சுழன்று கொண்டே இருக்கும் காலச்சக்கரம். அதில் நம் பயணமும் நிகழ்வுகளும் நமக்கு பிரம்மாண்டமானது. ஆச்சரியமானது. ஆனால் உண்மை அல்ல. ஒரு சிற்றெறும்பு நம் தோள் பட்டையில் இருந்து உள்ளங்கை வரை மேற்கொள்ளும் பயணத்தைக் காட்டிலும் பெரிதொன்றுமில்லை நம் வாழ்க்கைப் பயணமும். ஆனால் எறும்புக்கு அது தொலைதூரம். நமக்கோ அது ஒன்றரை அடி . எறும்பால் உணர முடியாததால் , தொலைவு அதிகம் என்று பொருளில்லை. நாம் நிரந்தரமாக்கும் என்று எண்ணம் கொள்வதால் காலச்சக்கரம் சுழற்சியை நிறுத்தப் போவதுமில்லை. சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு அதனுடன் சுழலும் நாம் , ஒரு நாள் கைவலித்து பிடி தளர்ந்து வீழ்கிறோம் . சிலரது உடும்புப்பிடி. சிலருக்கு சீக்கிரம் கைவலிக்கிறது. கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பல தலைமுறைகள் காண்கிறார்கள். ஆனால் "அந்தக் காலத்தில் " என்ற வரியை பாடகர் நிரவல் செய்வது போல் திருப்பித் திருப்பிப் பாடுகிறார்கள். இசை கச்சேரியில் நிரவல் Bore . சரியோ தவறோ ஒரே விஷயம்தான் வேறு உருவில் வருகிறது.அரைத்த மாவு இன்று இட்லி. இரண்டு நாள் சென்றால் தோசை. இட்லியாய் உண்ண முடியாத அளவு புளித்திருக்கும். மாற்றி செய்தால் புதுமை. அதே கதைதான் எல்லாவற்றிற்கும். எல்லாக் காலங்களிலும் அடிப்படை நிகழ்வுகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தக் கட்டத்தில் போஸ்ட் கொஞ்ச நேரம் வேறு திசைக்குத் திரும்புகிறது.
இந்தியாவின் இரண்டே கதைகள் ராமாயணமும் மஹாபாரதமும் . ராமாயண காலம் தொட்டு எதுவும் மாறவில்லை என்பதை இன்றைய சினிமா காட்டுகிறது. சீதாபிராட்டி கவரப்பட்டு அசோகவனத்தில் சிறைவைக்கப் படுகிறாள். அது வன்முறை. அந்தக்கால வன்முறை. இப்போதும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் படங்களில், மெகா தொடர்களில் காட்டப்படுகின்றன. எந்த சினிமாவில் வரும் எந்த கதாபாத்திரத்திற்கும் ஒப்பான ஒரு கதாபாத்திரத்தை இரண்டில் ஒரு இதிகாசத்திலேனும் காணலாம். குடும்பக் குழப்பங்களை மையப் புள்ளியாய்க் கொண்ட எல்லா சினிமாவும் மஹாபாரதமே . இப்போது வந்த செக்கச் சிவந்த வானம் வரை. சில நேரம் பேசாமல் ராமாயணம் மஹாபாரதத்தையே படித்துக் கொண்டிருக்கலாமே ,அதை வேறு வடிவில் பார்க்க படிக்க என்ன தேவை என்றுள்ளது. அங்குதான் தொழில்நுட்பம் உள்ளே வருகிறது. புத்தகங்கள் படிக்கும் போது நம் மனதில் ஒரு கதைக்களம் உருவாகும். ராமாயணம் கேட்க துவங்கிய காலம் தொட்டு என் மனதில் உள்ள அயோத்தி அரண்மனை கிழக்கே பார்த்தது. என் மனத்தில் உள்ள சீதாபிராட்டி பேரழகி. இன்றைய உலக அழகிகளின் அழகு பிராட்டியின் அழகிற்கு உறை போட காணாது. Most Handsome ஆண் ஸ்ரீராமன்தான். அயோத்தியின் மஹாராஜா தசரதர் முதல், பணிப்பெண்கள் வரை என்ன நிகழ்வுகளின் போது என்ன நிற உடை அணிந்திருந்தார்கள் என்று கூட அறிவேன்.
ஹநுமாரின் கண்களின் பக்தியும் , மற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கண்களும் காட்டின Bhavam ம் கூட மாறாது மனத்தகத்து ஒரு கோலம் வரைந்துள்ளது. ( ஒவ்வொன்றாக இன்னும் பல கூற வேண்டும். ராமாயணம் எல்லைகள் தாண்டின இதிகாசம். போஸ்ட்டெல்லாம் வேஸ்ட். அனுபவிக்கலாம். உங்கள் விருப்பப்படி அரண்மனை வேறு திசை நோக்கட்டும். கதாபாத்திரங்கள் வேறு நிற உடை அணியட்டுமே!). பீஷ்மர் சபதம் செய்த இடம், சூது நடந்த அரண்மனை , குருக்ஷேத்திரம் , பகவான் கீதை சொன்ன விதம், இதெல்லாமும் மனதில் கண்ட ,இன்னும் காணும் படங்கள்தான். தொழில்நுட்பம் என்றேன் அல்லவா? இப்போது எல்லாவற்றையும் visual ஆகக் காட்டுகிறார்கள். அது பற்றி எனக்கு கருத்துகள் இல்லை. ஆனால் அது கற்பனை செய்யும் சக்தியை வளர விடாதோ என்று தோன்றுகிறது. ஹாரிபாட்டர் புத்தகத்தின் எல்லா பகுதிகளும் திரைப்பட வடிவம் கொண்டுவிட்டது. திரைப்படத்தில் நாம் காணும் ஹாரிபாட்டர் இயக்குனரின் மனதில் இருப்பவன். அவன்தான் கதாசிரியர் பார்த்த நபரா தெரியாது. புத்தகங்கள் மட்டும்தான் படமாகிறதா என்றால் இல்லை. ஆனால் நினைவு மடிப்புகளில் உள்ள ஏதோதானே சினிமா?தொலைநோக்கி, எந்திரன் செய்யும் சங்கர் அவர்கள் போன்ற அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசம் இருக்க இயலாது. துரியோதனன் பழிவாங்க எண்ணம் கொண்டு அழிந்தான். ராவணன் பெண் மீது மோகம் கொண்டு அழிந்தான். எந்திரன் சிட்டியும் அதையே செய்கிறது. சனா மீது மோகம் கொண்டு பழி வாங்கும் எண்ணம் கொண்டு இறுதியில் dismantle பண்ணப்படுகிறது . நான் பழைய பஞ்சாங்கம். எந்திரனின் அடுத்த பகுதி 2.0 என்று திரை அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் அது தொலைக்காட்சி மூலம் வீட்டிற்கு வரும். அதுவும் தீபாவளி,பொங்கல் என்று நல்ல நாள் பார்த்து வரும். பார்க்க இயலாது. இந்தியத் தொலைக்காட்சிகளில் ஏழாம் முறையாக வரும் போது பார்த்து விட்டு, பின் ஒரு நாள் Blog ல் எழுதலாம். இந்தக்காலப் படைப்பாளிகள் தொழில்நுட்பத்தின் துணையுடன் பல செய்திகள் சொல்கிறார்கள்.
காலச்சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு ஓடும் நாம் அமைதியாகச் சுற்றுவோம். சில வாட்சப் பதிவுகள் பார்த்தேன். கைநாட்டாக இருந்து,பின் எழுத அறிந்து கொண்ட நாம் மறுபடி கைநாட்டாகி விட்டோமாம். Biometric impression வைப்பதைக் குறிப்பிடுகிறார்கள். அதனால் என்ன? எழுத அறியாமல் வைக்கும் கைநாட்டும் இதுவும் ஒன்றா? இல்லையே? சக்கரத்தின் பாதி சுழற்சியைத் தாண்டியவர்களுக்கு வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் மனநிலை வர வேண்டும். ஆட்டுரலில் அரைத்த மாவை கிரைண்டரில் அரைக்கிறார்கள். தோசை தட்டிற்கு வருவதுதான் முக்கியம். ரிசல்ட்தான் முக்கியம். மஹாபாரதக்கதை தளபதி படமாகிறது. துரியோதனனையும் கர்ணனையும் நினைத்துக் கொண்டு மம்முட்டியையும் ரஜினிகாந்த்தையும் பார்த்து விட்டுப் போவோமே. நம் சுழற்சி முடியும் தறுவாயில் சுழற்சியைத் தொடங்க உள்ளவர்கள் எப்படி நம் போல் சிந்திப்பார்கள்? சக்கரம் சுற்றி மறுமுறை அந்த இடம் வர வேண்டாமா? தானாக எல்லாம் நடக்கும். எல்லா அனுபவங்களையும் உணர வந்துள்ளோம். கண்டிப்பாக உணர்த்த அல்ல.
இவை இன்றைய நினைவுகள். பேசிய விஷயங்கள் கோர்வையாக, தொடர்பு படுத்தும்படி இருந்ததா தெரியவில்லை. இடைவெளி விட்டால் மறந்து போகிறது. ஆயிற்று,சக்கரத்துடன் ஒரு நாள் சுற்றி விட்டேன். இன்றைய அனுபவங்கள் நாளை போஸ்ட்டின் வித்துக்கள்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment