நாளை மகளிர் தினம். இந்த வாரம் சில பெண்களுடன் சற்றே அதிக நேரம் பேச நேர்ந்தது. அது தலைவலியில் முடிந்தது என்றால் மிகை இல்லை. திருமணத்திற்குப் பின் சுயம் தொலைத்து விட்டேன் என்று கூறும் பெண்கள் என் மனதை விட்டு லேசில் நகர்வதில்லை. எல்லாப் பெண்களும் அப்படியா அப்படித்தானா தெரிந்து கொள்ள இன்னும் பலருடன் பேச வேண்டும். அவர்கள் தம் சொந்தக் கதையைப் பகிர நான் சரியான ஆளா என்று முடிவு செய்ய வேண்டும். ஏன் எல்லாப் பெண்களும் பொசுக் என அழுது விடுகிறார்கள். ஒரு செடியை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட்டாலும் அது அதே செடியே. துளசி வாடாமல்லியாகி விடுவதில்லை. ஆனால் பெண் இடம் மட்டும் பெயர்வதில்லை. வேறு யாரோ ஆகிறாள்.திருமண பந்தம் புனிதமானது என்று வறட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டு வீட்டிற்குள் கோழை போல் நடப்பவர்களுக்கு எதற்குத் திருமணம். யாரை ஏமாற்ற இந்த வேஷம்.
நான் சந்தித்த முதல் நபர். சிரித்து நாற்பது வருடங்கள் ஆனது என்றாள். தன்னை வாயைக் கூடத் திறக்க விடாத கணவன் எப்போதும் தான் வைத்ததே சட்டம் எனும் கணவன். கடந்த காலத்தில் இருந்து வெளி வர இயலாத பழம் பெருமை பேசும் கணவன். இன்னும் பல. இந்தியாவில் திருமணங்கள் பெண்களைக் கட்டித்தான் போடுகின்றனவா, தெரியவில்லை. ஆண்களுமே சுதந்திரத்தை இழக்கத்தானே செய்கிறார்கள். சண்டைகள் இல்லாத வீடுகளே பார்க்க இயலவில்லை. ஏதோ கோளாறு. எங்கோ இடிக்கிறது. அனைவருடனும் இணக்கம்தானே இயல்பு. நம்முள் உள்ள எது போருக்குத் தயாராகிறது. அதை விலக்கினால் எல்லா இல்லங்களும் அமைதிப் பூங்காவாகி விடுமா.
இப்போது திருமணத்தைத் தள்ளிப் போடும் அல்லது மறுக்கும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. சுயத்தை இழக்கத் தயாரானால் மட்டுமே திருமணம் சாத்தியம் என்ற உண்மையை பகிரங்கமாக வெளியிட்டு எனக்குக் கட்டுகள் வேண்டாமே என்பவர்கள். அவர்கள் சார்பாக பேசினால் நான் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறேன். உலகம் மாற்றங்கள் சந்திப்பது இயல்பாய் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமே என்றே நினைக்கிறேன். பால்ய விவாகம் நடந்தது ஒரு காலம். கந்தர்வ விவாகம் ஒரு காலம். வர்ணக் கலப்பற்ற திருமணங்கள் நடந்தது ஒரு காலம். வர்ணக் கலப்புகள் இயல்பாகி விட்டது ஒரு காலம். திருமண பந்தம் இன்றி சேர்ந்து வாழ்வது கூட அதிர்ச்சியான செய்தி இல்லை என்பது ஒரு கலிகாலம். ஒன்றைத் தள்ளி மற்றொன்று அதன் இடத்தை ஆக்ரமிப்பது வாழ்வின் நியதிதான். யாரைத் திருமணம் பண்ணலாம் என்ற முடிவைக் குழந்தைகள் எடுக்கலாம் அந்த அளவு நல்லதும் கெட்டதும் அவர்களுக்குத் தெரியும் என்று நம்பும் நாம் கல்யாணம் தனக்கு சரி வருமா என்ற முடிவை மட்டும் அவர்களிடம் விடாமல் ஏன் பிடிவாதமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக இணக்கமாக வாழ முடியும் என நினைப்பவர்கள் பந்தப் படட்டும். சோதனை ஓட்டம் நடத்தி விட்டு இந்த வண்டி சரியாக ஓடவில்லை என்று தூக்கிப் போட இது வாகனமல்ல. வாழ்க்கை. இரு மனங்கள், சம்மந்தப்பட்டதால் சிறு பிழைகளும் வடுக்களாகும்.உலக வழக்கத்தில் இருந்து மாறுபடும் எல்லாம் சரியில்லை என்கிறோம். ஆனால் தவறும் இல்லை.