Friday, July 12, 2019

உள்ளும் உடம்பும்

அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தோம்,நேற்று இந்த நேரம். அமைதி. உள்ளும் புறமும். அலைகடல் ஓரம் ஆசிரமம். கடலின் உள்ளே ஆழம். கடலின் மேற்பரப்பு அதற்கு சம்பந்தமே இல்லாத ஓயாத Activity . ஒரு நிமிடம் இந்த அலைகள் சும்மா இருக்கா பாருங்கள். அடியில் எப்படி இருப்பாய் என்றால் அதை விவரிக்க அலைகளால் இயலாது. அது போன்று ஆழ்மன எண்ணங்களுக்கு வடிவம் தருவதும் சிரமமே. அதனால்,பயண அனுபவங்கள் பற்றிய விவரங்கள் நோக்கி போஸ்ட் நகர்கிறது.

பயணம் படிப்பினை என்கிறோம். உள்ளிற்கா உடம்பிற்கா? உடம்பு அடையும் அனுபவங்களையே உலகம் படிப்பினை என்கிறது. அந்தப் படிப்பின் பலன் உடல் அழியும் போது முடிந்து விடுகிறது. உடம்பால் வள்ளுவன் சொன்னாற் போல் கசடற கற்க இயலுவதில்லை. மனத்தால் அது சாத்தியம். கற்றது மனதில் நிற்கும். அதன்படி நிற்றலும் நிகழும். பயண அனுபவங்களை அனுபவித்து பாராட்டி சொன்னவர்கள் உள்பயணத்திற்கு புறப்பயணம் ஒரு பாடம் என்று சொல்லி இருப்பின் அது உண்மையே. இல்லை என்றால் அது பொய் . அது ஒரு தற்காலிக குதூகலம் அன்றி வேறெதுவும் இல்லை. நேரம்,வயிறு, எல்லாவற்றின் மேலும் செய்யும் Attack . பணம் மீதும்  என்று சொன்னால் அடி வாங்குவேன். என்னை கருமி என்று நினைப்பீர்கள். 

குளிர் பிரதேசத்தில் பயணிக்க கம்பளி வேண்டும், வெப்பமான இடம் என்றால், காட்டன் உடை வேண்டும், பஸ் இல்லாத இடத்திற்கு காரில் போக வேண்டும் , முன்னாடியே பயணச்சீட்டு வாங்க வேண்டும் , இங்கு இந்த உணவு கிடைக்கும் அல்லது கிடைக்காது போன்ற superficial விஷயங்கள் தெரிந்து பெரிய பலன் என்ன, தெரியவில்லை. மறுபடி அந்த இடங்கள் சென்றால் கஷ்டம்  அதிகம் இருக்காது. திட்டமிடல் சுலபம். அவ்வளவுதான். வேறு யாரோ கேட்கும் போது , அந்த லாட்ஜ் போகாதே, ஏசி வேலையே செய்யாது என்று நம் ஒரு நாள் அனுபவத்தை  நிஜம் போன்ற தொனியில் கூறி நாம் தங்க இடம் தந்தவருக்கு ஒரு கஸ்டமர் கிடைக்காது செய்யும் நல்ல காரியம் செய்வோம்.

உள்ளும் மனமும் அடையும் அனுபவம்,பாடம் வேறானது. ஆனால்,அதற்கு உடல் பயணப்பட வேண்டுமா என்பதே கேள்வி. தேவை இல்லை என்பது கருத்து. ஒரே இடத்தில் இருந்து கொண்டு நீண்ட தொலைவு பயணிக்கலாம்.சுகமாக. கண்மூடி. ரோடில் அது முடியாது. "ஏ பெரிசு,சொல்லிட்டு வந்திட்டியா" என்பார்கள். உடம்பின் வேகத்தை விட உள்ளின் வேகம் அதிகம். பயண முன்பதிவு வேண்டாம். மாறி மாறி சாப்பிட வேண்டாம். உள்ளிற்கு உடை,Presentable ஆன உடை தேட வேண்டாம். ஏறி,இறங்கி, முட்டிக்கு தைலம் தேட வேண்டாம். ரெண்டு நாள் தங்கின ரூமை விட்டுக் கிளம்பும் நேரம், மனதில் ஒரு Pang உடன் திரும்பிப் பார்க்க வேண்டாம். மறுபடி எப்போ பயணம் என்ற எதிர்பார்ப்புகள் வேண்டாம். ஆனால் பயணம் சந்தோஷமே. சின்ன சந்தோஷமே. சின்ன ஆசைகளின் கூட்டமே உடல்  வாழ்க்கை. படிப்பினை என்ற கதைகள் சொல்லாமல், அது என் சின்ன ஆசை. பயணிக்கிறேன் எனலாம். மற்றபடி, புறப்பயணம் தவிர்த்து அல்லது குறைத்து பரமசிவன் கழுத்து பாம்பு போல் ஓரிடம் இருக்க இயன்றால் அது சௌக்கியமே. பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER LEADS

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...