தினப்படி வாசலில் நாம் அழியாத கோலங்கள் இடுவதில்லை. இந்தத் தலைமுறை கோலங்கள் இடுவதில்லை என்பது வேறு விஷயம். ஸ்டிக்கர் கோலம், ஸ்டிக்கர் பொட்டு , ரெடிமேட் உடை , இன்ஸ்டன்ட் உணவுகள், கோவிலில் மணி அடிக்கக் கூட மின்கருவி என்ற அவசர யுகம். அதை விடுங்கள். தலைப்பிற்கு வருவோம். தினம் வாசலில் போடும் கோலம், ஒரு நாளுக்கானது. மறு நாள்,வேறு புள்ளி,வேறு கோலம். ஒரு நாள் கூத்தாக செய்யும் செயல்களில் தவறுகள் நேர்ந்தால், அழித்துத் திருத்தலாம். அதாவது திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனாலும் சொல்கிறேன், அழிக்காமல்,தப்பு இல்லாமல் கோலம் இடுவது நன்று. கவனம் சிதறாமல் கோலம் இடுவது நன்று. அவ்வாறு வாழ்வது அதனினும் நன்று. அழியாத கோலங்கள் எங்கு இடுவோம்? கோவில்களில்? திருவிழாக்கள் சமயம்?பெயிண்ட்டால் ? என்ன தெரிகிறது? அழியாத,சற்றே நிலையான விஷயங்கள் சிறப்பு வாய்ந்தவை. லேசில் அழிக்க முடியாத கோலங்களை உரிய இடத்தில்தான் இடலாம். ஆனால் வாய் எனும் ஆயுதம் கொண்டு மக்கள் மனம் என்ற மைதானத்தில் பெயிண்ட் கோலம் போன்று சுடுசொற்களால் கோலம் வரைவதை சகஜமாக செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் தப்பு கூட இல்லை. ஒரு ஸ்வபாவம்.
நம் ஒவ்வொருவர் மனதிலும் அழியாத கோலங்கள் உண்டு. நாமும் லேசுப்பட்டவர் இல்லை. பெயிண்டும் தூரிகையுமாய் சுற்றுவோர்தான். தூரிகையை உபயோகிக்க ஒரு முறைக்கிருமுறை யோசித்தால் நல்லவர்கள். இல்லையெனில் பொல்லாதவர்கள். சில நேரம் ஒரு கோடு வரைந்து விட்டு உடனே அழிக்க முயல்வோம். முடியாது. பக்கத்தில் வேறு கோடு இழுத்து கோலத்தை சரி பண்ணி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் இல்லை. கடுமையான பேச்சும், அவசரமாகவே எடுக்கும் முடிவுகளும் எனக்கு வேண்டாமே. நாளை சரியாகப் போகிற ஒன்றைப் பற்றிய தவறான யூகங்களும் , நாளை தவறாகப் போகிற ஒன்றைப் பற்றின வீண் ஜம்பங்களும் தவிர்க்க உடலுடன் சேர்ந்து உள்ளமும் வளர வேண்டும். வழக்கம் போல் போஸ்ட்டின் வித்து சுற்றி நடக்கும் , நடந்த நிகழ்வே. அதற்கு விரிவாக்கம் தர எனக்கு பயம் இல்லை. ஆனால் விருப்பம் இல்லை. உங்களுக்கு அறிந்து கொள்வதில் லாபமும் இல்லை. எனக்கொரு லாபம் உண்டு. பாடம் உண்டு. தூரிகையுடன் அழியாத தப்புக் கோலம் இட வருபவரைக் கண்டால் என் மனக்கோவில் மூடிக் .கொள்ளும். தன்னைக் காத்துக் கொள்ளும்.
நான் கடுமையானவர்கள் நிலையில் இருந்து கொண்டு யோசிக்கணும் என்று என் நலம் விழைவோர் கூறுகிறார்கள். ஏன்? எதற்காக? பகவான் கிருஷ்ணர் குருக்ஷேத்திர போருக்கு முன் அர்ஜுனன் மனநிலையில் இருந்து சிந்தித்திருந்தால் அது கீதைக்கு வழிகோலுமா? பலவீனத்தின் மறுபக்கம் கடுமை. ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டும் இல்லை, எனக்கும் பலவீனம் மரணமே. கடுமை காட்டுபவர் நிலையில் இருந்து யோசித்தால், நான் தவறின் பக்கம் நிற்கிறேன். அது தேவை இல்லை. நிஜப்போரில் அர்ஜுனன் வில்லெடுத்தான். மனப்போரில் கதவை மூடுவதுதான் சரி என எனக்குள் உள்ள கடவுள் சொல்கிறார். அன்பிருக்கும் இடமே சிவன் இருக்கும் இடம். சிவன் உள்ள இடத்தில், கடுமைக்கிடம் இல்லை. பேசலாம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER LEADS
No comments:
Post a Comment