிப்பது வாழ்வின் நியதிதான். யாரைத் திருமணம் பண்ணலாம் என்ற முடிவைக் குழந்தைகள் எடுக்கலாம் அந்த அளவு நல்லதும் கெட்டதும் அவர்களுக்குத் தெரியும் என்று  நம்பும் நாம் கல்யாணம் தனக்கு சரி வருமா என்ற முடிவை மட்டும் அவர்களிடம் விடாமல் ஏன் பிடிவாதமாக  நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக இணக்கமாக வாழ முடியும் என நினைப்பவர்கள் பந்தப் படட்டும். சோதனை ஓட்டம் நடத்தி விட்டு இந்த வண்டி சரியாக ஓடவில்லை என்று தூக்கிப் போட இது வாகனமல்ல. வாழ்க்கை. இரு மனங்கள், சம்மந்தப்பட்டதால் சிறு பிழைகளும் வடுக்களாகும்.உலக வழக்கத்தில் இருந்து மாறுபடும் எல்லாம் சரியில்லை என்கிறோம். ஆனால் தவறும் இல்லை.

Monday, January 24, 2022

அஞ்சலி

 இன்று என் மாமனாரும் மாமியாரும் வாழ்ந்த வீட்டிற்கு ஒரு மாத்த்திற்கப்புறம் சென்று வந்தேன். வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யத்திற்கு சென்று வந்தது போல உணர்ந்தேன். போர் முடிந்த பின் உள்ள இடிபாடுகள் போல அங்கங்கே தூசு.அமைதி. நேற்று வரை உச்சகட்ட Activity நடந்த இடம் என்று கூட இருந்து பார்த்திருந்தாலொழிய நம்ப சிரமம். ஆமாம். வாழ்க்கை போர்தான். ஒரு ஆசிரமத்தில் அமைதி காப்பது கடினமில்லை. அமர்க்களத்தில் அமைதி காப்பது. வாழ்வு அப்படித்தான். இன்று ஒரு மாதம் ஆகிறது. மனதில் அலை மோதும் எண்ணங்கள். கோவிட் காரணமாய் மறைந்ததால் எந்த சப்தமும் இல்லாத சடங்குகள். எல்லோரும் வருந்தினார்கள். அவர் பாவம் என்றார்கள். அது சரியா தெரியவில்லை. சடங்குகளுக்கும் அனாவசிய ஆராய்ச்சிகளுக்கும் செலவிடும் சக்தியின் ஒரு பாகம் கூட அவர் இருந்த போது அவரைப் புரிந்து கொள்ள சகித்துக் கொள்ள செலவு பண்ணாத யாரும் ஏன் வளவள எனப் பேச வேண்டும். பேசுவது பொருள் அற்றதாய் உணர்கிறேன். சாப்பாடு சடங்குகள் என்ற திட்டமிடல் ஆயாசமாக உள்ளது.வாழ்வில் வைக்கும் பற்று வேறு. வாழ்வை நடத்தத் தேவையான உற்சாகம் வேறு. தாமரை இலையும் தண்ணீரும் உறவாடிக் கொண்டேதான் உள்ளன. வெளியே தெரிய அவசியம் இல்லை. உள்ளே எல்லாவற்றையும் விட்டு விடலாம் போல உள்ளது.

சரியாக ஆறு மாதமாக எழுதவில்லை. காலம் காலில் சக்கரம் கட்டிக் கொண்டாற் போல ஓடித்தான் போனது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. சமீபத்தில் இயந்திரமான மனிதனையும் மனிதன் போலவே இயங்கும் இயந்திரத்தையும் பற்றிப் படித்தேன். ரசித்தேன். ப்ரோக்ராம் பண்ணியது போல இயங்கும் நாம். நிதானப்பட நேரமற்று நம்மைக் கேட்காமலே அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கும் நம் வாழ்வு. மறைந்தவர்கள் நினைவு கூரப் படுகிறார்களா. எந்த அளவு. அவர்கள் பற்றி நாம் அறிந்ததை எல்லாம் கூடிப் பேசுவதுதான் அஞ்சலியா. பேச்சு உள்ளத்தின் மொழியா உதட்டின் மொழியா. உள்ளத்தின் மொழி என்றால் அது மௌனமே அன்றோ. உதட்டின் மொழி எனில் அதற்குத் தேவைதான் என்ன. நாமும் இதே போல ஒரு நாள் யார் உதட்டில் இருந்தோ வரும் வார்த்தைகளில் மட்டுமே வசிப்போம் எனில் என்ன ஆர்பாட்டம் வேண்டிக் கிடக்கு. எதற்கு மூச்சுத் திணறும் அளவு நெருக்கம், யாரோடுமே. நாம் நினைவு கூரப் படுவதால் ஒரு சந்தோஷம் வரும் என்றாலும் அதை நாமா உணரப் போகிறோம். வாழ்க்கையில் யாரை Impress பண்ண வேண்டும். எதற்கு ப்ரயத்தனப் பட வேண்டும்.இயல்பாக நம் வேலையைப் பார்த்தால் போதுமல்லவா. ஏதோ நினைவுகள்….எதுவும் நிற்பதில்லை. யாருக்காகவும் நிற்பதில்லை. நமக்குத் தெரியும். ஆனாலும் விரும்பி கட்டுண்டு கிடக்கிறோம். கட்டுக்கள் தளரட்டும். கண்ணன் அருள் நம்மைச் சூழட்டும். 

Friday, April 30, 2021

அம்மா

 நேற்று சாலை சிக்னலில் ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். என் இடுப்பு உயரம் மட்டுமே இருந்த சிறுமி. குட்டி மனிதர்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இந்தக் குழந்தை கவனம் ஈர்த்ததற்கு வேறு காரணமும் உண்டு. அந்த சிறுமியைக் காட்டிலும் சிறிய இன்னொரு குழந்தை ஆனந்தமாக அக்கா இடுப்பில் சவாரி மேற்கொண்டிருந்தது. சிறுமி அதனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். கண்களில் அப்படி ஒரு வாஞ்சை. சிக்னல் காத்திருப்பு இரண்டே நிமிடங்கள். அந்த நேரத்திற்குள் அந்தக் கண்களின் மொழி புரிய ஒன்று நமக்கு காமரா கண்கள் வேண்டும். அல்லது அவ்வளவு பகிரங்கமான நிகழ்வாக அது இருந்திருக்க வேண்டும்.அப்போது தோன்றிய எண்ணங்களின் வடிவமே இந்த போஸ்ட்.

பெண் குழந்தைகள் Special. பெண்கள் அம்மா ஸ்தானம் பெற வயதாவதோ கல்யாணம் ஆவதோ முக்கியம் இல்லை. மனசில் காருண்யம் உள்ள எல்லாரும் அம்மாதான்.பண்டைய நாள்களில் தம்பி பாப்பா பிறந்த கணம் முதல் பெண் குழந்தை பாதி அம்மாவாகி விடும். இப்போ உள்ள நாம் இருவர் நமக்கொருவர் குடும்பங்களுக்கு இந்த செய்திகள் Out of syllabus.அன்பாக இருப்பவள் அம்மா. மற்றவர் குறைகளைப் பெரிது படுத்தாதவள் அம்மா. மன்னிக்கத் தெரிந்தவள் அம்மா. எல்லாம் பண்ணி விட்டு சொல்லிக் காட்டாமல் இயல்பாய் இருப்பவள் அம்மா. சக உயிர்களின் துன்பம் காண சகியாதவள் அம்மா. பொறுமை காப்பவள் அம்மா. இதெல்லாம் இருந்தால் ஆறு வயசு சிறுமி அம்மாதான். இந்த எந்த குணமும் இல்லாத அறுபது வயதுப் பெண் சும்மாதான். மிக முக்கியமான இன்னொன்று. அர்த்தநாரீஸ்வர தத்துவம் கூறுவது போல பெண்ணிடம் ஆண் தன்மைகள் உண்டு. ஆணிடம் பெண் குணம் உண்டு. அம்மாவின் குணங்கள் கொண்ட அற்புதமான Men இருக்கிறார்கள். தாயுமானவ ஸ்வாமி மாதிரி.

பேசலாம்.....

Monday, April 26, 2021

போர்

 வாழ்வு மூன்று கட்டங்களில் நகர்கிறது. இளமைப் பருவம். கல்யாணத்திற்கு முற்பட்ட பருவம். மத்தியில் உள்ள பருவம். முதுமை. வாழ்வை Rewind பண்ணிப் பார்ப்பவர் அனைவருமே ஏனோ சற்று அதிகம் பின்னால் போய் தங்கள் இளமைக்காலங்களையே அசை போடுகின்றனர். அப்போது அதுதான் அவர்கள் குடும்பமா. நடுவில் நடந்த கல்யாணம் குழந்தைகள் கணவன் மனைவி எல்லாரும் Guest role ஆ. ஏன். விடை எனக்கும் தெரியவில்லை. இளமை Carefree ஆனது. பிணைக்கும் கட்டுகள் இல்லை. பொறுப்புகள் இல்லை. கல்யாணம் நம்மைப் பெரியவர்களாக்கி விடுகிறது. தலைவனும் தலைவியும் ஆக்கி விடுகிறது. தலைவனாகத் தகுதி வேண்டும். வீடோ நாடோ எதுவானாலும். ஆனால் கல்யாணங்கள் அரை வேக்காடுகளுக்கிடையேதான் நடக்கிறது.  அனுபவத்தை ஆசானாக கொண்ட வாழ்க்கைக் கல்வி தொடங்குகிறது.

பல நாள்கள் தாண்டி தொடர்கிறேன். வாழ்க்கைப் புத்தகத்தைப் படிக்கும் போது இனிமையான அத்தியாயங்கள் படிக்கவே விரும்புகிறோம். இயற்கைதான். ஆனால் சாத்தியமா என்றால் இல்லை. அதில் சுவையும் இல்லை. நிழல் இருப்பதாலேயே நிஜம் உணரப் படுகிறது.  வெயிலே நிழலின் அருமையை உணரச் செய்கிறது. சிறு ஊடல்கள் சுவைதான். ஆனால் ஊடலும் கூடலும் வள்ளுவர் காலம். இப்போதெல்லாம் வன்முறைதான். சண்டைகள் வன்முறைதான். நேற்று வீட்டில் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது கொஞ்சம் வாக்குவாதம் காராசாரமானது. ஓ சண்டை வேண்டாம். எனக்குத் தலைவலி வந்துவிடும் என்று இடத்தை விட்டுப் போக எத்தனித்த போது அம்மா போகாதே பேசு. இதற்குப் பெயர் சண்டையா என்றனர் குழந்தைகள். அப்போது கேள்வி பிறந்தது. எது சண்டை. 

அசோக மஹாசக்ரவர்த்தி நிகழ்த்தினது ஒரு போர். குருசேத்திர யுத்தமும் போர். ஆங்கிலேயர்களுடன் நாம் நடத்தியது போர். சொத்து தகராறுகள் போர். குழாயடி சண்டையும் போர். குரல் உயர்த்துவதும் போர்தான். உடல் காயப் பட்டால் அதன் பெயர் போர் எனில் மனம் காயப் படுவதும் போர்தான். எந்தப் போரிலும் ஞாயத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டுதான் தேடணும். பின் என்ன. இரு தரப்பிலும் சிறு தவறாவது இல்லாமல் போர் மூளாது. வெளிப்பார்வைக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால் Consciousness ல் ஆவது தப்பு இருந்தால்தான் சண்டை வரும். எனக்கு என்னவோ அசோக சக்ரவர்த்தி நிகழ்த்தின போருக்கும் வீட்டில் குரல் உயர்த்தும் சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் உணர்வளவில் வித்யாசமே இல்லை என்றே தோன்றும்.தப்பு என்றால் தப்புதான். யார் செய்தாலும். குச்சி கொடுத்து அடி வாங்குவது போல தலைவலியை வலியப் போய் வாங்கிக் கொள்ளலாமா.

Thursday, March 18, 2021

பாத்திரம்

 இன்று ஒரு குறும் செய்தி வந்தது. எங்கே இருந்து என்கிறீர்களா. வாட்சப்தான். செய்திப் பரிமாற்றம் வேறு வழிகளில் நடந்து விடக்கூடாது என நாம் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வாட்சப்பை ஆதரித்து வருகிறோமே. சும்மா திட்டக் கூடாது. நல்லனவும் அவ்வப்போது வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்து விடுமாமே அது போல Vigilant ஆக இருந்தால் வாட்சப்பினால் பலன் உண்டு. இன்று என்ன செய்தி பார்ப்போம். ரமண பகவானிடம் ஒரு பக்தர் கேட்டாராம், விவேகானந்தர் தன் குரு மூலம் கடவுளைக் கண்டாரே அது போல உங்களால் எனக்குக் கடவுள் காட்சி தர முடியுமா என. பகவான் புன்முறுவலித்து விட்டு சொன்னாராம் முடியும், நீ விவேகானந்தரானால் அது முடியும் என.. இந்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது.அதுதான் பாத்திரமறிந்து பிச்சை இடல்.

இரண்டு கோப்பை மட்டுமே கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் நான்கு கோப்பை நீர் விட்டால் என்ன நடக்கும். நீர் கீழே வழியும் வீணாகும். நாம் பல சமயம் சின்ன பாத்திரமாக இருந்து கொண்டு இன்னும் இன்னும் என ஆசை கொள்கிறோம். தகுதிக்கு மீறி நம்மில் இடப்படும் எல்லாம் வீணே. சரியாக வாழ்வைப் படிப்பவர்க்கு எந்தப் பாத்திரத்தில் எதை எந்த அளவு இட வேண்டும் என்பதும் தெரியும்.இந்த இரண்டு நாளாக சமையல் அறையில் எந்தப் பாத்திரத்தைப் பார்த்தாலும் மனிதர்கள் போலவும் மனிதர்களைப் பார்த்தால் பாத்திரங்கள் போலவும் தெரிகிறது. அது சற்று உதவவும் செய்கிறது. யாரிடம் எந்த அளவு பேசலாம் என்று புரிகிறது. கொள்ளளவு கம்மியாக உள்ளதில் பாத்திரத்தின் பங்கில்லை. அது வடிவமைத்தவனின் Choice என்று  புரிகிறது. கடவுள் சிலரை எல்லாவற்றையும் ஏற்கும் பெரிய பாத்திரம் போலப் படைத்துள்ளான். அவர்களிடம் எதுவும் கூறலாம். உறவாடலாம். இடப்படுபவை கீழே சிந்தும் பயம், இல்லை. ஆனால் குட்டி வாளி என்று தெரிந்தும் அதில்  அதிகத் தண்ணீரைக் கொட்டப் பார்த்து அடடா எல்லாம் கீழே வீணில் போகிறதே என்ற புலம்பல் தவிர்க்க வேண்டும். 

பெரிய பாத்திரம், தான் அப்படி இருப்பது தன்னால்தான்  என்ற எண்ணம் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமோ அந்த அளவு Foolish எந்த கர்வமும். இடப்படுபவற்றை அமைதியாகத் தாங்குவது ஒரு கொடுப்பினை. சரியாக இருந்தால் சரியானது தேடி வரும். வரவில்லை என்றால் அந்தப் பொருள்கள் வேறு பாத்திரத்திற்குப் போக வேண்டியவை. நாம் அனைவரும் பாத்திரங்கள். பண்ணினவன் பார்த்துக் கொண்டுள்ளான்.

ரஞ்ஜனி த்யாகு

Mother Leads

Tuesday, March 16, 2021

அன்பும் சிவமும்

 அன்னையே சரணம்

எழுத பேனாவும் பேப்பரும் தந்த சுகம் கணினி அதாவது கம்ப்யூட்டர் தரவில்லை. அப்படியானால் என் வயதென்ன. சுகமும் துக்கமும் மாறி வரும் வாழ்வில் சற்றே நிரந்தரம் என்று என்ன உண்டு. கடந்த சில நாட்கள் ஏதேதோ யோசனைகள். என் மாமியாரின் இந்தப் பயணம் நிறைவடைந்து நமக்குத் தெரியாத அடுத்த பயணம் ஆரம்பித்தது. ஆரம்பமாகி இருக்க வேண்டும். மனிதன் Powerless என்பதையே எல்லா நிகழ்வுகளும் உணர்த்தின. எனக்கு விழுங்கவும் ஜீரணிக்கவும் இயலாத ஒன்று என்னவென்றால் மனித இனத்தின் முதன்மைப் படுத்திக் கொள்ளும் ஆசை. மனசு வருத்தத்தில் உள்ள போது கூட, என் வருத்தம் உன்னததை விடப் பெரிது என்பது Silly ஆக உள்ளது. எதற்கென்றே புரியாத Rituals. அதில் வசதிக்கேற்ப செய்து கொள்ளும் மாற்றங்கள். பணத்தால் எல்லாவற்றையும் மூடி விடலாம் என்ற நம்பிக்கைகள். வேதகாலம் தொட்டு வரும் நம்பிக்கைகளை வசதி கருதி Breach செய்வதுடன் நிறுத்தாமல் ஆயிரம் ரூபாயும் ஒரு ஆப்பிள் பழமும் அதற்கு எப்படிப் பரிகாரமாகும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது இதெல்லாம் கூட நெருஞ்சி முள் போல மனசில் நிற்கவே செய்கிறது.சக உயிர்களிடம் இந்த வாழ்வில், பூமியில் உள்ள போது அன்பு செலுத்துவதே அர்த்தம் உள்ள செயல். நம் தொடர்புகள் அனைத்தும் அந்த உயிர்க் கூட்டுடன்தான். உயிரும் கூடும் வேறு. சேர்ந்து இருக்கும் உயிரும் கூடும் மட்டுமே அன்பை உணர இயலும். கூட்டை விட்டு வெளியேறின உயிருக்கு யாரையும் தெரியாது. மறுபடி ஒரு கூடு புகுந்து அடுத்த பயணம். வேறு சக பயணிகள். கிளம்பி விட்டவர்கள் பற்றிய ஆர்பாட்டம், ஆரவாரம் ஏன் அக்கறை கூட Useless. இருக்கும் போது பேசப்படும் கடும் சொற்களுக்குப் பரிகாரம் இல்லை. காட்டப் படும் கடுமைக்கு ஆயிரம் ரூபாயும் ஆப்பிள் பழமும் உதவாது. அதே போல, மறைந்த பின் பண்ணும் Fuss க்கும் பொருள் இல்லை.ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருப்பது அவரவர் Choice. சடங்குகளை நம்புவது நம்பாதது அவரவர் விருப்பம்.

ஆனால்

ஆத்திகம் பேசும் அடியவர்க்கு சிவம் என்றால் அன்பு.

நாத்திகம் பேசும் நல்லவர்க்கு அன்பு என்றால் சிவம்

ஏனோ முரண்பாடுகள். ரசிக்கவில்லை.

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...