கச்சேரிக்குப் பின் பாடப்படும் துக்கடாக்கள் போல் சில மாதங்கள் வரிசையாக நிகழ்வுகள். ஒவ்வொன்றும் வேறு வேறு பிரிவைச் சேர்ந்தவை. தனித்தனி போஸ்ட்டாக வலிமை அற்ற நிகழ்வுகள். அதனால் எல்லாம் ஒரு போஸ்டில் அடங்கப் போகின்றன. தலைப்பு சரிதானே? துக்கடாக்களுக்கு இலக்கணப் படி வரிசை, அதாவது ஆர்டர் இல்லை. அது போல இந்த போஸ்டின் contents க்கு இலக்கணம் இல்லை. குரங்கு மாதிரி தாவ , என் மனக்குரங்கின் வேகத்திற்குத் தாவ என் எழுத்துக்கும் உரிமை உண்டு. மாதத்தின் முதல் பாதி பொங்கல் கொண்டாட்டங்கள். அதற்கான திட்டமிடல். திட்டமிடல் என்பது முக்கியமாக சாப்பாடுதான். சாமிக்கு நைவேத்தியம் என்று சொல்லி, வயிறும் குடலும் என்னை விட்டு விடேன் என்று கெஞ்சும் அளவு உணவு. எனக்கு சென்ற தலைமுறையினரின் பல செயல்களுக்கு விளக்கம் தேவையாய் உள்ளது. இப்போது நல்ல நினைவுகளுடன் உள்ள பெரியவர்கள் தரும் விளக்கங்கள் எதுவும் உடன்பாடாயில்லை. அட, பூஜை புனஸ்காரம் அதெல்லாம் பற்றி சொல்வதாவது தேவலை. போகிக்கு போளி , பொங்கலுக்கு வடை, காணும் பொங்கலுக்கு கலந்த சாதம் இதற்கெல்லாம் என்ன விளக்கம்? இந்த வருடம் அரசாங்கம் வழங்கும் 1000 ரூபாய்க்கு ஆலாய்ப் பறந்து அலை மோதி , அந்த 1000 ரூபாய்க்கு பொங்கல் தவிர 1008 செலவு காத்திருக்கும் ஏழை மக்களைக் கேட்டால் தெரியும். அவர்களிடம் இருந்து சூரிய பகவான் தன்னை மறைத்துக் கொண்டு விட்டாரோ, வடையும் பொங்கலும் படைக்காததற்கு?
முதல் பாதி இவ்வாறான எண்ண ஓட்டம் என்றால் இரண்டாம் பாதி உடல்நலக் குறைவுகளும் பெரிய மருத்துவ மனைகளும், நெருங்கியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பின் அமைதி காத்து கடவுளிடம் மட்டும் பேச்சுவார்த்தை நிகழ்த்துவதும் பற்றியது. பயம்தான் சார்பை ஏற்படுத்தும் சக்தி. எதைக் கண்டு பயம் கொள்கிறோமோ அது நம்மை அடிமையாக்குகிறது. தன்பயம் நம் அனைவருக்கும் இருக்கும்,சில விதிவிலக்குகள் நீங்கலாக. அந்த தன்பயம் ஒரு எல்லையைக் கடக்கும் போது உடல் தன் இயற்கையான குணப்படுத்திக் கொள்ளும் சக்தியை அதாவது ஹீலிங் பவரை இழக்கிறது. பயம் என்ற சாத்தான் இனி பார்த்துக் கொள்ளும், நாம் சற்று ஓய்வெடுப்போம் என்று இயற்கை கம் மென்று இருந்து விடுகிறது. அதுதான் பெரியமருத்துவமனைகளுக்கு வசதியான வியாபாரம் . எனக்கு உயிர் காக்கும் மருத்துவத் தொழில் மீதும் மருத்துவர்கள் மீதும் அபார மரியாதை உண்டு. நவீன மருத்துவத்தில்,போய்க் கொண்டிருக்கிற உயிரை சத்யவான் சாவித்ரி போல மீட்டு வரும் மருத்துவர்களுக்கு வணக்கம். ஆனால்,உண்மை மருத்துவர்கள் அருகி, மருத்துவ வியாபாரம் பெருகி விட்டதையே இன்றைய நிலையில் காண முடிகிறது. உணர முடிகிறது. கண்டிஷன் ஸ்டேபிள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசத்தை நீட்டிக் கொண்டே போகும் போது ஸ்டேபிள் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை அகராதியில் தேடணுமோ என்று நினைக்கிறேன். மருத்துவமனையில் உள்ளது என் மாமனார் என்பதால் என்னால் இதற்கு மேல் அழுத்தமாய் எழுத இயலவில்லை. Authentic ஆக சொல்ல அத்தாட்சியும் இல்லை. ஏனென்றால் பயத்தால் வழி நடத்தப் பட்டுக் கொண்டுள்ளோம். பெரிய மருத்துவமனைகள் சரியானவையா என யோசிக்க நம் பயங்கள் இடம் தராது.
அடுத்த துக்கடா உணர்வு சம்பந்தமானது. ஒரு இக்கட்டான நேரம் அல்லது நிகழ்வு நம் உணர்வுகளைக் கட்டவிழ்த்து விட தரப்பட்ட லைசென்ஸ் அல்ல. நிச்சயமாக அல்ல. நம் உண்மையான பலங்களை நமக்கே உணர்த்த வரும் இறைவன் வரம். அப்படித்தான் அணுக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர் மேல் கொள்ளும் கோபமோ, நம் பரபரப்போ, வருத்தமோ, நம் ஊகங்களோ ஒருவரை குணப்படுத்தும் என்றால் அதெல்லாவற்றையுமே செய்யலாமே? நமக்கு உற்ற ஒருவர் துன்ப பட்டுக் கொண்டுள்ள போது மற்ற எண்ண ஓட்டங்கள் அடங்கி அல்லவோ போகும்? விலங்கினங்களில் கூடக் காணப்படும் சில உணர்வுகள் நம்மிடம் இல்லை எனவும் உணர்கிறேன். தன் இனம் சேர்ந்த ஜீவன் ஒன்று Distress ல் இருப்பின்,அந்த இனம் சேர்ந்த மற்ற விலங்குகள்,பறவைகள் அதனை விட்டு நகர்வதில்லை. ஆனால் மனிதனுக்கு தன் சுகமே ப்ரதானம். மனம் குறுக்கிடுவதால் மனிதன் குழப்பவாதிதான். ஒரு காக்கை, இன்னொரு காக்கை தன் தர்மத்தை செய்கிறதா , என்று கவலை கொள்வதில்லை. கமெண்ட் அடிப்பதில்லை. ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை. எது ஸ்வதர்மம் என்று நமக்கு எதுவும் தெரியாது. நாமே வகுத்துக் கொண்ட ஒன்றை சரி என்று கருதி பிறர் செயல்களுக்கு நீதி தேவன் போல் செயல்படுகிறோம். தமாஷாக இல்லை? விலங்கினங்களின் தர்மம் பொது தர்மம். தன் இனம் சேர்ந்த ஒரு ஜீவன் துன்பத்தை அது தன் துன்பமாகப் பார்க்கிறது. மனிதன் அப்படி இல்லை. என்னைச் சார்ந்த ஒருவரின் உடல்நிலை உன்னைத் தொடுமா என்ற சந்தேகம். சந்தேகம் கொள்வோரை சந்தேகப்பிராணி என்கிறோம். உண்மையில் பிராணிக்கு சந்தேகம் கிடையாது. சரியான மனிதன் மனிதம் நிறைந்தவன் அல்லவோ? உயிர்களில் அவனால் வித்யாசம் காண இயலாது. உண்மையான உள்ளங்களைப் புரிந்து கொள்ள உண்மையாய் இருக்க வேண்டும். இயல்பாய், சாதாரணமாய் இருக்கும் போது வாக்கு தடிக்காது . அமைதி மாறாது. தவறுகள் நேர்ந்தால் அவற்றில் தன் பங்கு என்ன எனப் பார்க்கத் தோன்றுமே அன்றி மற்றவரைப் பற்றி எதுவும் தவறாகக் கூற, ஏன் எண்ணக் கூடத் தோன்றாது.
நிறைய துக்கடாக்கள் ஆயிற்று. இன்று கச்சேரி நிறைவு பெற்றது. கடவுள் அருள் துணை நின்றால் வேறு தலைப்பில் புதுக் கச்சேரி செய்யலாம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment