செவ்வாய்கிரகத்தில் இருந்து தப்பிய ஒரு ஜந்து பூமிக் கோளத்தில் நுழைந்தால் அதனால் அனுசரித்து வாழ இயலுமா? இயலாது. தொழில் நுட்பத்தின் பூதாகரமான வளர்ச்சியில் சிக்கிக் கொண்ட, இந்த பூமி கோளத்தில் வந்து மாட்டிய ஒரு வேற்று கிரஹ ஜந்துவே நான். அதுவும் வழி அறியாது அல்ல, வழி அறிந்தும் சிக்கிக் கொண்ட முட்டாள். தெரிந்து செய்தாலும், அறியாமையினால் செய்தாலும் தப்பு தப்புதான். நெருப்பு தெரிந்து தொட்டாலும் சுடும். தெரியாமல் தொட்டாலும் சுடும். விஷமென அறிந்து குடித்தாலும், அறியாமல் குடித்தாலும் முடிவு ஒன்றே. விளையாடவில்லை. நிஜம். விளையாட்டு சீரியஸான விஷயம் தெரியுமா? கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதி நிமிஷங்கள் சொல்லும்,விளையாட்டு ஒன்றும் விளையாட்டல்ல. நியூசிலாந்த் கேப்டன் கேன் வில்லியம்சன் , உலகக் கோப்பையைத் தவற விட்டபின் காட்டிய அமைதி. வாழ்க்கையில், தவிர்க்க இயலாதவை உண்டு, அதற்கு எதுவும் செய்ய இயலாது என்ற புரிதல். நம்மில் எவ்வளவு பேருக்கு உள்ளது? விளையாட்டு அவர்கள் தொழில். ஆனால் அவர்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ள இயலுமா,என்ன!!!
வாட்சப்பிற்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமே. நாலு வருஷத்தில் ரெண்டு முறை தூக்கிப் போட்டு விட்டு மறுபடி பதிவிறக்கம் பண்ணினேன். பாதிக்கு மேல் அவசியமற்ற குறும் செய்திகள். அதாவது தேவலை. பார்ப்பதும் பார்க்காது இருப்பதும் அவரவர் தேர்வு. குறும் செய்திகள், Forwards அனுப்புபவர்கள் என் டார்கெட் இல்லை. அவர்களுக்கு நேரம் அதிகம் உள்ளது அல்லது நேரத்தை சரியாக உபயோகிக்கத் தெரிகிறது என்று சொல்லலாம். அல்லது நேரத்தை வீணடிக்கும் பேர்வழிகள் என, குற்றம் கண்டுபிடிக்கும் தொனியில் கூறலாம். ஏதோ தொடர்பு தேவைப் படுகிறது. கைபேசியுடன் அலைகிறார்கள். ஆனால் தொடர்புக்கு கண்டிப்பாக சார்ந்திருக்க வேண்டிய விஷயமாக வாட்சப் வளர்ந்து வருவதே சிக்கல். தொடர்புக்கு நேரில் பார்க்கலாம். தொலைபேசியில் அழைக்கலாம். கடிதம் எழுதலாம். ஒழுங்கான வார்த்தைப் பரிமாற்றங்கள் நிகழும். அதிலேயே சிக்கல் யாதெனில், நாம் பெரும்பாலும் வெளிப்படுத்த விரும்புவதைத் தெரிவிக்கப் பேசுவதில்லை. மனதும் வார்த்தையும் நேர் கோட்டில் இருப்பதில்லை. எனக்கு அத்தகைய பரிமாற்றங்கள் பிடிக்கவில்லை. ரொம்ப யோசனை செய்யாமல், வார்த்தை தேடாமல், நேரம் பார்க்காமல், வார்த்தை தடிக்காமல் "இந்த நொடி உன்னுடன் பேசப் பிடிக்கிறது, பேசறேன் அவ்வளவே ", என்று யார் கூடப் பேச முடியுமோ, பேசினால் போதுமே?
வாட்சப் அத்தனை குறுக்கு வழி யோசனைகளையும் அதிகமாக்கும் ஒரு சாபக்கேடு. ரூம் போட்டு யோசித்து மனவக்கிரம் வெளிப்படாத செய்தி அனுப்பலாம். அதில் என்ன நேர்மை இருக்கும்? வார்த்தை தேடித் தேடி செய்தி அனுப்பலாம். அதில் நேர்மை எங்கே இருக்கும்? நாள் முழுதும் அதில் மூழ்கி அதை மற்றவர் அறியா வண்ணம் செய்ய பல வழிகள் உண்டு. இதெல்லாம் தேவையா? இது பற்றி எழுதுவதே நேரவிரயம். இப்போ எனக்கு ஏன் திடீர் கோபம் அல்லது ஞானோதயம் என்று என் வாட்சப் தொடர்புகள் கேட்கிறார்கள். சரியான கேள்விதான். ஞானம் எப்பவோ ஏற்பட்டது. ஆனால் நான் புத்தராக இல்லாததால், ஞானப்பாதை எனக்கு மூடிக்கொண்டது. கோபம்? உண்டு. எப்படி என சொல்கிறேன். நான் தொலைபேசுபவர் எண்ணிக்கை குறைவு. ஆனால் அப்படிப் பேசுவோரிடம் எந்தவித மனத்தடைகளும் அற்ற, கணக்குப் பார்க்காத எளிய தொடர்பு என்னுடையது. அதைக் காணாமல் செய்தது வாட்ஸப்தான். நேர்பேச்சு மனச்சுருக்கங்களுக்கு இஸ்திரி போடும். இந்தக் குறும் செய்திகள், Indifference, Ego,sarcasm, Imagined Superiority, போன்ற மறைக்க வேண்டிய உணர்வுகளை--இந்த உணர்வுகள் இல்லாமல் இருப்பது உத்தமம். அப்படி இருந்தால் , அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். யார் மீதும் குற்றம் இல்லை. நான் அனுப்பும் வாட்சப் குறும்செய்திகள் மற்றவருக்கும் இதையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் உன்னுடன் தொடர்பில் வர இப்போது இயலாது என்பதை செய்தியாகப் படிப்பதற்கும், வார்த்தைகளில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்திருந்தால், என் போன்ற வேற்று கிரஹவாஸிதான் நீங்களும்.
செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்து இங்கு வாழ வேண்டுமானால், இப்போது பூமிப்பந்து சிக்கியிருக்கும் ஆபத்துகளை, கேன் வில்லியம்சன் போன்று தவிர்க்க இயலாதவை என்ற தலைப்பின் கீழ் போட்டு அமைதி காத்து வாழ முயலலாம். அல்லது தற்காத்துக் கொள்ளலாம். அறிவை திசை திருப்பி, தவறான ஊகங்கள், புரிதலுக்கு இட்டுச் செல்லும் ஒன்று எப்படி நல்லதாகும்? Facebook ம் இதே கைங்கரியம் செய்கிறது . நான் அதிகம் பயன்படுத்தாததால், அது என் வாயில் விழவில்லை. கைபேசியே கெடுதல்தான். தொலைபேசி ஒரு தொலைத்தொடர்பு சாதனம். இருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ளவருடன் பேச. இப்போ என்ன நடக்கிறது? அடுத்த வீட்டில் உள்ளவரிடம் கூட, போய்ப் பேசுவதில்லை. கைபேசி வழி தொடர்புதான். அதுவும் இளைஞர்கள் ஒரு படி மேல். கைபேசி சிணுங்கின உடன் அதை எடுத்துக் கொண்டு வேறிடம் ஓடுகிறார்கள். இருந்த இடத்தில் இருந்து பேசும் வசதியைத் தொலைத்த தொலைபேசிக்கு, பெயர்மாற்றம் செய்யலாமா? நூறில் தொண்ணூறு பேர் செய்வதால், ஒரு தீமை நன்மை ஆகாது. அதேதான் இதற்கும். எல்லா சாதனங்களையும் அவசியத்திற்குப் பயன்படுத்துகிறோமா அடிமைப்பட்டுப் பயன்படுத்துகிறோமா என்று நம் மனம் சொல்லும். வாட்சப் பயன்படுத்தும் போது ஒரு முறை கூட திருட்டு, குருட்டு யோசனைகள் தீண்டவில்லையானால், நாம் அவசியம் கருதிப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில், அது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே.
No comments:
Post a Comment