ஒரு ரூபாய்க்கு மதிப்பு எவ்வளவு? குழந்தைக்கு அது ஒரு சாக்லேட். அம்மா உணவகத்தில் இரண்டு இட்லி. பக்கத்து வீட்டு மாமிக்கு வெற்றிலை பாக்குடன் தரும் நாணயம். சிக்னல் சமீபம் கையேந்துபவருக்கு ஒரு நாள் கிடைக்கும் பணத்தில் எத்தனையிலோ ஒரு பங்கு. கிரிக்கெட் வீரர்களுக்கு டாஸ் போடப் பயன்படும் கருவி. கஞ்சனுக்கு கோவில் உண்டியலுக்கென ஒதுக்கப்பட்ட காசு. பள்ளி குழந்தைகளுக்கு சின்ன வட்டம் வரையப் பயன்படும் பொருள். கோவில் யானைக்கு ஆசீர்வாதம் செய்ய,வேடிக்கைக்காகத் தரும் காசு. ஆயிரம்,லட்சம், கோடிகளில் புரள்வோருக்கோ அது செல்லாக் காசு. ஆனால், என் குழந்தை ராகவனுக்கோ அது பெரிய பணம். அவனுக்கு ஆட்டிசம். அவன் உலகில் பணம் என்றால் ஒரு ரூபாய். எந்த நாணயம், ரூபாய் நோட்டு காட்டினாலும் ஒரு ரூபாய் என்று கூறி சிரிப்பான். எவ்வளவு நிம்மதி தெரியுமா? Life Insurance செய்து கொண்டு விட்டதால் மட்டும் எதிர்காலம் பாதுகாப்பாகி விட்டதாய் நினைப்பவர்களுக்கு ஒரு ரூபாயின் மதிப்பு தெரிவது கஷ்டம். ஒரு ரூபாய் என்ற எண்ணம் பெரியது. அதைக் கொண்டு நிம்மதி என்ற விலை மதிப்பற்ற ஒரு பொருளை வாங்கலாம்.
எது நிஜ Insurance ? நாம் செய்து விட்டோமா? இல்லை. இருபது வயது தாண்டும் முன் Insurance Policy எடுக்கலையா இன்னும் என்கிறோம். ஐம்பது வயது வரை மிகவும் மேலோட்டமானதொரு வாழ்வை வாழ்ந்து விடுகிறோம். உள்ளுக்குள் மைல் கணக்கில் கடக்க வேண்டிய தொலைவு உள்ள போது , வெளியே, இன்னும் வெளியே பயணப்பட்டுக் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாள் போகட்டும், நாளை, அதற்கு மறுநாள், இதோ அடுத்த வாரம், இதோ அடுத்த மாதம் முதல் எல்லாம் சரி செய்து விடலாம் என்ற தப்பு கணக்கில் நாட்கள் நகர்கின்றன. திரும்பும் முன் முதுமை வாயிலில் வந்து காத்து நிற்கிறது. சூப்பர் மார்க்கெட்டில், ஒரு குட்டிப் பையன், " பாட்டி, கொஞ்சம் வழி விடறீங்களா? " என்று கேட்கும் குரல், ஆட்டோக்காரர், " தாத்தா, நீங்க வயசானவங்க. உங்க கிட்ட ஜாஸ்தி கேட்பேனா?" என்று கேட்கும் குரல் கோபம் உண்டாக்கினால், எதுவும் பண்ணாமல் காலம் கடந்து கொண்டுள்ளது என்று பொருள். வாழ்வாங்கு வாழ்வோருக்கு வயது ஒரு எண். அவ்வளவே.
வாழ்வு என்பது தொடர்பு கொள்ளுதல் என்ற வாசகம் திரு பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் படித்தேன். தொடர்பு என்ற சொல் ஆழம் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகுடன் உள்ள உறவின் பெயர் தொடர்பு. அது தாமரை இலைக்கும் தண்ணீருக்கும் உள்ளது போல, ஒரு ரூபாய் நோக்கு போல பிணைத்தும் பிணைக்காமலும் இருப்பின் சிறப்பு. நம்முடைய குறுகிய Intelligence ஐ வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டு யார் கையிலோ உள்ள கயிறில் அவர்கள் இட்ட முடிச்சை நான் அவிழ்க்கிறேன் என்று எண்ணம் கொண்டு, ஒவ்வொரு நாள் மனதில் புதுப் புது பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு,ஏற்றிக் கொண்டு , அந்தக் குறிப்பிட்ட நாளில் நடக்கும் ஒரு நிகழ்வை கண் அருகே வைத்துப் பார்த்துக் கொண்டு, அதாவது மற்ற எதையும் கண்ணால் பார்க்கவே முடியாதபடி ஒரு பக்கக் காக்கா பார்வை பார்த்துக் கொண்டு, அடடே நிமிஷமாய் ஜனவரியும் பிப்ரவரியும் கடந்து விட்டதே, இப்போதுதான் வருஷம் பிறந்தார் போல இருந்தது என்று புலம்பி விட்டு எஞ்சிய பத்து மாதங்களையும் அப்படியே கழித்தால், நிஜ insurance செய்யும் காலங்களை மெத்தனமாகக் கடக்கிறோம் என்றே பொருள்.
எல்லாம் ஒரு ரூபாய் எண்ணம் எவ்வாறு உதவும்? பிங்க் கலர் 2000 ரூபாய், பச்சை நிற 500 ரூபாய், ஆரஞ்சு கலர் 200 ரூபாய் ஆகிய எதைக் கொண்டும் பொருள் வாங்கலாம். வெவ்வேறு பொருள். பொருள் வாங்குவது தவிர ரூபாயின் பயன் என்ன? இறுதிப் பலன் என்ன என்று யோசித்தால் எல்லாம் ஒரு ரூபாய். ஒரே ரூபாய். அதே போல், வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே பலன்தான். நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது. தினப்படி நிகழ்வுகளின் முக்கியத்துவம் அவ்வளவே. சந்தோஷத்தையும் வருத்தங்களையும் வெளியிடாமல் இருப்பதல்ல பொருள். கையாள்வதில் தேவைப்படும் நிதானம். அது Insurance தான். அடுத்த நிமிட ஆச்சரியங்கள் தெரியாத வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. Life Insurance ம் Medical Insurance ம் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் செய்து கொள்வது. ஆனால் ஒரு ரூபாய் Insurance நல்லது நடக்கும் என்ற உறுதியில் செய்து கொள்வது. உறுதியான அஸ்திவாரத்தின் மேல் கட்டிடம் எழும்புவதே சரி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment