இன்று வைகுண்ட ஏகாதசி. வைஷ்ணவக் கோவில்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறப்பு. மிகவும் சிறப்பு பெற்ற நாள். முன்பெல்லாம் யாரோ சிலர், மிகவும் கற்ற அறிஞர்கள் , வயதில் மூத்தவர்கள், மடாதிபதிகள் இது போன்ற விசேஷ நாட்களின் சிறப்புகளை எடுத்துரைப்பார்கள். இப்போது யூ டியூபில் ஏராளமான தகவல்கள். தகவல் யுகம். வேகமான யுகம். நீர்க்குமிழி யுகம். வருவதும் போவதும் தெரிவதில்லை. அதனால் செய்திகள் ஆழமான பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. இதில் வாட்சப் வேறு. காட்டுத்தீ போல பரவும் நிகழ்வுகள். காட்டுத்தீ பார்த்தால் ஏற்படும் பயம்தான் எனக்கு வாட்சப்பின் Forwarded Messages பார்த்தால் வருகிறது. மனதைத் தொடாத பதிவுகள். நல்லனவும் வருகின்றனதான் . ஆனால் அவையும் பயம் பரப்பும் செய்திகளே.
சென்ற மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். கம்பீரமாக , பள்ளிகொண்டுள்ள அரங்கன் தரிசனம் வாய்த்தது. புறக்கண்ணால் ஒரு நிமிடம்தான் காணலாம். நிற்க விடுவதில்லை. அகக் கண்ணால் தரிசிக்கத் தடையே இல்லை. தடை இன்றி கிடைக்கும் ஒன்றை மதிக்க, ரசிக்க, அனுபவிக்க நம்மில் பெரும்பாலோர் ப்ரயத்தனப்படுவதில்லை. ஆம். தடை இன்றி கிடைக்கும் பொருள்களை, நினைவுகளை, அனுபவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். Supply குறைந்தால்தான் Demand கூடும். திருவரங்கம் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது. ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாருடன் ஐக்கியப்பட்ட ஸ்தலம். மார்கழியின் குளிர்ந்த காலைப் பொழுதில் அங்கங்கே ஒலிபெருக்கி மூலம் ஒலித்து காற்றில் கலந்து வரும் திருப்பாவை வரிகளை அசை போட்டபடி இந்தக் கட்டுரை மூலம் ஸ்ரீரங்கத்திற்கு பயணப் பட்டுக் கொண்டுள்ளேன். பயணச்சீட்டு இல்லாப் பயணம். நமக்கு எப்பவும் இலவசங்கள் பிடிக்கும். ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலையும் திருப்பாவை என்ற பாமாலையும் அரங்கனுக்கு சமமாக இருந்திருக்க வேண்டும். வேதங்கள் அனைத்திற்கும் வித்தாகும் என்ற வழக்கு உள்ளது.
ஸ்ரீரங்கம் என்றால் எனக்கு அரங்கன் மட்டும் இல்லை. என் அம்மாவின் ஊர். எங்கள் அம்மா தாத்தாவை ஸ்ரீரங்கத் தாத்தா என்றே அழைப்போம். ரங்கனை அறியும் முன் தாத்தாவையே அறிவேன். என் பத்து வயது வரையே அவர் இருந்தார் என்றாலும், அம்மா மூலம், அந்த வீடு, பாட்டி,தாத்தா, அவர்களுடைய வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை முறை எல்லாம் அறிவேன். ஸ்ரீரங்கத்தில் கால்பதித்த தருணம்,எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற பாரதியாரின் கவிதை வரிகள் மனதில் ஓடிற்று. நம் மூதாதையர் வாழ்ந்த ஊர் பற்றியது ரம்யமான உணர்வு. எனக்கு சொல்லத் தெரியாத ஒரு உணர்வும் கூடவே ஏற்படுகிறது. வேர்கள் அற்ற மரம் போன்ற பிம்பம் என்று குறிப்பிடட்டுமா? தெரியவில்லை. ஆழம் அற்று அகலமாகிக் கொண்டே போகும் ஒரு கற்பனை பிம்பம். தற்போதைய அவசர உலகம் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போன்ற பிம்பம். வேர்கள் பூமிக்குள் இருப்பதால் அதைப் பற்றி யோசிக்க ஏதும் இல்லை. மரம் கிளை பரப்புகிறது. பூத்துக் காய்க்கிறது. பார்க்க நன்றாக உள்ளது. ஆனால் விதை ஊன்றி வேர் பிடித்த மரம் தந்த பலன் அது. இன்னொரு மரம் வளர விதை வேண்டும். வேர் பிடிக்க வேண்டும். அபார தொழில் நுட்ப வளர்ச்சி. உலகையே உள்ளடக்கும் பரந்த வளர்ச்சி. ஆனால் வேர்களை நாம் அறிவதில்லை.
Feast or Famine என்ற கற்கால மனிதன் இருந்தான் என்று இன்று படித்தேன். கிடைத்தால் விருந்து. அல்லது பட்டினி. அடுத்த நாள் பற்றின பயம் இல்லை. அதில் சொல்லொணா நிம்மதி, சூட்சுமம் இருந்தது. இப்போது எல்லாம் தேவைக்கதிகமாக உள்ளது. அந்தந்த நொடியை வாழத் தேவையான தைரியத்தை பயம் இடமாற்றம் பண்ணி விட்டது. பெருகி விட்ட ஆயுள் பாதுகாப்பு நிறுவனங்கள் சாட்சி. எல்லாக் கல்யாணத்திற்கும் கட்டிப் போக ஆரஞ்சு கலர் பாவாடை இருந்தது. அதைத் தொட்டாலே நாதஸ்வர ஓசை கேட்டது. இப்போது பீரோ முன் நின்று கிளி, ஜோசியச் சீட்டு எடுப்பது போல் புடவையைக் கலைத்துப் போட்டு கழுதைக் கலர் புடவை ஒன்றை தேர்ந்தெடுத்து ட்ரெண்ட் என்று சுற்றிப் போகிறோம். அடுத்த தெருவில் உள்ள அத்தை வீட்டிற்கு கூகிள் மேப் வழி சொல்கிறது. இது,அந்த நாளும் வந்திடாதோ என்ற ஆத்தங்கம் இல்லை. அமுதத்தை அளவுக்கதிகமாகப் பருகும் போது அது நஞ்சாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு. ஸ்ரீரங்கத் தாத்தா, நம் பெற்றோர், நாம், நம் குழந்தைகள் , என்ற வரிசையில் எந்தத் தலைமுறை சரியான அளவில் அமுதம் பருகியது என்ற ஒப்பிடல். நீதிபதி போல் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை . ஏனென்றால் நேரடி வாக்குமூலம் இல்லை. ஆனால், அவரவர் குடும்பம் பற்றி, ஏன் உலக சரித்திரம் பற்றி எல்லாம் கூட அறிந்து கொள்ள கொஞ்சம் நேரம் செலவிடலாம். வேர்களை அறிவோம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS