கே கே நகரில் இருந்து, நாகாத்தம்மன் கோவில் செல்லும் வழியில்,சிவன் பூங்கா எதிரில் இரவு எட்டு மணியில் இருந்து பத்து மணிவரை 2000 பழங்களுடன் ஒரு தள்ளுவண்டி நிற்கும். வாழைப்பழங்கள் மட்டும். அந்தப் பழம் விற்பவர்தான் மணி. நாங்கள் Banana மணி என்போம். சிலைகள் எப்படி காலமாற்றங்களுக்குக் கவலைப் படாது மெரினா கடற்கரையில் நிற்கிறதோ அது போல அவர் ஒரு இரண்டு மணி நேர சிலையோ என நினைத்துக் கொள்வேன். உட்கார நாற்காலி கிடையாது. பாதையிலேயே உட்கார ஒரு மேடான இடம் இருந்தும் உட்கார அவருக்கு நேரம் கிடையாது. எட்டு மணிக்கு வண்டி full . நேரம் செல்லச் செல்ல சீராக, பழங்கள் எண்ணிக்கை குறையும். "நீ கிட்ட இருந்து பார்த்தாயா, புனைந்து , இல்லாததை எல்லாம் சேர்த்து, எழுத வேண்டும் என எழுதுகிறாயா," என்றால் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரம் அந்த வழி சென்றிருக்கிறோம். மணியின் discipline நம்மிடம் இல்லை என எண்ணிக் கொள்வேன். வண்டிகளில் போவோர் சாலையோர கோவில்கள் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல அந்த இடம் தாண்டும் போது மணி வண்டி உள்ளதா எனப் பார்ப்பது எனக்கு அனிச்சைச் செயல். அதனால் நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறொன்றில்லை.
யார் யாரோ பெரிய மனிதர்களையெல்லாம் நேர்காண்கிறார்கள். நேர்காணப் பட எல்லாத் தகுதியும் உள்ளவர்கள் சாலையோர மஹாராஜாக்களே. நாங்கள் அநேகமாக அவரிடம் தினம் பழம் வாங்குவோம். ஒரு நாள் என் கணவரிடம் கூறினேன். "அவர் பெயர், தொலைபேசி எண் கேட்டு வாருங்கள். முடிந்தால் அவரைப் பற்றி விசாரியுங்கள்". த்யாகு வந்து சொன்னார். "பெயர் மணியாம் . தினம், கொண்டு வரும் பழங்களை அநேகமாக விற்று விடுவாராம். வாழைப்பழம் தங்கும் பொருளல்லவே, விற்காவிடில்? என்று கேட்டதற்கு, தனக்கு sure regular customer base உள்ளது " என்றார் . ஆமாம் நாங்களே அவருடைய regular customers தானே?
Business knack ஒன்று உள்ளது. எல்லோரும்" நல்ல "வியாபாரிகள் ஆகி விட முடியாது. நல்ல என்பதில், Good , Efficient , Righteous என்ற பல ஆங்கில சொற்கள் அடக்கம். அது தமிழின் பலமா பலவீனமா? ஆனால் நல்ல என்பதன் ஆங்கில அர்த்தம் எதுவானாலும் மணி நல்ல வ்யாபாரியே. எனக்கு business பற்றிய அறிவு இல்லை. ஆனால் மணியிடம் உள்ள ஏதோ வித்தியாசம் என்னைக் கவர்கிறது. அது என்ன என்று த்யாகுவிடம் business மொழியில் கேட்டறிந்தேன்.விற்பதோ அழுத்தித் தொட்டால் அழுகும் பொருள். என்ன தைரியத்தில் அவ்வளவு பழங்கள் கொள்முதல் செய்கிறார்? வீணாகப் போகும் பொருளுக்கும் சேர்த்து ஒரு மார்ஜின் வைத்து விற்கும் வியாபாரிகள் உண்டு. இவர் அப்படி அல்ல.
வியாபாரத்திற்குத் தேர்ந்தெடுத்த இடம் மிக முக்கியமான ஜங்க்ஷன். ஆனால் வேறு யாருக்கும் தொல்லை அற்ற இடம். மிகச் சரியான விலையில் விற்பதால் ஒரு டசனுக்கு லாபம் குறைவானாலும் அத்தனையும் விற்றுப் போகின்றன. நேர்மைக்கு மக்கள் தரும் விலை அல்லவா அது!! வாங்கும் அனைத்தையும் விற்று விடுவதால் கொள்ளை லாப வியாபாரிகள் பண்ணும் லாபத்தைக் காட்டிலும் அதிக லாபம். பேரம் என்ற பேச்சே கிடையாது. மனசாட்சி உடைய, ஏன் இல்லாத அனைவருக்கும் கூட தெரியும், அதை விடக் குறைவான விலையில் வாங்க முடியாது வேறெங்கும் என. புரியாமல் வீம்பாகப் போனவர்களுக்கு பிற பேராசை வியாபாரிகள் புரிய வைத்து விடுவார்கள். மணிக்கே ஜெயம். இப்படியாக விருக்ஷமாக வளர்ந்துள்ள அவரது Customer Base . Word of mouth என்று சொல்வார்களே அப்படிப் பரவிய நல்லெண்ணம். அனாவசிய பேச்சு கிடையாது. மணியின் கையும் வாங்குபவரின் கையும் மட்டுமே பேசும். யாரும், அடிக்கோடிட்டுச் சொல்கிறேன் யாரும் அவரிடம் விலை கேட்பதில்லை. இப்படி ஒருவர் என் , நம் கவனத்தில் பதியாதிருந்தால்தான் வியப்பு.
மணியிடம் பழம் வாங்கினால்தான் நாள் நிறைவுறும். நடுவில் ஒரு பத்து நாள்கள் அந்த இடம் காலியாக இருந்தது. அத்தனை மின்விளக்குகளுக்கு நடுவிலும் சாலை சோபையற்று இருந்ததாக உணர்ந்தேன். நிஜமாகவே. ஒப்புக்கு சொல்லவில்லை." மணி எங்கே போனார்? இறங்கி சுற்றி உள்ள யாரையாவது கேட்டு வர இயலுமா" என்ற என் தொணதொணப்பு தாங்காது, த்யாகு ரூட்டை மாற்றி விட்டார். நான் ஏமாறுவேனா? ஒரு வாரம் சென்ற பின்,அந்தப்பக்கம் வேலை உருவாக்கிக் கொண்டு அதே சாலையில் சென்றோம். வண்டி நிற்பது தூரத்தில் தெரிந்தது. நலம் விசாரித்து வந்தோம். எல்லாம் நலமாம். இதெல்லாம் செய்தி இல்லை. செய்யும் தொழில் தெய்வம் என்ற உற்சாகம் குறையாத மணியின் இயல்பு. ப்ரயத்தனப் படாது நல்லவராக இருப்பது. லக்ஷங்களில் சம்பாதிப்பவரிடம் கூட தென்படாத அமைதி. முக்கியமாக த்ருப்தி . த்யாகு மூலம்தான் மணியுடன் சம்பாஷணை இது வரை நேரே பேசியதில்லை. மனது வாழ்த்த நேரில் பேசத் தேவையா என்ன? வாழ்க வளமுடன் மணி.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment