Monday, January 24, 2022

அஞ்சலி

 இன்று என் மாமனாரும் மாமியாரும் வாழ்ந்த வீட்டிற்கு ஒரு மாத்த்திற்கப்புறம் சென்று வந்தேன். வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யத்திற்கு சென்று வந்தது போல உணர்ந்தேன். போர் முடிந்த பின் உள்ள இடிபாடுகள் போல அங்கங்கே தூசு.அமைதி. நேற்று வரை உச்சகட்ட Activity நடந்த இடம் என்று கூட இருந்து பார்த்திருந்தாலொழிய நம்ப சிரமம். ஆமாம். வாழ்க்கை போர்தான். ஒரு ஆசிரமத்தில் அமைதி காப்பது கடினமில்லை. அமர்க்களத்தில் அமைதி காப்பது. வாழ்வு அப்படித்தான். இன்று ஒரு மாதம் ஆகிறது. மனதில் அலை மோதும் எண்ணங்கள். கோவிட் காரணமாய் மறைந்ததால் எந்த சப்தமும் இல்லாத சடங்குகள். எல்லோரும் வருந்தினார்கள். அவர் பாவம் என்றார்கள். அது சரியா தெரியவில்லை. சடங்குகளுக்கும் அனாவசிய ஆராய்ச்சிகளுக்கும் செலவிடும் சக்தியின் ஒரு பாகம் கூட அவர் இருந்த போது அவரைப் புரிந்து கொள்ள சகித்துக் கொள்ள செலவு பண்ணாத யாரும் ஏன் வளவள எனப் பேச வேண்டும். பேசுவது பொருள் அற்றதாய் உணர்கிறேன். சாப்பாடு சடங்குகள் என்ற திட்டமிடல் ஆயாசமாக உள்ளது.வாழ்வில் வைக்கும் பற்று வேறு. வாழ்வை நடத்தத் தேவையான உற்சாகம் வேறு. தாமரை இலையும் தண்ணீரும் உறவாடிக் கொண்டேதான் உள்ளன. வெளியே தெரிய அவசியம் இல்லை. உள்ளே எல்லாவற்றையும் விட்டு விடலாம் போல உள்ளது.

சரியாக ஆறு மாதமாக எழுதவில்லை. காலம் காலில் சக்கரம் கட்டிக் கொண்டாற் போல ஓடித்தான் போனது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. சமீபத்தில் இயந்திரமான மனிதனையும் மனிதன் போலவே இயங்கும் இயந்திரத்தையும் பற்றிப் படித்தேன். ரசித்தேன். ப்ரோக்ராம் பண்ணியது போல இயங்கும் நாம். நிதானப்பட நேரமற்று நம்மைக் கேட்காமலே அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கும் நம் வாழ்வு. மறைந்தவர்கள் நினைவு கூரப் படுகிறார்களா. எந்த அளவு. அவர்கள் பற்றி நாம் அறிந்ததை எல்லாம் கூடிப் பேசுவதுதான் அஞ்சலியா. பேச்சு உள்ளத்தின் மொழியா உதட்டின் மொழியா. உள்ளத்தின் மொழி என்றால் அது மௌனமே அன்றோ. உதட்டின் மொழி எனில் அதற்குத் தேவைதான் என்ன. நாமும் இதே போல ஒரு நாள் யார் உதட்டில் இருந்தோ வரும் வார்த்தைகளில் மட்டுமே வசிப்போம் எனில் என்ன ஆர்பாட்டம் வேண்டிக் கிடக்கு. எதற்கு மூச்சுத் திணறும் அளவு நெருக்கம், யாரோடுமே. நாம் நினைவு கூரப் படுவதால் ஒரு சந்தோஷம் வரும் என்றாலும் அதை நாமா உணரப் போகிறோம். வாழ்க்கையில் யாரை Impress பண்ண வேண்டும். எதற்கு ப்ரயத்தனப் பட வேண்டும்.இயல்பாக நம் வேலையைப் பார்த்தால் போதுமல்லவா. ஏதோ நினைவுகள்….எதுவும் நிற்பதில்லை. யாருக்காகவும் நிற்பதில்லை. நமக்குத் தெரியும். ஆனாலும் விரும்பி கட்டுண்டு கிடக்கிறோம். கட்டுக்கள் தளரட்டும். கண்ணன் அருள் நம்மைச் சூழட்டும். 

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...