எளிமையான மனிதர்கள் பலர் இருப்பை வெளிக்காட்டாது வாழ்கின்றனர். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூமணம் போல அவர்கள் இருப்பு, தானாக வெளிப்பட்டு விடுகிறது. நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் பற்றியும் எழுத விரும்பும் என்னுடைய முதல் பதிவு. பெரிய கார்ப்பரேட் பூதங்களால் விழுங்கப்பட்ட உலகில், நாம் எத்தனை பேர் ஆட்டோ ஓட்டுவதும் ஒரு தொழில்,அதையும் மிகவும் திறம்படச் செய்யலாம் என உணர்கிறோம். தெரியவில்லை.
பதினைந்து வருஷங்களுக்கு முந்தின ஒரு மாலைப் பொழுது.வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை கொட்டப் போகிறது. பள்ளி விடும் நேரம்.என் குழந்தை கார்த்திக் நாலாம் வகுப்பு. பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு வர வேண்டும். புயலும் மழையும் எப்பவும் மனதில் ஒரு அச்சம் கிளப்பும். நம் Reasoning Power எல்லாம் இது போன்ற நேரங்கள் உதவுவதில்லை. மற்றவருக்கு தைரியம், அறிவுரை தருபவர்களில் கூட வெகு சிலரே தாம் அந்த நிலையில் இருந்து அதைச் செய்கிறார்கள். வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. பள்ளிக்குக் கிளம்பி விட்டேன். நல்ல மழை தொடங்கிவிட்டிருந்தது. வகுப்பு வாசலில் நின்று கார்த்திக்கை கூட்டிக் கொண்டு வீடு வந்து விட்டேன். என் குழந்தை பத்திரமாக உள்ளது என்ற எண்ணம் மட்டுமே. எத்தனை சிறு வட்டத்திற்குள் இருந்திருக்கிறேன் என்று இப்போ நினைத்துக் கொள்கிறேன். வாசல் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தால் சொட்டச் சொட்ட நனைந்த உடையுடன் அருள்ஜோதி. கார்த்திக் தினம் பள்ளி செல்லும் ஆட்டோவின் ஓட்டுனர் . முகம் பூரா கலவரம்.
"என்ன, அருள்ஜோதி" என்று நான் தொடங்கும் முன் , அறையில் இருந்து வெளிப்பட்ட கார்த்திக்கைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான். இடி வெளியில் இடிக்கவில்லை. வீட்டிற்குள் இடித்தது. தொடர்ந்து அரைமணி. நான் வாய் திறவாது கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் சொல்லாமல் குழந்தையைக் கூட்டி வந்ததற்காக, insensitive , irresponsible அம்மா என்ற பட்டம். மறுநாளில் இருந்து கார்த்திக்கைக் கூட்டிப் போக தான் தயாரில்லை என்ற முடிவு, எல்லாம் சற்றும் மரியாதை குறையாத ஆனால் தெளிவான உறுதியான குரலில் தெரிவிக்கப்பட்டது. " நான் பேசலாமா", என்று அனுமதி வாங்கி கொண்டு நிதானமாக அவரிடம் சொன்னேன்,"கார்த்திக் தானாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு பள்ளி செல்லும் வரை நீங்கள்தான் அவனைக் கூட்டிப் போக வேண்டும். இனி நான் இன்று செய்த தவறை செய்ய மாட்டேன்". வெளியே மழை நின்றிருந்தது. வீட்டில் ஒலித்த இடியும்தான். அமைதியாகப் பார்த்து விட்டு , "நாளை எட்டு மணிக்கு வரேன் மேடம்" கை கூப்பி வெளியேறினார்.
அன்று அருள்ஜோதியுடன் ஒரு பாசப்பிணைப்பு உருவானது. அவர் இன்னும் உயரம் தொடுவார் என்று தெரிந்தது..எல்லாத் தொழிலும் மரியாதை ஆனது.கஷ்டமான வேளைகளில் கூட, நிலை பிறழ, அவசர முடிவுகள் எடுக்க கூடாது போன்ற பல பாடங்கள் அறிந்தேன். கார்த்திக் வளர்ந்த பின் " நல்ல ஆட்டோ தெரிந்தால் சொல்லுங்கள்" என்ற சிறு பள்ளி குழந்தைகளின் பெற்றோர் பலருக்கு வேறு யாரைக் கை காட்டியிருப்போம்! அவரவர் பிசியாகி விடுகிறோம். பல வருடங்கள் சென்றபின் ஒரு நாள் பள்ளி வழியே சென்ற போது பழைய ஞாபகங்கள் திரைப்படம் போல மனத்திரையில் ஓடியது. " மேடம், ஞாபகம் வெச்சிருக்கீங்களா?" என்ற குரல்.ஒரு பெரிய வேன். அருள்ஜோதிதான். " இப்போ ரொம்ப நல்லாருக்கேன். இன்னும் குழந்தைகளைக் கூட்டிப் போறதுதான் செய்யறேன், ஆனா வேன் வாங்கிட்டேன் மேடம். இன்னும் safety இல்லையா" என்று பவ்யமாக சிரித்தார். அன்று நான் பண்ணியது போல் தப்பு பண்ணினால் மட்டும்தான் கோபம் வரும் போல. "இன்னும் safety இல்லையா" என்ற, பொய் கலப்பற்ற,ஆத்மார்த்தமான வரிதான் அருள்ஜோதி பன்ச். மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.
இன்றும் எங்கள் குடியிருப்புக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வருகிறார். இன்னும் எத்தனையோ ஆட்டோ ,வேன்கள் வருகின்றன.சரியாக ஐந்து நிமிஷம் மட்டுமே இந்த வேன் நிற்கும். ஒரு நாள் நேரம் தப்பாது. குழந்தைகள் நேரம் தப்பினால்,பெற்றோர் அலுவலகம் தாமதமாகப் போக வேண்டியதுதான். தங்கள் மெத்தனத்தினால் அருள்ஜோதியைத் தவற விட்ட பெற்றோர். " கொஞ்சம் வெயிட் பண்ணறானா , திமிர் " என்ற விமர்சனம் தருபவர்கள் உண்டு. அதற்கெல்லாம் காது கொடுத்திருந்தால் உயரம் தொடுவது சாத்தியமில்லை. வாழ்க வளமுடன் அருள்ஜோதி. நாளை கர்ம வீரர் பனானா மணியை சந்திப்போமா?
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment