Wednesday, January 30, 2019

தர்மம் பற்றிய குழப்பங்கள்

எது தர்மம்? ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றா? அல்லது அது பொதுச் சொல்லா? தர்மம் என்று எல்லோருக்கும் பொதுவாக எதுவும் இல்லையோ என்று எண்ணுகிறேன். எனக்கு தர்மம் என்ற தலைப்பின் கீழ் வருவன சிலருக்கு தவறாகப் படுகிறது. அவர்கள் தருமம் என்னை ஆயாசப் படுத்துகிறது. மனமறிந்து தீங்கு செய்யாமை , குரல் உயர்த்தாமை, சோர்வடையாமை , பயமில்லாமை எல்லாம் எனக்கு தர்மம் என்ற தலைப்பில் வருகின்றன. உண்மையாய் மனதில் களங்கம் அற்று இருக்க வேண்டுமே தவிர அப்படிப் பட்ட இருப்பை மற்றவரை உணரச் செய்வது என் தர்மத்தில் இல்லை. தப்பைப் பார்த்துக் கொண்டு உரக்க வெளியிடத் தயங்குவது என் தர்மத்தில் இல்லை. நாடகத் தனம் என்னை சோர்வாக்கவே செய்கிறது. சண்டைக்குத் தயாராய் இருப்பவர் என்னை பயம் கொள்ளச் செய்கிறார்கள். சில நாட்களாக மனத்தராசு இரு பக்கமும் ஏறி ஏறி இறங்குகிறது. சமநிலைக்கு வர விழைகிறது.மேசை மேல் உள்ள ஒரு பொருளை எடுத்து வேறிடத்தில் வைப்பது போல மனத்தராசின் தட்டில் உட்கார்ந்துள்ள சில  கனமானவற்றை எடுத்து கண்காணாத இடத்தில் வைக்க விருப்பம். அது கஷ்டமா?  ஆம் என்றால் ஏன் கஷ்டம்?

இன்று பிப்ரவரி என்ற குழந்தை ஜனனம். பல வருஷங்கள் முன் அரவிந்த அன்னை என்ற தெய்வக்  குழந்தையின் ஜனனம் நிகழ்ந்த மாதம். மனம் பின்னோக்கி நகரும் விமானம் ஏறி பிரான்ஸ்  சென்றுள்ளது. இன்னும் திரும்பவில்லை. திரும்பியே தீரும். சஞ்சரித்துக் கொண்டே உள்ள பயணிதானே மனம்!!  முதல் பத்தியில் சொன்ன கனத்தை இறக்கி வைத்தால் மேலே ஏறுவது எளிது. மூட்டை சுமந்து ஏறுவது கஷ்டம். யார் அதை நம் மீது ஏற்றி வைப்பது? யாரோதானே? ஏற்றும் முன் மறுப்பது எளிது. தெரியாமல், கனம் அறியாமல் ஏற்றிக் கொண்டு விட்டாலும், இறக்குவதற்கு யார் அனுமதி வேண்டும்? எப்போ வேண்டுமோ இறக்கி விடலாம். எவ்வளவு துரிதமாக செய்கிறோமோ அவ்வளவு நல்லது.  செய்ய ஊக்கம் தேவை. அது இல்லாமல்தான், மனிதர்களையும், நிகழ்வுகளையும் சுமந்து திரிகிறோம். விமானத்திற்குள் பெரிய மூட்டைகளுக்கு அனுமதி இல்லை. கார்கோவில் போட்டால்தான் நாம் பயணப் படலாம். உயர்ந்த நிலைகள் அடைய, விட வேண்டிய பொருள்கள் உண்டு, அவை எதுவானாலும்.


என்னிடம் நான் கொண்ட சுய அன்பே பெரிய குறுக்கீடாய் உள்ளது. கழிவிரக்கம் . அதில் இருந்து மீண்டால் மட்டுமே விமோசனம் என உணர்கிறேன். நம் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது நம் மேல் நாமே கொள்ளும் அன்பு. நமக்கு நாமே தந்து கொள்ளும் முக்கியத்துவம். அதை சற்று விலக்கிப் பார்த்தால், நாடகத்தனமாக்காது  பார்த்தால் உண்மை தெரியும். எதற்கு நாடகம் ஆடுகிறோம், எல்லாவற்றையும் ஊதி? நாம் வாழ்வில் நடிக்காதிருந்தால், தானாக நாடகத் தனமான நிகழ்வுகள் நம் வாழ்வினின்று விடை பெறும். மற்றவரை விமர்சிக்க எந்த அளவு நாம் சுத்தமாக இருக்க வேண்டும்? ஏன் நான் சரி? இன்னொருவர் தப்பு? யார் அந்த இன்னொருவர்? என் போல அன்றி மாற்றி யோசிப்பவர்தானே? எல்லாம் நான். எனது. அங்கேதான் குழப்பம். எனதில்லாத ஒன்று என்னை பாதிப்பதில்லை. உண்மையில் எது என் சொந்தம்?  உடம்பு கூட சொந்தம் இல்லை எனும் போது ஏன் மனத்தராசின் முள் ஆடணும்? பார்க்கலாம். முயலலாம்.

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...