சாந்தி. சாந்தி என்றால் அமைதி. இந்த போஸ்ட் அமைதி பற்றியது அல்ல. அமைதியை தன்னுடையதாக்கிக் கொண்ட ஒரு பெண் பற்றியது. சாந்தி என் பள்ளித் தோழி. என் எழுதும் ஆசைக்கு அவள் ஒரு முக்கியக் காரணம் என்பேன். பள்ளிக்கு என்றாவது லீவ் போடும் போதெல்லாம் மாலை குறைந்தது ஒரு ஐந்து பக்கக் கடிதம் யார் மூலமாவது எனக்கு வரும். அவளுடன் தொடர்பில் இருந்த பள்ளி நாட்களில் நான் லீவ் போட்டு, சாந்தி எனக்குக் கடிதம் அனுப்பாத நாள் ஒன்று கூட இருந்ததில்லை. பள்ளியின் ஒவ்வொரு பிரிவு வேளையிலும் நடந்த அனைத்து சம்பவங்களும், என் absence ஐ அவள் உணர்ந்ததும் அழகு தமிழில் விவரிக்கப் பட்டிருக்கும். அந்தக் கடிதங்கள் படிக்கவே லீவ் போடலாம் என்று தோன்றும். ஆனால் நான் செய்த தப்பு என்னவென்றால் அதை செய்ய வேண்டிய அளவு recognize செய்யாதது. வேண்டுமென்று நான் அப்படி இருக்கவில்லை. எனக்குத் தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை. சாந்தியின் தொடர்பு விட்டுப் போன பின்தான் நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று உணர்ந்தேன். என் புற வெளிப்பாடுகள் மைனஸ் ஆக இருப்பினும் அவளால் எப்படி ஒரு முறை கூட என்னிடம் வேறு முகம் காட்ட முடியவில்லை என்பது பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக் கூட்டம் போன்றதொரு அதிசயமே. புறம் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என் அகத்தில் அவள் மேல் ஒரு அதீத அன்பு இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இவ்வளவு ஆண்டுகள் சென்ற பின் திருச்சி சென்ற போது அவளைத் தேடத் தோன்றி இருக்காது. கண்டு பிடித்த பின் போஸ்ட் எழுத தோன்றி இருக்காது.
ஆனால் சமையல், வீட்டு வேலைகள் என்றே பெரும் பொழுதை செலவிடும் பெண்ணான எனக்கு போஸ்ட் எழுத உட்கார்ந்தே ஆகணும் என்பதற்கு ஒரு வலுவான நிகழ்வு தேவை. ஆம். உள்ளது. சென்ற வாரம் அவளிடம் இருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. அவள் கணவருக்கு திடீரென பைபாஸ் ஆப்பரேஷன் ஆகி மருத்துவமனையில் உள்ளதாக. மனதில் பிரார்த்தனைகளுடன் தொலை பேசினேன். வழக்கமான அமைதியுடன் அவள் குரல் கேட்டது. தொடங்கும் போதே, "நல்லாருக்காருப்பா" என்றாள் . Iron women என்று பலர் பற்றி படிக்கிறோம். கேட்கிறோம். எப்போதாவதுதான் தொடர்பில் வருகிறோம். Full of Positive Energy . அதுதான் சாந்தி. "அவரை ஆப்பரேஷன் தியேட்டர் அனுப்பி விட்டு வங்கிக்கு வந்து விட்டேன். எல்லாம் நன்றாக நடக்கும். வார்டில் கொண்டுவிடும் முன் திரும்பி விட்டேன். அன்று நான் cash பார்க்க வேண்டும். எல்லோரும்,' இன்று உன் மனசு சரியாக உள்ளதா, கேஷ் handle செய்ய இயலுமா' என்று உதவ வந்தார்கள். நானே பார்த்துக் கொள்கிறேன்,அது வேறு இது வேறு. நான் உடலும் மனமும் நன்றாக இருக்கிறேன் " என்று கூறி விட்டேன் என்று வெகு இயல்பாக, "இன்று வெண்டைக்காய் பொரியல் செய்தேன் " என்பது போல் இயல்பாகக் கூறினாள்.மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிதென்கிறார் வள்ளுவர். அன்றே சொன்னேன்." சாந்தி, நீ போஸ்டில் எழுதப் பட வேண்டிய பெண் "என்று. இன்றுதான் நேரம் கிடைத்தது.
சில சமயம், பலர் பற்றியும், பல நேரம் சிலர் பற்றியும் விமர்சனங்கள் செய்கிறோம். என் இடத்தில் இருந்தால் தெரியும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற வழக்குகள் உண்டு. மலைகள் எங்கிருந்தாலும் அசைவதில்லை. பிரச்சினைகள் இல்லாத வாழ்வும் இல்லை.சாந்தி சொன்ன இன்னொன்று. "என்ன, எல்லாம் அனுபவித்தாயிற்று. இனி ஒவ்வொரு நாளையும் அமைந்தவாறு நடத்தாமல் ஏன் கவலைப் பட்டு காலத்தை ஓட்ட வேண்டும்? ". மிகவும் சரி. ஐம்பது + வயதில் அவள் மனதில் தங்கின அமைதி ரசிக்க வேண்டிய ஒன்று. சாந்தியுடையது காரணப் பெயரோ? வாழ்க வளமுடன் சாந்தி.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment