இது ரமண பகவான் கேட்ட நான் யார் அல்ல. அதற்கும் பல படிகள் முற்பட்டது. பெரும்பாலும், அடிப்படை விஷயங்களிலேயே நமக்கு நம் நிலைப்பாடுகள் புரிவதில்லை. மனிதர்களால் சூழப்பட்டு இருக்கிறேன். இருக்கிறோம். ஒவ்வொருவரிடம் இருந்தும் அதிர்வுகள் எடுத்துக் கொள்கிறோம். அவை நல்லனவாகவும் இருக்கலாம். அல்லாதனவாகவும் இருக்கலாம். அந்த அதிர்வுகளின் கலவைதான் நான் என்றால், நான் என் தனித்துவம் இழந்த ஜீவன். அந்த நிலை மகிழ்ச்சி ஆன ஒன்றல்ல. ஆனால் தனித் தன்மையுடன் இருப்பதென்றால் ஒரு போருக்குத் தயாராக வேண்டும். போர் என்றால் இரண்டு. இரண்டு பேர். இரண்டு பக்கம். இது நம் அகத்துக்கும் புறத்துக்கும் நடக்கும் போர். அகம் வென்றால் மகிழ்ச்சி. போர் முடிந்தது. புறம் வென்றால் துன்பம். மறுபடி படையெடுப்பு நிகழும். எப்போதும் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். எது வசதி?
எனக்கு முந்தின தலைமுறையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் சந்தோஷங்கள்,வலிகள் ( உடல் வலி,மன வலி ரெண்டும்தான்) , எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள் எல்லாம் பாடம். அனுபவ பாடம். தியரி அல்ல. "இப்போதாவது தயாராகு, காலம் தாழ்த்தாதே" என்ற எச்சரிக்கை மணி. ஐம்பது என்பது குத்திட்டு நிற்கும் நாணயம் போன்றதொரு வயதல்லவோ? இரண்டு பக்கத்தையும் காண இயலும். கடக்கப் போகும் காலத்தை விட கடந்து விட்ட காலம் அதிகம் என்ற நிதர்சனம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அப்பட்டமாய்த் தெரியும் வயது. பெற்றோர், ஆசிரியர்கள், கணவன், மனைவி,குடும்பம், மேலதிகாரி, நண்பர்கள், அக்கம்பக்கம், தெரிந்தவர், தெரியாதவர், எல்லாரும் அல்லவோ சேர்ந்து நம் வாழ்வை நடத்தினார்கள் !!! குழந்தை நடை பயிலத் துவங்கும் போது கையைப் பிடித்துக் கொள்கிறது. தளர்நடை மாறின பின் தனியே ஓடுகிறது. வளர்ந்த குழந்தையின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஏதோ பிரச்சினை என்று பொருள்.
எதற்கு, நான் யாரில் குழந்தை வந்தது என்று மறந்து போகும் அளவு இடைவெளி விட்டுத் தொடருகிறேன். எனக்கு முந்தின தலைமுறையைப் பார்த்துக் கொண்டுள்ளதன் சலனங்கள். பயம், அழுகை, இயலாமை . இவ்வாறு கடைசிக் காலங்கள் நகரவா விழுந்து விழுந்து உழைத்தோம்! பொருள் ஈட்டினோம்! சமைத்தோம்! சாப்பிட்டோம்! விட்டுப் போகவா ஒட்டி உறவாடினோம்! வங்கியில் 10 லக்ஷங்கள் வைத்துக் கொண்டு அதில் எட்டு லக்ஷத்தை விட்டுப் போய் விடுவோம் என்றால் அது எப்படி மகிழ்ச்சி? எண்பது வயதில் மோர் சாதம் மட்டுமே செரிக்கும் என்றால் விதம் விதமாய் சமைத்து சாப்பிட்டு சுவை நரம்புகளை வளர்க்க தேவை என்ன? நாம் உருகி உருகி அன்பு செலுத்துபவர்களை என்ன செய்தாலும் பிடித்து வைத்துக் கொள்ள இயலாதெனில் உணர்வுகளின் பயன் என்ன? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் தொடர்ந்து மனித குலம் அதையே செய்கிறது. அது தவறா? அதுதான் துன்பமா? எண்ணங்கள் நன்றா எண்ணங்கள் அற்ற நிலை நல்லதா? என்ன பண்ணலாம்? இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் தினப்படி வாழ்வு சுவை தருமா? தராது. அப்போ யோசிக்க வேண்டாமா? அதில்லை.
பணம், வாழ்வை ஓட்ட தேவையான ஒன்றாக மட்டும் கருதப்படும் இடத்தில் துன்பமில்லை. பதட்டமில்லை. ருசிக்கு இன்றி பசிக்காக சாப்பிட்டால் துன்பமில்லை. பதட்டமில்லை. எப்படியும் ஒரு நாள் விலகப்போகும் உறவை, உயிரை ஒரு அளவுக்கு மேல் மனதில் சுமந்து, சுமைதாங்கியின் வேலையை செய்யாதிருந்தால் துன்பமில்லை. பதட்டமில்லை. எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்த மனதிற்கு வயது கூடினால் இயலாமை வரும் என்பது புரிவதில்லை. நம்மைத் தொடாத ஒன்றை உணர முயற்சிக்க மறுக்கிறோம். தொடும் போது பயம் கொள்கிறோம். முதுமையை சொல்கிறேன். முதல் மாணவனாக இருக்க, பொருள் ஈட்ட , வாழ்க்கைப் போட்டியில் முந்தி இருக்க கற்றுத் தரப் படும் பாடங்கள், வாழ்வின் இரண்டாம் இன்னிங்சை நடத்த துளியும் உதவுவதில்லை. வாழ்வின் முதல் பாதியை எல்லோரும் நடத்தி விடலாம். உடம்பில் வலு உள்ளது. திமிரும் உள்ளது. தப்பாக சொல்லவில்லை. என்னால் முடியும் என்ற நல்ல திமிர். தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொள்ளும், உலகம் தரும் நிர்பந்தங்கள் உள்ளன.ஆனால் இரண்டாம் பாதியில் எல்லாம் மைனஸ். நீரோட்டத்திற்கு எதிர் திசையில் துடுப்பு போடுவதல்லவோ கஷ்டம்?
இப்போது மறுபடி முதல் பத்திக்கு வருகிறேன். தனித்துவம். நம் வாழ்வின் பொறுப்பை நாம் எடுத்துக் கொள்வது. வாழ்வில் நிரந்தரமானது என ஏதும் இல்லை. ஆனால் ஒப்பிட்டால் ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று நீடித்திருக்கும் என்று சில உண்டு. செய்தித் தாளின் வாழ்வு ஒரு நாள். பழம் இரண்டு நாள். இப்படியே வாரம்,மாதம்,வருஷம் தாங்கும் பொருள்கள் உண்டு. காலத்தை வென்ற சரித்திரச் சின்னங்களும் உண்டு. ஆனால் எல்லாம் மறையும் காலமும் உண்டு. நம் கவனம் சற்றே நீடித்த பொருள்கள்,விஷயங்களின் மீது நினைவு தெரிந்த நாள் முதல் இருப்பது தேவையற்ற நிகழ்வுகளுக்கு, மனிதர்களுக்கு நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்கும். போர் முடியும். அகம் வெல்லும். அமைதி வரும். பயம் போகும். ஏமாற்றம் போகும். கண்ணீர் நிற்கும். நான் யார் புலப்படும். அதற்கப்புறம் ரமண பகவானைத் துணைக்கழைத்து உண்மையான நான் யார் தெரிந்து கொள்ள முதல் அடியை எடுத்து வைக்கலாம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment